February

February

மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபையில் கலந்துரையாடல்!

யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம் )(செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, மாநகர சபையின் ஆணையாளர், மாநகர சபையின் பொறியியலாளர்கள், மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன், தொழில்நுட்பவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்
குறிப்பாக வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அழிக்கப்படுகின்றன.

எனினும், யாழ்ப்பாண வைத்தியசாலையானது, யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன.

எனவே அந்த கழிவுகளை யாழ்ப்பாண மாநகரத்துக்குட்பட்ட கோம்பயன் மணல் இந்து மயானப் பகுதியில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அதனை அழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

“அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பான தேசிய உரையாடலை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது.” – விக்டோரியா நூலாண்ட்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையைப் காண அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.

இன்று விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியைப் பெறுவதற்கு சீனா வழங்கும் கடன் உத்தரவாதம் போதாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக IMF தரநிலைகளுக்கு பொறுத்தமான நம்பகமான மற்றும் குறிப்பிட்ட உத்தரவாதத்தை பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை இலங்கை மிக விரைவில் பெறும் என எதிர்பார்ப்பதாக உதவி இராஜாங்கச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது எனவும்  அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் “இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத நேரம் இது. மார்ச் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பதும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அவர்களின் எதிர்காலத்திற்காக குரல் கொடுப்பதும் அதில் அடங்கும்.

நல்லிணக்கம் தொடர்பான தேசிய உரையாடலை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது.“ என அவர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் – உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா கோரிக்கை!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா செய்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 42வது அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, உலகளாவிய கால ஆய்வு செயல்முறையின் கீழ் அடுத்த கட்ட கடப்பாடுகளை மேற்கொள்ள இலங்கை தயாராகி வரும் நிலையில், PTA ஐ மாற்றுவது உட்பட பல கொள்கை நடவடிக்கைகள் கவனிக்கப்பட உள்ளதாக சப்ரி உறுதியளித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கைச்சாத்திட்ட எந்த உடன்படிக்கையையும் நான் மதிக்க மாட்டேன்.” – சஜித் பிரேமதாச

மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டியது அவசியம். ஆனால் ஒப்பந்தங்கள் நேராக இருக்க வேண்டும். அத்தகைய ஒப்பந்தங்கள் மாத்திரமே தேசத்திற்கு நன்மை பயக்கும்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு அனைத்தையும் செய்து வருகின்றது.  எந்தவொரு நிபந்தனைகளுக்கும் இணங்கவும் அவர்கள் தயாராகவுள்ளனர்.

தேசத்தின் குடிமக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் மதிக்க எனது  கட்சி கடமைப்பட்டிருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலனுக்காக 13 ஆவது திருத்தத்துக்கு ஜே.வி.பி முழுமையாக ஆதரவு வழங்கும் – அனுர குமார திஸாநாயக்க

மாகாண சபை முறைமைக்கு ஜே.வி.பி ஆதரவளிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறித்த விடயத்தினை கூறியுள்ளார்.

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நேரம், சிங்கள அரசியல்வாதிகளுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பேச்சு நடந்து இணக்கப்பாடான சூழலில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நோக்கத்திற்காக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது நிலைமை மாறி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திறமையற்ற அரச ஊழியர்கள் தொழிலிருந்து நீக்கப்படுவார்கள் – பந்துல குணவர்த்தன

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார்.

இந்த சுய ஓய்வு பொறிமுறையின் மூலம் திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து திணைக்களங்களிலும் தமது செலவினங்களைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், திறைசேரியின் சுற்றறிக்கைகளுக்கு அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் கட்டுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரச சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும், குறிப்பிட்ட அரச நிறுவனத்தில் உள்ள வெற்றிடங்கள் தற்போதுள்ள அரச துறை நிறுவனங்களினால் நிரப்பப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உதாரணமாக, புதிதாக 29,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பரீட்சை மூலம் அரசாங்கத் துறையின் உற்சாகமான பணியாளர்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.

ஜனவரி 31ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த சுருக்க அறிக்கையை வெளியிட்ட அவர், சுற்றுலாத் துறையின் ஊக்கத்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, 2022 ஜனவரியில் 82,327 சுற்றுலாப் பயணிகளும், 2023 ஜனவரியில் 102,545 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

2022 இல் மொத்தம் 719,978 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

அதேசமயம், கடந்த ஆண்டு பெப்ரவரியில் 96,507பேரும் மார்ச் மாதத்தில் 106,500 பேரும், ஏப்ரலில் 62,980 பேரும், மே மாதம் 30,207 பேரும், ஜூன் மாதம் 32,856 பேரும், ஜூன் மாதம் 47,293 பேரும், ஜூலை மாதம் 47,293 பேரும், ஓகஸ்ட் மாதம் 37,760 பேரும் நவம்பரில் 59,759 பேரும், டிசம்பரில் 91,961 பேருமாக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

“புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது. தனித்து போராடுவேன்.”- அட்மிரல் சரத் வீரசேகர

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்கலாம். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாகாண சபை தேர்தல் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாக்கவில்லை.மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக மாகாண சபை தேர்தலை பிற்போட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் கூட்டமைப்பினர் உண்மை நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.  அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்; அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வலுவற்றதாகி விடும் என குறிப்பிடும் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.தமிழ் மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கபோவதில்லை. ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் போது அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு ஆகியவற்றை எதிர்த்து பெப்ரவரி மாதம் எதிர்ப்பு மாதமாக அறிவிப்பு!

இன்று(01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஆர்ப்பாட்ட மாதமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்ட மாதம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர்  கருத்து தெரிவித்தார்.

அதற்கமைய, அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக மதிய போசன நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற வரி விதிப்பு காரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஐம்பதுக்கும் அதிகமான மின் பொறியியலாளர்கள் தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மின் பொறியலாளர் சங்கத்தின் இணைச்செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி – தடுக்க உடனடி நடவடிக்கை!

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நேற்று (31) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளால் அரசாங்கம் பாரியளவு வரி வருமானத்தை இழக்கும் எனத் தெரிவித்தார்.

சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தொலைபேசிகளின் IMEI எண்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைபேசிகள் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சட்ட விரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கையொன்றை வழங்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.