06

06

துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,300ஐ தாண்டியது !

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிச்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.

மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

“என்னை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றனர்.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன கவலை !

“என்னை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றனர்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சு.க. தொகுதி அமைப்பாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்து விடுதலையாகி நாட்டின் ஜனாதிபதியானார். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவை கொலை செய்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை நீக்கினர்.

என்னை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றனர். என்னைப் பற்றி பேசுபவர்களின் பின்னணியில் வேறு குழுக்கள் உள்ளன அந்தக் குழுக்களாலேயே அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. இவை என்னுடனான தனிப்பட்ட முரண்பாடுகளால் இடம்பெறவில்லை.

மாறாக என்னுடையதும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் கொள்கை மற்றும் சர்வதேசத்துடனான தொடர்புகளாலேயே எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜே.வி.பி.யினர் தமது தேர்தல் பிரசார கூட்டங்களின் , தமது உறுப்பினர்கள் பதவியேற்றதன் பின்னர் சம்பளம் பெற மாட்டார்கள் எனக் கூறுகின்றனர்.

முன்னைய காலங்களில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என அனைவரது சம்பளத்தையும் கட்சிக்கு பெற்றுக் கொள்வார்கள். அதற்கமைய கட்சியால் தீர்மானிக்கப்படும் தொகை அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.இவ்வாறான நிபந்தனைகள் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனினும் தற்போது போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அவற்றில் கையெழுத்திட மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளால் டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்தில் காணப்பட்ட ஐ.தே.க. தற்போது இரண்டாகப் பிளவடைந்துள்ளது.

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வீரர்களைப் போன்று கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை என்றார்.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரம் – 6 பில்லியன் நட்ட ஈட்டை கோரும் இலங்கை!

இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று , இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் கடல் பகுதியில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்ததினால் இலங்கையின் கடல் வளத்திற்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.” – கிறிஸ்டினா ஜோர்ஜீவா

“குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.” என சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதேபோன்று தனியார் துறையினரையும் பங்கேற்க வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் நிதியமைச்சர், மற்றும் அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமை தாங்கும் முதல் நபரான ஜோர்ஜீவா, சமூக சேவைகளில் வெட்டுக்கள் மற்றும் பிற பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்கு கடன் நிவாரணம் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலில் சுடப்பட்ட விவகாரம் – பதிலடி வழங்குவோம் என சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவின் மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் எனவும், இதற்கு தேவையான பதில் நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இதுவரை 195 பேர் பலி !

துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 195 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலிருந்து சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் என வேதனைகளை சாட்சியாக்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“இந்தோனேசியா பிளவுபட்டது போல் 13ஆல் இலங்கையும் பிளவுபடும்.” – உதய கம்மன்பில

பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி 90களில் இந்தோனேசியாவை பிளவுபடுத்திய மேற்கத்திய நாடுகளின் திட்டத்தில் இலங்கையும் பலியாக கூடாது என ஆளும்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தொடரும் கொடுப்பனவு நிலுவை மற்றும் கடன் நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால், கிழக்கு திமோர் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைப் போலவே அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தோனேசிய ஜனாதிபதி சுஹார்டோவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் சூழலை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவர், அத்திருத்தம் இலங்கையை இனரீதியாக பிளவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யாதீர்கள் – மக்களை அறிவுறுத்தும் நியூசிலாந்து..?

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு எதிராக நியூஸிலாந்து மக்கள் அறிவுறுத்தப்படவில்லை என நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச சுற்றுலாத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நியூசிலாந்து அங்கீகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்குச் செல்வதற்கு எதிராக நியூசிலாந்து மக்களுக்கு இரண்டு வகையான பயண ஆலோசனைகள் உள்ளன.

‘பயணம் செய்ய வேண்டாம்’ ‘அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்’. என்பதே அவையாகும். தற்போது 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையான பயண ஆலோசனைகள் உள்ளன. எனினும் அதில் இலங்கை உள்ளடங்கவில்லை.

மாறாக, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் இலங்கை இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் நியூசிலாந்து மக்கள் ‘அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ‘என்பதையே தாம் அறிவுறுத்தியதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் பயண ஆலோசனைகள் அண்மையில் ‘இறுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு செய்தி தவறாகக் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.