26

26

டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு !

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோல்வியை ஏற்க மறுத்தார். இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம்.

குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும். நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம் என்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

“அரச அதிகாரிகளின் தவறுகளால் அரசியல்வாதிகளான எங்களை மக்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“அரச அதிகாரிகளின் தவறுகளால் அரசியல்வாதிகளான எங்களை மக்கள் திட்டித் தீர்க்கிறார்கள்.”
என  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடல் இன்று (26) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தயாரிக்கப்பட்ட சில நகர திட்டங்கள் புதுப்பித்த நிலையில் உள்ளன என்று அங்கு சுட்டிக்காட்டினார்.

அது பொருந்தாது என்றும் எனவே, அந்த திட்டங்கள் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட்டு, நகர வளர்ச்சியும் தற்போதையதாக இருக்க வேண்டும் என்பதோடு உலகுக்கு ஏற்றவாறும் கதிர்காமம் சிறப்பு நகரங்கள், அந்த நகரங்களின் வரலாற்று மதிப்பை பாதுகாக்க அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சில அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து இந்தத் திட்டங்களை உருவாக்குகிறார்கள். அந்த திட்டங்கள் நிலம் பொருந்தாத பல சூழ்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. ஆனால் இதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் மீது அல்லது அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதிகாரிகளின் பணியால் தான் அரசியல்வாதிகளாகிய எங்களை ஏச்சுகின்ற நிலைமையே ஏற்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

“கதிர்காமம் புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான தேவையான வசதிகள் வழங்குவதைப் போல புனித பூமியின் மாண்பை பாதுகாப்பதில் உங்களுடைய திட்டமிடல் முக்கியம்” என்று திரு. ரணதுங்க இங்கு மேலும் தெரிவித்தார்.

கதிர்காமம் புனித பூமி தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக நகரில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது. கதிர்காமம் புனித பூமியின் அபிவிருத்திக்கான கூட்டு திட்டத்தை செயல்படுத்தவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.

நடமாடும் விலைமாது போல் மனைவியை நடிக்கச் செய்து வழிப்பறி – கணவன், மனைவி உட்பட நால்வர் கைது !

நடமாடும் விலைமாது போல் மனைவியை நடிக்கச் செய்து பல்வேறு நபர்களை ஏமாற்றி, வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட நால்வர் மொரட்டுவை மோதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் ஒருவரை விசாரணை செய்தபோது, கொள்ளையில் ஈடுபட்ட பெண், அவரது கணவர் நண்பர் மற்றும் நண்பரின் தாயார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட பெறுமதியான பொருட்களை அடகு வைத்து பணத்தைப் பெறச் சென்றபோதே சந்தேகநபர் ஒருவரின் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாருக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஐஸ் போதைக்கு அடிமையான ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 12 ஆண்டுகளின் பின் விடுதலை !

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியொருவர் 12 வருடங்களின் பின்னர், மன்னார் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2011 ஜூன் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 44 வயதான சிவசுப்ரமணியம் தில்லைராஜ் என்பவரே இன்று(26) விடுவிக்கப்பட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டு லயன் எயார் விமானத்தை இரணைதீவிலிருந்து தாக்கியமை அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் குறித்த விமானத்தில் பயணித்த 7 வௌிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 56 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு இன்று(26) மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி M.M.M.நிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுவித்து விடுவிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த அவர் இதுவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் நடந்த கொலைவெறி வாள்வெட்டு – சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்த மூவர் !

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த மூவர் சட்டத்தரணி ஊடாக நேற்று (25) சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்..

இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடிருந்தனர்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளனர்.

மேலும் நான்கு பேர் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர் எனவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்தவர் சுமந்திரன் தான் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் எம்.ஏ.சுமந்திரன் என்ற விடயம் பகிரங்கமான விடயம் என ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்றையதினம் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

அறிமுக நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

29 வயது கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மரணதண்டனை கைதி – வெலிக்கடை சிறைச்சாலையில் சம்பவம்!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட கைதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி, ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் பொரளை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

29 வயதான கைதி உடல் தேவைகளுக்காக கழிவறைக்குச் சென்றபோது, ​​52 வயதான கைதி பலவந்தமாக கழிவறைக்குள் நுழைந்து 29 வயது கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை காவல்துறையினர், துஷ்பிரயோக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறிய 45 வயது கைதி ஒருவரின் வாக்குமூலங்களையும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கைதியின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் ஜானக பியதர்ஷன விதானகேவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதுகெலும்பு உள்ள துணிவான அரசியல்வாதி.” – இரா.சாணக்கியன் பாராட்டு!

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராயிருங்கள்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ; சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில்ராஜபக்ஸ அவர்கள் யாழில் வீணைச்சின்னத்திலும் கிழக்கில் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் பொதுஜன பெரமுன போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.

படகு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டின் முகவராகவே உள்ளது என்பதை நாங்கள் கடந்த காலத்தில் தெரிவித்துவருகின்றோம்.

பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் என்பவர் மூன்று பகுதிகளில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்த செய்திவெளிவந்திருந்தது.ஆனால் வேட்பு மனுக்கான கட்டுப்பணத்தினை அவர் செலுத்தியிருந்தபோதிலும் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

அப்போதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.அன்று எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் பசில் ராஜபக்ஸ அவர்கள் படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டினை நாசமாக்கிய பொதுஜன பெரமுன கட்சி,நாட்டின் விவசாயிகளை நடுத்தெருவில் கொண்டுவந்துவிட்ட கட்சி,எரிபொருள் தட்டுப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தியவர்கள்,எங்களது பிரதேசத்திலிருந்த மண் வளங்களை கொள்ளையிட்டவர்கள் இந்த பொதுஜன பெரமுனவினை சோந்தவர்கள்.

இவ்வாறு பொதுஜன பெரமுன என்ற கட்சியின் ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடவேண்டிய சூழ்நிலையில் அக்கட்சியின் பிரதமர்து பதவியை இராஜினாசெய்த நிலையிலும் அதன் தேசிய அமைப்பாளர் அமெரிக்க சென்று ஒழிந்த சூழ்நிலையினையும் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்தது.
பொதுஜன பெரமுனவின் காரியாலம் மட்டக்களப்பு உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்களினால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் பொதுஜன பெரமுன என்ற கட்சி இங்கு போட்டியிட முடியாத நிலையில் மொட்டு சின்னத்திற்கு பதிலாக படகு சின்னத்தில் களமிறங்கி இந்த மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது என்றால் அதனை தைரியமாக சொல்லுங்கள்.கட்சியின் செயலாளர் சொல்கின்றார் தனித்து படகில் போட்டியிடுகின்றோம் என்று ஆனால் எஜமான பசில் ராஜபக்ஸ கூறுகின்றார் மொட்டு படகில் போட்டிபோடுகின்றது என்று கூறுகின்றார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராகயிருங்கள்.டக்ளஸ் தேவானந்தா தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி என்று தைரியமாக ஏற்றுக்கொள்கின்றார்.

ஆனால் நீங்கள் மட்டும் இங்கு இரட்டைவேடம் போடுகீன்றீர்கள்.மட்டக்களப்பு மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியும் என்று நினைக்கின்றீர்களா?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களுக்கு போட்டியில்லை.ஆனால் மாவட்ட மக்களை தொடர்ந்த நீங்கள் ஏமாற்றமுடியாது.நேற்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இழந்துள்ளது.

இது முதலாவது அடியாகும்.நாங்கள் நினைத்திருந்தால் வாகரையினையும் கைப்பற்றியிருப்போம்.ஆனால் அந்த மக்களால் நீங்கள் துரத்தியடிக்கப்படவேண்டும் என்பதற்காக விட்டிருக்கின்றோம்.வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பிச்சையெடுப்பதுபோன்று வேட்பாளர்களை தேடி அலைகின்றனர்.” என தெரிவித்தார்.

இன்று முதல் மின்வெட்டு இல்லை !

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.