11

11

இலங்கையில் அதிகரித்த புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டு பணம் !

2023 ஜனவரியில் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரியில் பதிவான 259.2 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 2023 ஜனவரியில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 437.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“இது ஜனவரி 2022 இல் பதிவான வரத்துகளுடன் ஒப்பிடுகையில் 68.8% அல்லது 178.3 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும்” என்று அமைச்சர் நாணயக்கார மேலும் கூறினார்.

“தொலைத்தொடர்பு கோபுரத்தால் புற்றுநோய்.” – தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என கூறி மக்கள் போராட்டம் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை எம்.பி.சீ.எஸ். வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தொலைத்தொடர்பு கோபுரத்தை இடைநிறுத்தக் கோரி இன்று (11.02.2023) சனிக்கிழமை பிரதேச மக்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் செரிந்து வாழும் குறித்த பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதால் பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் சரும நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்று தெரிவித்தே இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படும் கட்டிடத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் கோபுரம் வேண்டாம், அதிகாரிகளே எங்கள் கருத்தை கேழுங்கள் என்ற சுலோகங்களை ஏந்தியவாறு தங்களது எதிர்பினை வெளியிட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் க.கமலநேசன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சீ. ரமீஸா, பிரதி திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோர் வருகை தந்தனர்.

தொலைத்தொடர்பு கோபுரத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக ஆராய்வதற்காக வேண்டி தொலைத்தொடர்பு கோபுரத்தை பொருத்தும் பணிகளை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தி வைக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டார கட்டிட உரிமையாளருடன் கலந்துரையாடியதற்கு அமைய கோபுரம் அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பதாக கட்டிட உரிமையாளர் பொருந்திக் கொண்டதற்கமைய ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

1980க்கு முன்பிருந்ததை போல வடக்கை மாற்றப்போகிறேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் வடக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியது.

அந்த பலமான பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்.

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், பொருளாதார அபிவிருத்தியம் அவசியம்.

மேலும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பில் தங்கியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த சிரேஷ்ட சட்டத்தரணி மு.ரெமிடியஸ் காலமானார் !

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் இன்று காலமானார்.

கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்தில் காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அமரர் மு.ரெமிடியஸ் அவர்கள் மனித உரிமை ஆர்வலர். தமிழர் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்த ஒரு நபராவார்.

முக்கியமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் த.கணேசலிங்கம் அவர்களால் மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி முத்தையா என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் பிள்ளையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ஆஜராகி தொடர்ந்து வாதாடியவர் அமரர் ரெமிடியஸ். எனினும் குறித்த பாதிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதை  தொடர்ந்து அந்த வழக்கும் காணாமல் போயிற்று. குறித்த பெண்ணுக்கு எதிராகவும் பேராசிரியர் கணேசலிங்கத்துக்கு ஆதரவாகவும் அன்று வாதாடியவர் சட்டத்தரணி ந.ஸ்ரீ காந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பௌத்த பிக்குகள் அரசியலமைப்பை எரிப்பதையெல்லாம் இலங்கையின் சட்டம் கண்டுகொள்ளாது.” – சாணக்கியன் இராசமாணிக்கம்

“ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள்.உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13 ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தி கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் என்ற ரீதியில் முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும்.அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக உள்ளது.பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டம் ஏதும் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கையில் வாழும் எவருக்கும் சுதந்திரம் இல்லை என்பதால் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர். ஆங்கிலேயர் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் தமிழ்   மக்களின் அரசியல் உரிமைகளை கையளித்து சென்றார்கள்.

சிங்கள அரச தலைவர்களின் தவறான நிர்வாகத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.இதனை வெளிப்படுத்தும் வகையில் தான் 75 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திரமாக அனுஷ்டித்தோம்.சிங்கள சமூகத்தினருக்கு பொருளாதார சுதந்திரம் தற்போது இல்லை என்பதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

பௌத்த பிக்குகள் நேற்று முன்தினம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் 13 ஆவது திருத்த நகல்களை தீயிட்டார்கள். இவர்களை போல் இந்து குருக்கள் அல்லது முஸ்லிம் மௌலவி செயற்பட்டிந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.பௌத்த பிக்குகளுக்கு அரசியல் சுதந்திரம் உள்ளது என்பதால் அவர்கள் அரசியலமைப்பை எரிக்கிறார்கள்.

ராஜபக்ஷர்களின் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள பின்னணியில் இனவாதத்தை பிரசாரமாக மேற்கொள்ள 13 ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்கள்.2019 ஆம் ஆண்டு ஜனாதி தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தற்போது 13 ஆவது திருத்தம் ஆகவே சிங்கள மக்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கருத்துரைக்க முன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

“எனது கட்சி தேர்தல் பிரச்சாரத்துக் நிதியுதவி செய்யுங்கள்.”- புலம்பெயர்ந்தோரிடம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை !

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலாகாலமாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அதனால் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்வதற்கு இளையோர்களைத் தயார்படுத்தி அவர்களின் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான இளையோர்களை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் இளையோர்களை வெற்றிபெறச்செய்து தமிழ் அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில் இயன்றளவு நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் களம் இறங்குவதாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல் பிரசார செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் நண்பர்கள், தனது மாணவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தம்மால் இயன்றளவுக்கு நிதி உதவி செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

“ஆங்கிலத்தை அரச கரும மொழியாக மாற்றுவதே இனப்பிரச்சினைக்கு தீர்வு.”- இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே

“நாட்டில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின்  ஆங்கில மொழியை அரச கரும  மொழியாக அறிவிக்க வேண்டும்.” என  சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10)  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவிப்பது வெறுக்கத்தக்கது. 13 அல்லது 13 பிளஸ் என்ற பிரச்சினைகள் எமது நாட்டுக்கு வேண்டாம். நாம் அனைவரும் இலங்கையர்களாக வாழ வேண்டும்.

விக்னேஸ்வரன் சண்டித்தன  கதைகளை கைவிட வேண்டும். விமல் வீரவன்ச போன்றோர் இனவாதத்தை தூண்டுவதனை நிறுத்த வேண்டும். சண்டித்தனமான பேச்சுக்களினாலும், இனவாத செயற்பாடுகளினாலும் 30 வருட கால யுத்தம் தோற்றம் பெற்றது.

அதன் தாக்கமே இன்று பொருளாதார பாதிப்பாக உருவெடுத்துள்ளது. பொருளாதார தாக்கம் அனைத்து இன மகக்ளையும் ஆட்டிப்படைக்கிறது. வடக்கில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அமுலாக்கப்படுவதாக விமல் வீரவன்ச கூறுகின்றார்.

இலங்கையில் சிங்கள-தமிழ் பிரச்சினைக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே வழி அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவிப்பதே. அனைத்து நாடுகளிலும் அனைத்து இடங்களிலும் இன்று ஆங்கில மொழியே உள்ளது. எனவே இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கில மொழியை அறிவிக்க வேண்டும்.

இலங்கையின் அரச கரும  மொழியாக ஆங்கில மொழியை அறிவித்தால் சிங்கள, தமிழ் பிரச்சினையும் தீர்ந்து விடும். நாடும் அனைத்து வழிகளிலும் முன்னேறும்.எவரும் மொழியுரிமை என குறிப்பிட்டுக் கொண்டு முரண்பட்டுக் கொள்ள மாட்டார்கள்.

அதேவேளை தனது நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடும் உக்ரைன் நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கியாகவே நான் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்கின்றேன்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தார். ஆசை ஆனால் பயம் என்பதால் அவர் அரசாங்கத்தை ஏற்கவில்லை.

நெருக்கடியான சூழலில் நாட்டு மக்களை பாதுகாப்பவரே உண்மையான தலைவர், சந்தர்ப்பாதிகள் உண்மையான தலைவர் அல்ல, நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

“பௌத்த பிக்குகளை அழித்தால் மட்டுமே உங்களால் 13ஆவது திருத்தத்தில் கைவைக்க முடியும்.” – வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர்

‘பௌத்த பிக்குகளை முற்றாக இல்லாதொழித்தாலன்றி , எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவராலும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது.’ என வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் ஒற்றுமையை இல்லாதொழித்துள்ளார். 2009 இன் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட ஒற்றுமையை இல்லாதொழிப்பதற்காக 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டை 9 பகுதிகளாக பிளவடையச் செய்வதே அவரது தேவையாகவுள்ளது. நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளைப் புறந்தள்ளி இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

அவர் கூறுவதைப் போன்று 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் 9 மாகாணங்களுக்கும் தெரிவு செய்யப்படும் முதலமைச்சர்களால் நாடு சீரழிவுக்குள்ளாக்கப்படும். எமக்கு தமிழ் மக்களுடன் எந்த பிரச்சினைகளும் இல்லை. பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விடுத்து ஏனையவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இது தொடர்பில் தீர்க்கமான முடிவினை அறிவிக்குமாறு ஜனாதிபதிக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். எனவே அவர் தனது முடிவை மகா சங்கத்தினருக்கு அறிவிக்க வேண்டும். நாட்டில் இரத்த வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். பௌத்த மத குருமார்கள் விகாரையில் இருக்க வேண்டும் என்று சி.வி.விக்கினேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

விகாரையிலிருந்து கொண்டே மக்களின் ஒற்றுமைக்காக செயற்படுவோம் என்பதை அவரிடம் தெரிவித்துக் கொள்கின்றோம். பௌத்த மதகுரு மார்களை முற்றாக இல்லாதொழித்தால் மாத்திரமே 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

ராஜபக்ஷாக்கள், மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க 13 தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றார்.