19

19

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் !

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணையை முன்னெடுத்து வருவதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 07 நாட்களில் 51 படுகொலைச் சம்பவங்கள் !

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் மக்கள் சிக்கியுள்ள இக்கட்டான நிலைமையில் படுகொலைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், நாட்டில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மாகாண காவல்துறை உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில் 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப் போட்டி மற்றும் குழு மோதல்களால் என மேற்படி படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதற்கமைய வடமேல் மாகாணத்தில் 7 நாட்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 9 பேரும், தென் மாகாணத்தில் 7 பேரும், மத்திய மாகாணத்தில் 3 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வட மத்திய மாகாணத்தில் 6 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், கிழக்கு மாகாணத்தில் 4 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் பசி தீர்ப்பதற்காக உயிரை விட்ட மூன்று பெண் பிள்ளைகளின் தாய் !

குழந்தைகளின் பசி தீர்க்க பலாப்பழம் பறிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கம்பளை, நாரங்விட்ட, பண்டாரவத்தை பகுதியைச் 50 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர், மூவரும் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள்.

மேலும் அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். கணவன் சம்பாதிக்கும் சொற்ப வருமானம் குடும்பப் பராமரிப்பிற்குப் போதாததால் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் .

உணவுக்கே பெரும் திண்டாட்டத்தை எதிர்கொண்ட நிலையில் இந்த தாய் அருகில் உள்ள மரத்தில் பலாக் காயை கண்டு குழந்தைகளின் மதிய உணவைக்காக மரத்தில் ஏறி அதனை பறிக்க முயன்றுள்ளார்..மரத்திலிருந்து தவறி விழுந்த இத்தாய் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார்.

நாம் தந்திரமாவே பிரிந்து நிற்கிறோம் – மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனியாக போட்டியிட்டு சிறு வாக்குகளால் விகிதாசாரத்தில் வந்து ஆட்சி அமைப்பதை தவிர்க்கும் வகையிலேயே தந்திரமாக போட்டியிடுகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தேர்தலிற்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும் அதனை விடுவிக்காமல் இருப்பது குறித்து கடும் கரிசனையும் வெளியிட்டுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறை செல்லும் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாயப்பு – சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

 

சிறைச்சாலை திணைக்களத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் எதிர்வரும்  வருடங்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

போதைப் பொருட்களுக்கு அடிமையாகி புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து  வைக்கப்பட்டுள்ள கைதிகளை தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொழில்வாய்பிற்காக அனுப்பவும், அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி நெறிகளை தனியார் பல்கலைக்கழகங்கள் ஊடாக வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள பயிற்சி பெற்ற 50  இளைஞர்களை இவ்வாறு வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும், இச் செயல் திட்டத்தை முன்னெடுக்க தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம்  கைதிகளுடைய தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதுடன் ஊடாக அவர்களுடைய குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும்.அதேவேளை,  முகாம்களில் தடுத்த வைக்கப்பட்டுள்ள மற்றைய கைதிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது  என்றார்.

இலங்கையை விட்டு வெளியேறிய ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவ நிபுணர்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் குளறுபடிகள் மற்றும் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்களின்   எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கைகளும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கிராம மட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வெளியேறுதல் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைகள் இதுவரையில் மருத்துவ நிபுணர்களின்  பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை.

மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும்,  தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.

அதேவேளை, அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் உறுதியின்மையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற பிரதான காரணமாகும். அதேபோன்று அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் இந்த தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

மேலும், தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுத்துள்ள நியாயமற்ற வரிக்கொள்கையும் மற்றுமொரு காரணமாகும். இதனாலும் அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றார்.

நாளை திறக்கப்படுகிறது இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் !

கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (20) ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த பூங்கா வரும் 23ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் புலம்பெயர் பறவை பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது. வெளிநாடுகளுக்குச் சொந்தமான பறவைகள், புலம்பெயர் பறவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பூங்காவில், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளது. 490 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த பறவை பூங்காவில் வெளிநாட்டு பறவைகள் பெரிய கூண்டுகளில் அடைத்து வைக்கபட்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணிகளுக்கு சுமார் நூறு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பூங்கா 40 வருட காலப்பகுதியில் இலங்கைக்கு சொந்தமான பறவைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக புலம்பெயர்ந்த பறவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. விலங்கியல் மாணவர்களுக்கான கல்வி பயிற்சி நிலையம், பறவை காப்பகம், பறவைகள் தங்குமிடம் மற்றும் ஒரு தனிமைப்படுத்தல் பிரிவு என்பனவும் உள்ளன இந்த பூங்காவில் வெளிநாட்டு பறவைகளை இனப்பெருக்கம் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான அலகும், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையம் மற்றும் இயற்கை பறவைகள் ஆய்வு மையம் என்பனவும் உள்ளன.

தென்னிலங்கை அரசியலை தமிழ் தரப்பு பின்பற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும்.

இல்லையேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர் – அனுரகுமார திஸ்ஸ நாயக்க

“தென்னிலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர்.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றுக்கும் மக்களின் ஆதரவு கிடையாது. மஹிந்தவில் இருந்து ரணிலுக்கும் ரணிலில் இருந்து மஹிந்தவுக்கும் அதிகாரம் மாறுவதாக இருந்தால் மட்டுமே தேர்தலை நடத்துவார்கள்.

ஆனால் இம்முறை தென்னிலங்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திசைகாட்டிக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கூட இளையோர்கள் மத்தியில் திசைகாட்டிக்கு ஆதரவு உள்ளது. இதனால் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் பயப்படுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தேர்தலை நிறுத்த முயற்சித்தார். அது சாத்தியப்படவில்லை. நீதிமன்றம் ஊடாக தேர்தலை தடுக்க முயற்சித்தார். அதுவும் முடியவில்லை. அரச அச்சகருக்கு பணம் பெறாமல் வாக்குச்சீட்டை அச்சடிக்க வேண்டாம் என ரணில் கூறினார். திறைசேரி செயலாளருக்கு தேர்தலுக்கு பணம் வழங்க வேண்டாம் என ரணில் கூறினார். ரணில் விக்ரமசிங்க தேர்தலை குழப்பவே முயற்சிக்கின்றார்.

கடந்த காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசியல் ஜனநாயகத்தை குழப்பினார். இன்று அவரது மருமகன் ரணில் ஜனநாயகத்தை குழப்புகிறார்.

மார்ச் 20 உள்ளூராட்சிமன்ற காலம் முடிவடைகின்றன. அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி செய்வது யார்?

அரசியல் யாப்பை மீறும் ஜனநாயகத்தை குழப்பும் ஆட்சியர்களின் உத்தரவுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் கட்டுப்பட வேண்டுமா? அவர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்நாட்டை மாற்றியமைக்க வேண்டும் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இதனை தேசிய மக்கள் சக்தியாலேயே செய்ய முடியும்.

தினேஷ் சொல்கிறார் ரணில் கள்வர் என்று – ரணில் சொல்கிறார் மஹிந்ந கள்வர் என்று – யார் யாருக்கு தண்டனை வழங்குவது. அவர்களை அவர்களே பாதுகாக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்தால் திருடர்களை வெளியேறவிடாது விமான நிலையத்தை மூடுவேன் என மைத்திரிபால கூறினார். அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கினார். மைத்திரிபால. மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கும் தரப்பாக திசைகாட்டி இருக்கும்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகும் வரை மலட்டு கொத்து இருந்தது அதன் பின்னர் மலட்டு கொத்து எங்கு போனது. நாங்கள் யுத்தம் செய்தோம் எங்கள் பிள்ளைகள் யுத்தம் செய்யவேண்டுமா?

தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வடமாகாண மக்கள் மீது திருப்ப முனைகிறார். அதற்கமைய 13ம் திருத்தத்தை கையில் எடுத்துள்ளார்.தேர்தல் வரும்போது மட்டும் 13ம் திருத்தம் பற்றி பேசுகின்றனர் என்றார்.