17

17

எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில்,

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், பொலிசாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.

துருக்கி இடிபாடுகளில் இருந்து 10 நாட்களின் பின் உயிரோடு மீட்கப்பட்ட சிறுமி!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்கு பிறகு, கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை துருக்கி மீட்புக்குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர். அவருக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

மீட்புக்குழுவினரை சிறுமியின் மாமா கட்டிப்பிடித்து நன்றி கூறினார். மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அலி அக்டோகன் தெரிவித்தார். இந்த கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருள்ள ஒன்றை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது ஒரு பூனையாக இருந்தாலும் கூட மகிழ்ச்சி அடைவதாக அலி அக்டோகன் கூறினார்.

 

மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் – சி.வி.விக்கினேஸ்வரன்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர், எங்களை லண்டனுக்கு போகச் சொன்னால் அவரை நாங்கள் போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.

பொன்சேகா என்பது சிங்கள பெயருமல்ல – தமிழ் பெயருமல்ல. அவரை போத்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி வரும்.

சமஷ்டி கோருபவர்களை லண்டன் போகச் சொன்னால் நாங்கள் அவரை போர்த்துக்கல்லுக்கு போகுமாறு கோர வேண்டி வரும் என அவர் தெரிவித்தார்.

 

தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கம் – ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் மகஜர் கையளிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் அரசாங்கம் தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (17) ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா உள்ளிட்ட ஐ.ம.ச. குழுவினர் இந்த மகஜரைக் கையளித்துள்ளனர்.

அரசாங்கம் ஜனநாயகமற்ற முறையில் தேர்தலை ஒத்திவைத்தமை தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தூதுவருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தலையிடுமாறு ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன்”  – செ.கஜேந்திரன்

“இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன்”  எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆடைகளைக் கிழித்து சிறைக்குச் சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஊடகங்கள் நேற்றைய தினம் (16.02.2023) எழுப்பிய கேள்விக்கே செ.கஜேந்திரன் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 30 வருடங்களாகக் காட்டிக்கொடுக்கின்ற வேலையைச் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

அத்துடன், தேசியத்தலைவர் பிரபாகரனின் நேரடி வாழிகாட்டலின் கீழ் 2001ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைக்கான போராட்டங்களில் நம்மை ஈடுபடுத்தியிருந்தோம் என தெரிவித்த அவர், கடந்த 13 வருடங்களாகத் தெருவில் நின்று மக்களுக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே போராடுவதாகச் சுட்டிக்காட்டினார். மக்கள் உரிய நேரத்தில் உரியப் பதில்களை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கஜன் இராமநாதன் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாகவே பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இனப்படுகொலை செய்கின்ற சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து காட்டிக்கொடுக்கின்ற வேலைகளைச் செய்கின்ற அங்கஜன் இராமநாதன், தங்களை நோக்கி கேள்வி எழுப்புவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை.

அவர் எதிர்காலத்தில் எந்தளவு தூரம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 22 வயது அமெரிக்க பெண் மீது பாரிய பாலியல் துஷ்பிரயோகம் !

ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் ஊழியரினால் தனது 22 வயது மகள் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அமெரிக்கர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளரிடம் அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் கடந்த டிசெம்பர் மாதம் தனது பெற்றோருடன் இலங்கைக்கு வந்து ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், டிசம்பர் 26ஆம் திகதி தனது தாயுடன் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மசாஜ் செய்த நபர் தனது மகளை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் அமெரிக்கா வந்த போது மசாஜ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மகள் கூறியதாகவும், இதற்கமையவே தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் – QR code இல்லாமல் பெட்ரோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு !

எரிபொருள் ஒதுக்கீடு அனுமதி அட்டை (QR code) இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில் நேற்று இரவு 10.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் QR code இன்றி, பெற்றோல் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதன்போது, எரிபொருள் நிலைய ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த இருவரும் ஊழியரை வாளினால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.