27

27

15 வயது மகளை வர்த்தகர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு பணத்துக்காக விற்பனை செய்த தாய் !

15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உட்பட பல்வேறு நபர்களுக்கு பணத்துக்காக விற்பனை செய்தார் எனக் கூறப்படும் சிறுமியின் தாயும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறுமியை பணத்துக்காக அழைத்துச் சென்ற வேறு நபர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறுமியொருவர் வயோதிபர்களுக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின்பேரில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் கமலா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியை வயதானவர்களுக்கு விற்பனை செய்து ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்று அவருடன் உடலுறவு கொண்டமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 400 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவுக்காக சுமார் 4100 பேர் போட்டி !

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாணமாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தலில் இம்முறை போட்டியிடுகின்ற கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருக்கிற செயற்பாடு முடிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.

13 அரசியல் கட்சிகள் சார்பில் 135 வேட்புமனுக்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பில் 15 வேட்புமனுக்களுமாக 150 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு தேர்தலுக்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ் மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளுராட்சி மன்றசட்டத்திற்கிணங்க அந்தந்த வட்டாரங்களிலே வாக்குகள் எண்ணப்பட்டு வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளோம் அந்த வகையிலே 243 வாக்கு எணணும் நிலையங்கள் யாழ் மாவட்டம் முழுவதுமாக அமைக்கப்படவுள்ளன.

எனவே அந்த 243 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப் பட்டு வட்டார தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

மொத்தமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும் கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 வேட்பாளர்களுமாக 402 உறுப்பினர்கள் 17 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிஇருக்கின்றது.

இந்த 402 உறுப்பினர்கள் தெரிவிற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4111வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் 13 கட்சிகள் சார்பில் 3686 வேட்பாளர்களும் 15 சுயேட்சை குழுக்கள் சார்பாக 425 வேட்பாளர்களுமாக 4111 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளார்கள் இதன் அடிப்படையில் மொத்த வாக்காளர் தொகையிலேயே 0.85 வீதமான வேட்பாளர்கள் அவர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை – பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால – நீதிபதி செய்த செயல் !

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை இன்று இடம்பெற்ற வேளையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்ததை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கண்டித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் பிரதிவாதி கூண்டில் ஏறியதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் அருட்தந்தை சிரில் காமினி உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கண்டிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏறாது, அதற்கு வெளியே நின்றதை அவதானித்த முறைப்பாட்டு தரப்பு சட்டத்தரணி ரியென்சி ஹர்சகுலரத்ன நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்றார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தமது கட்சிக்காரர் சார்பில் தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, எதிர்கால செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளதென தெரிவித்தார்.

எனவே, அவர் சாட்சி கூண்டில் ஏற வேண்டிய அவசியமில்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன மீதான வழக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதில்லை என அறிவித்துள்ள போதும், பிரதிவாதி, கூண்டில் ஏற வேண்டியதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை என்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குறிப்பிட்டார். இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சாட்சிகூண்டில் ஏறியுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் மார்ச் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை – மனைவி , மாமனார் உட்பட 11 பேர் கைது !

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார்(மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவர் கடந்த 21ஆம் திகதி இரவு தனது கராஜில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கியுள்ளது.

தாக்குதலாளிகளிடம் இருந்து அவர் தப்பியோடிய போது, அவரை வீடு வரை துரத்தி சென்று, வீட்டு வாசலில் வைத்து மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலையான நபரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும், அதனால் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது வாகன திருத்தகத்தில் (கராஜ்) தங்கி இருந்துள்ளார் எனவும் தெரிய வந்திருந்தது.

அதன் அடிப்படையில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , கொலையானவரின் மனைவியும், மாமனாருமாக இணைந்து திட்டம் தீட்டி வேறு நபர்கள் மூலம் குறித்த நபரை படுகொலை செய்துள்ளனர் என கண்டறிந்த நிலையில் , மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாய் வெளிநாட்டில் – 13 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய தந்தை !

தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன் குழந்தையைப் பெற்றெடுக்குமாறு வற்புறுத்திய தந்தையொருவருக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் அவருக்கு நேற்று (26) இந்த தண்டனையை விதித்தார்.

அதன்போது, பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றவாளிக்கு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தாயார் வேலைவாய்ப்புக்கான குவைத்துக்கு சென்றிருந்த வேளையில் 13 வயதாக சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமி தனது தந்தை மற்றும் தனது இரண்டு உடன்பிறப்புகளுடன் வசித்துவந்த நிலையில், தனது தந்தையினால் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடையால் பாதிக்கப்படும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் !

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக இலங்கை மின்சார சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“4.1 பில்லியன் ரூபாய் கிடைத்தால் உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை தடை செய்யாது இருப்போம்.” – மின்சார சபை

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமல் இருக்க முடியாது என்று இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.

அவ்வாறு மின்வெட்டினை அமுலாக்காது இருக்க வேண்டுமாக இருந்தால், அதற்கான கிரயத்தை சமாளிப்பதற்கான நிதி வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி வழங்கப்படாமல், மின்சார தடையை இடைநிறுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காதிருக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது.

ஆனால் நேற்றும் நாட்டில் பரவலாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, உறுதிபாட்டை மீறி மின்தடை அமுலாக்கப்படுமாக இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார சபையை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக  கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் தலைவர் இந்த காலப்பகுதியில் மின்தடையை நிறுத்துவதாக இருந்தால், அதற்கு 4.1 பில்லியன் ரூபாய் மேலதிக தேவையாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர தினத்திற்காக மலர் மாலைக்கு 97 ஆயிரம் ரூபா. தேசிய கீதத்தை பாட 18 லட்சம் ரூபா எதற்கு..? – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நடைபெறவுள்ள 75வது சுதந்திர தின செலவுகளை குறைத்து அதை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சுதந்திர தின கொண்டாட்ட வேலைத்திட்டங்கள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

மேலும் சுதந்திர தினத்தை கொண்டாட ஒதுக்கப்பட்டுள்ள நிதி சம்பந்தமாக மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு இருப்பதால் அது தொடர்பில்  கவனம் செலுத்தி செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

“சில செலவு மதிப்பீடுகள் குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். டி.எஸ் சேனாநாயக்கவுக்கு மலர் மாலை அணிவிக்க 97 ஆயிரம் ரூபா ஐக்கிய தேசியக்கட்சி செலவு செய்தது.

எப்படி 97 ஆயிரம் ரூபா செலவாகும் என்பது எனக்கு தெரியாது. தேசிய கீதத்தை பாட 18 லட்சம் ரூபா கேட்டுள்ளனர். நாங்கள் கடந்த காலங்களில் போக்குவரத்து செலவு மற்றும் உணவை வழங்கினோம்.

செயலாளர் செலவுகள் பற்றி பார்க்க வேண்டும். நான் ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.கலை, பண்பாட்டு பல்கலைக்கழகத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதற்கு தேவையான பணத்தை அவர்களே தேடிக்கொள்கின்றனர். நாங்கள் தாமரை தடாகம் அரங்கத்தை மாத்திரம் இலவசமாக வழங்குகிறோம். இப்படி வேலைகளை செய்ய வேண்டும்.75 வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.

இதனை செய்யவில்லை என்றால் நாட்டுக்கு சரியில்லை. சுதந்திர தினத்தை கொண்டாட பணம் இல்லை என்று உலகம் கூறும். முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க வேண்டுமாயின் இவ்வாறான வேலைகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.