12

12

“சிங்கள பெண்ணை திருமணம் செய்து சிங்களவராகவே வாழ்ந்த விக்கினேஸ்வரன் இன்று தமிழராக நடிக்கிறார்.” – சரத் பொன்சேகா

“இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சமஷ்டி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணை திருமணம் செய்துள்ளார், பிள்ளைகளும் சிங்கள வழியில் வாழ்கின்றனர், தெற்கில் படித்துள்ளார், தெற்கில் தொழில் செய்தார், தற்போது தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஒரு சிறந்த சந்தர்ப்பவாதி.

இவ்வாறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும்.”- தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஏ. சுமந்திரன் !

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் கோரும் சமஷ்டி தீர்வு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தெற்கில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டாலும் தம்மைத் தாமே ஆள அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களது இந்த நிலைப்பாடு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 50ஆயிரத்தை தொடும் என்கிறது ஐ.நா !

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது.

நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.

சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைக் கோரியுள்ளது.

துருக்கியில் மட்டும் மீட்புப் பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8,294 பேரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருவதாகக் வருகின்றனர்.என தெரிவித்தார்.

“வட மாகாணத்தை மீண்டும் நாட்டிற்கு உணவளிக்கும் இடமாக மாற்றுவேன்.”- கிளிநொச்சியில் ஜனாதிபதி ரணில் !

வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கிளிநொச்சி, பரந்தன் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில்  , அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து, அதற்குரிய தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசாங்கம் துரிதமாக வழங்கியிருந்ததுடன், இம்முறை பெரும் போகத்தில் கூடுதலான நெல் அறுவடை கிடைக்கும் என நம்புவதாக ஜனாதிபதி ரணில்  தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா படி உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேசமயம், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இருபது இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவசாயத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் அறுவடையை அதிகரிக்க எண்ணுவதாகவும்  யாழ்.மாவட்டத்தையும் வட மாகாணத்தையும் மீண்டும் நாட்டிற்கு உணவளிக்கும் இடமாக மாற்றுவதற்கு விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும்.” – சிவஞானம் சிறிதரன்

“ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஒரு மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும்.” என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேற்று (11) இரவு யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே சிறிதரன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பின்போது வடக்கின் நிலைவரம் குறித்து இந்திய பிரதிநிதிகளிடம் சிறிதரன் எம்.பி எடுத்துக் கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவும் தமிழகத் தலைமைகளும் பேசி வருகின்றபோதிலும் – இப்போது 13ஆவது திருத்தம் பலவீனம் அடைந்திருக்கிறது.  இத்திருத்தத்துக்கு எதிராக 28 வழக்குகள் தொடுக்கப்பட்டு மாகாண சபை முறைமை சீரழிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, ‘அப்போது இந்தியா வழங்கிய 13ஆவது திருத்தச்சட்டம் வேறு, இப்போது காணப்படும் 13ஆவது திருத்தம் வேறு. இதனை இந்திய தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் இந்திய ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், புலனாய்வு மற்றும் இராணுவ ஆலோசகர்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்த வேண்டும்.  அத்தகைய சந்திப்பொன்றை ஏற்படுத்தினால் இலங்கையின் தற்போதைய நிலைவரம் குறித்தும், 13ஆவது திருத்தத்தின் பலவீனமான தன்மை குறித்தும் எம்மால் எடுத்துக்கூற முடியும், அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

அத்துடன் தமிழகத்தில் உள்ள தலைவர்கள், இலங்கையின் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தமிழர் மாநாடொன்றை ஏற்பாடு செய்யவேண்டும். இதில் தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்னவென்பது குறித்து சகலரும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அத்தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு புதுடெல்லிக்கு அழுத்தம் பிரயோகித்து, அதனூடாக இந்தியாவின் தலையீட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தமிழகம் துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச..?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த நிலையில், குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வார இறுதி பத்திரிகைக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவரும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொக்கட்டிச்சோலையில் படகு கவிழ்ந்து விபத்து – ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்கள் மீட்பு !

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஆசிரியர் மற்றும் மூன்று மாணவர்களின் சடலங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

27 வயதுடைய ஆசிரியை மற்றும் 16 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 மாணவர்கள், 7 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் ஏனையோர் உயிர்பிழைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய செல்லும் இலங்கை ஆதிவாசிகள் குழு !

பழங்குடியின தலைவர் உருவகே வன்னியாலத்தோ தலைமையில் ஆதிவாசிகள் குழுவுக்கு ஆஸ்திரேலிய செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் உள்ள இலங்கை பழங்குடியினருக்கு சொந்தமானது என கருதப்படும் சில எலும்பு துண்டுகள் கலந்துரையாடுவாதற்காக ஆதிவாசிகள் குழு இந்த பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதிவாசிகளின் மொழிகளை மொழிபெயர்ப்பதற்காக ஆதிவாசி பேராசிரியர் ஒருவரும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

துருக்கிக்கு தேயிலையை நன்கொடையாக வழங்கிய இலங்கை !

துருக்கி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் அரசாங்கம் நேற்று முன்தினம் (10) கொழும்பில் உள்ள துருக்கி தூதுவரிடம் இந்த தேயிலை தொகுதியை கையளித்துள்ளது.

பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை என்பனவற்றினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளர் நாயகம் பிரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் ஊக்குவிப்பு பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.