03

03

பல்கலைக்கழக மாணவியை சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆனந்தம் கிரியேசன் ஆனந்தராஜவுக்கு 30 மாதங்கள் சிறை!!!

பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.

அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.

பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.

2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.

சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.

அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.

“75 ஆவது சுதந்திர தினம் தமிழருக்கு கரிநாள்.” – ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய சி.வி. விக்கி!

“நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.”  என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே இதனை அவர்கள் பார்க்கின்றார்கள்.

மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன் அவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாடிய பிறகே இந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.

பெப்ரவரி 4ஆம் திகதியன்று வடக்கு கிழக்கு தழுவிய வர்த்தக சமூகத்தினர், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழில் புறக்கணிப்பிலும் முழுமையான கடையடைப்பிலும் ஈடுபட உள்ளனர்.

எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தினுள் இருந்து பெரும்பான்மையின ஆதிக்கத்தினுள் இந்நாடு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியன்று சென்றமையை சுட்டிக்காட்டும் நாளாக இந்த நாள் அமைகின்றது.

ஒற்றையாட்சி மூலம் சிங்களப் பெரும்பான்மையினர் பெற்ற அரசியல் ஆதிக்கத்தை கடந்த 75 ஆண்டுகளாக சிங்கள அரசியல்வாதிகள் கட்டிக்காத்து வருகின்றனர்.

தந்திரமாக அவர்கள் பெற்றுக்கொண்ட ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள்.

அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி நான்காம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம்” – என்றார்.

இதேநேரம் கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய போது இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக ராஜபக்சர்களால் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அமர்த்தபட்டார். எதிர்க்கட்சி உட்பட பல சிங்கள தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை எதிர்த்தனர். குறிப்பாக மக்கள் ஆணையை பெற்று பாராளுமன்றத்திற்கு கூட நேரடியாக தெரிவு செய்யப்படாத ஐக்கிய தேசியக் கட்சியினுடைய உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கொடுப்பது என்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டி இருந்தது. இப்படியான நிலையில் சில பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் சி.வி. விக்னேஸ்வரன் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தன்னுடைய முழுமையான ஆதரவையும் வழங்கியிருந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சனைக்கு இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பு முழுமையான தீர்வு தருவதாக கூறி வந்த நிலையில் இதுவரையிலும் எந்த தீர்வும் அவரால் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிப்பதாக சிவி விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் இன விடுதலையே இலக்கு.” – இரா.சாணக்கியன்

“தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தற்போது பொருளாதாரச் சுதந்திரமே மறுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களாகிய எமக்கு ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியில் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“75ஆவது சுதந்திர தினத்தினைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு இருள் சூழ்ந்த நாளாகும். போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கான இன விடுதலையே எமக்கான ஒரே இலக்காக அமைந்துள்ளது. 75 ஆண்டுகளாக தமிழர்களாகிய எமக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தற்போது பொருளாதாரச் சுதந்திரமே மறுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தமிழர்களாகிய எமக்கு ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியில் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே எமக்கு இந்த நாட்டில் மறுக்கப்பட்டுள்ள சுதந்திரங்களுடன் சம அந்தஸ்தும் கூட மறுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், 13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயமாகும். எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த 13 திருத்தச் சட்டத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும்.

எனவே மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் மூலமே எமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும்.

எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடான தீர்வு என்பது சாத்தியமற்றதாகும். நாம் எமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் கட்டப் பிரஜைகளாகவே இருக்கின்றோம்.

எனவே தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது. எமக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை.

எனவே இந்த விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்ப்பதற்கு நாம் பல வேலைத்திட்டங்களை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம். இந்த சுதந்திர தினமானது எமக்கு இருள் தினமாகும். எனவே நாம் எமது உரிமைகளை நாம் போராடியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த தினத்தில் நாம் எமது விடுதலைக்காகப் போராடுவோம் என சபதம் எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இருள் தினம் பெப்ரவரி நான்காம் திகதி எனும் தலைப்பில் நாம் நாளை கல்லடிப் பாலத்திற்கு அருகில் முன்னெடுக்க இருக்கின்ற எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று கூடவேண்டும் என்பதுடன், இந்த சுதந்திர தினம் எமக்கான இருள்தினம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.

எனவே எமக்கு விடுதலை தேவை என சிந்திக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு பெற வேண்டும். அத்துடன் பெருந்திரளான மக்கள் பங்கு கொள்வதன் மூலம் எமது இனத்தின் விடுதலைக்கான தேவையினை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உண்மையான நண்பன் சீனாவே – அமெரிக்காவுக்கு சீனா பதில் !

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான கடன் நிவாரணத்துக்காக சர்வதேச நாணய நிதிய நிபந்தனை விடயத்தில் சீனா காட்டியுள்ள முனைப்பு போதாது என்று நூலன்ட் தெரிவித்திருந்தார்.

எனினும் உண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு ஏதாவது செய்யவேண்டுமானால், தமது நேர்மையைக் காட்ட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழன் அன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில், கருத்துரைத்த, சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர்-மாவோ நிங், அமெரிக்க ராஜதந்திரி கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இலங்கையும் அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளது மற்றும் அதற்காக சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போவதை நிறுத்துமாறு வோஷிங்டனை அவர் எச்சரித்தார்.

உண்மையான நண்பன் என்ற வகையில் சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் உன்னிப்பாகக் கவனித்து அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான உதவிகளை மிகச் சிறந்த முறையில் வழங்கி வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மணிக்கு 160 கி.மீ தூரம் – மின்சார விமானத்தை அறிமுகம் செய்கிறது நாசா !

அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.

இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது. இந்த விமானத்துக்கு எக்ஸ்-57 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமாக எக்ஸ்-57 தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன. இவற்றை தேவையற்ற நேரத்தில் மடித்துக் கொள்ள முடியும். வழக்கமான பெட்ரோலிய எரிபொருளை பயன் படுத்தும்போது, எரிபொருள் தீர தீர, விமானத்தின் எடை குறையும்.

 

பேட்டரியில் இருந்து கிடைக்கும் சக்தி அதன் எடை மற்றும் அளவை பொருத்ததாக உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் சக்தியும், வழக்கமான விமான எரிபொருளில் இருந்து கிடைக்கும் சக்தியைவிட 50 மடங்கு குறைவாக உள்ளது. தற்போது குவாண்டம் தொழில்நுட்பத்தில் பேட்டரிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேட்டரிகளில் லித்தியம் பேட்டரி சிறப்பானதாக உள்ளது. ஆனாலும் அவற்றின் எடை அதிகமாக உள்ளது. லித்தியம் எளிதில் தீப்பிடிக்ககூடியது என்பதால், அது தீங்கு விளைவிக்கும் அபாயமும் உள்ளது.

நாசா உருவாக்கியுள்ள எக்ஸ்-57 மின்சார விமானத்தில் 160 கி.மீ தூரம் வரை பறக்கலாம். இதற்கு ஒரு மணி நேரம் ஆகும். பரிசோதனை முயற்சியாக தயா ரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார விமானம் இந்த ஆண்டு பறக்க விடப்படவுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் அறிவிப்பு!

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது.

அத்தகைய ஈடுபாட்டின் விளைவாக, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில், இந்திய அரசாங்கம், 2023 ஜனவரி 16 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பதையும் பத்திரதாரர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு நாடு மீண்டும் அணுகலை வழங்கவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தயாராக இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல் கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளை காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் எந்தவொரு எதிர்ப்பு பேரணியும் அல்லது எந்தவொரு நபரும் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“திருடன் கையில சாவி” – யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் பொலிஸ் அதிகாரிகள் !

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் குறிப்பிட்ட அளவை போலீசார் கைப்பற்றி தங்கள் சுய லாபத்திற்காக விற்கின்ற நிலையும் நீடிக்கின்றது. கடந்த காலங்களில் பல போலீஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இப்படியான அதிகாரிகளை வைத்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது என்பது திருடன் கையில் இருக்கும் சாவிக்கு நிகரானது என சமூக வலைத்தளங்களில் பலர்  பதிவிட்டுள்ளனர்.

வலிகாமம் வடக்கு பகுதியில் 197 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன !

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990 ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக சென்றிருந்தனர்.

தற்போது 22 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.  அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களின் வீட்டுக்காணிகள், தோட்டக்காணிகள், வயல் நிலங்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் கைப்பறியிருந்ததுடன் குறித்த காணிகளை விடுவிக்கக்கோரி வலிகாமம் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

அதற்கமைய காங்கேசன்துறை – மத்தி ஜே 234/ மயிலிட்டி – வடக்கு ஜே 246/ தென்மயிலை ஜே 240/ பலாலி – வடக்கு ஜே 254/ நகுலேஷ்வரம் ஜே 226 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது.  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, இன்று 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி சிறிலங்காவின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்காக காணி உரிமையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் பருத்தித்துறையிலுள்ள 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பலாலி வடக்கு பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 13 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் அமைந்துள்ள நகர மண்டபம், அன்றைய தினமே வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை, மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கு, மீள்குடியமர்வுக்கு அவசியமான உதவித் தொகையையும் உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

2023ஆம் ஆண்டிலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பராமரிப்புக்காக இலட்சக்கணக்கில் பணம் ஒதுக்கீடு !

இலங்கையில் 2023ஆம் ஆண்டிலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பராமரிப்புக்காக இலட்சக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் மாளிகைகள் மற்றும் வாகனங்களின் பராமரிப்புக்காகவே பெரும்பாலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய நான்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளதுடன், மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவும் இதன் கீழ் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளார்.

2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பேரழிவு காரணமாக, சாத்தியமான அனைத்து துறைகளிலும் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சராக தற்போதைய ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதிகள் 2022 ஆம் ஆண்டை விட தமது மாளிகைகள் மற்றும் வாகனங்களின் பராமரிப்புக்காக அதிக நிதியை ஒதுக்கியமை குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான அரச தலைவர்களுக்கான ஒதுக்கீடுகள் மில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளன.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய நன்மையாக 1.17 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு சமமானதாகும்.

அத்துடன் அவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ‘வேறு’ செலவினங்களின் கீழ் மேலும் 300 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலதனச் செலவீனத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ கீழ் மேலும் 100 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் எந்த மாற்றமும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய பலன்களாக 117 இலட்சம் ரூபா திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான ‘வேறு’ செலவினங்களின் கீழ் மேலும் 110 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2022 ஆம் ஆண்டுக்கான 100 இலட்சம் மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான 68 இலட்சம் ரூபாவுடன் ஒப்பிடுகையில் பாரிய அதிகரிப்பாகும்.

மூலதனச் செலவினத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ கீழ் 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இது 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட அதே தொகையாகும்.

மேலும், 2023 இல் வாகனங்களுக்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாங்கத்தினால் 800 மில்லியன் ரூபா பாரிய செலவில் புனரமைக்கப்பட்ட கொழும்பு 7 விஜேராம வீதி வீட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வருகிறார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளினார்.

மக்கள் மருந்து, உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சொகுசு வீட்டில் பொதுப் பணத்தில் அவர் பராமரிக்கப்பட்டு வருகின்றார்

2022ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலத்தில், பிரதமர் அலுவலகத்திற்கு மேலதிக நேர மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளாக திறைசேரியின் ஊடாக 70 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 2023 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய நன்மையாக 1.17 இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ‘வேறு’ செலவுகளின் கீழ் மேலும் 11 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.7.9 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய அதிகரிப்பாகும். இது தவிர, 2022 ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினத்தின் கீழும், ‘கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்’ கீழ் மேலும் ஒரு மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ‘இதர’ செலவினங்களின் கீழ் மேலும் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் மனைவி ஹேமா பிரேமதாசாவுக்கு 2023 வருடத்திற்கு 780,000 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.