20

20

“2015 ல் மைத்திரிபால சிறீசேன நமது தலைவர். 2023ல் நமது தலைவர் பிரபாகரன்.” – சாணக்கியத்தனமாக மக்களை ஏமாற்றும் இரா.சாணக்கியன்

“தமிழரசு கட்சி தலைவர் காட்டிய கட்சி” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் – 2023 முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள் அறிமுகத்துடனுன் தேர்தல் பரப்புரை மக்கள் கூட்டம் நேற்று (19) இடம்பெற்றது.

இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீதியின் இரண்டு பக்கங்களிலும் மக்களை காணமுடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. நாம் பார்க்க வேண்டும் என்றால் இராணுவ முகாம்களைத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்கள் என்றால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தான்.

எமது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான இணைந்த வட, கிழக்கென்பது சாத்தியமாகுமாக இருந்தால், அது நிச்சயமாக சாத்தியமாகும். அப்படி சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் திருகோணமலை மாவட்டமும், முல்லைத்தீவு மாவட்டமும் தமிழர்களுடைய கைகளிலே மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நடைபெறவுள்ள இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு தேர்தல்.

நாங்கள் வீதி வீதியாக இறங்கி இராணுவமே வெளியேறு என கோசங்களை எழுப்புகின்றோம். அதேபோன்று இதனை பாராளுமன்றத்திலும் சொல்லும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆசனங்களிலிருந்து 10 ஆசனங்களுக்கு வாக்கு சரிவு வந்திருக்கின்ற காரணத்தினால், வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இராணுவமே வெளியேறு என வீதியிலே சொன்னாலும் கூட, இது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரைக்காக சொல்லுகின்ற கோசமே தவிர இது மக்களுடைய அபிலாசை இல்லை என்ற சந்தேகம் சில வேளைகளில் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

எங்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் சர்வதேசத்துடன் பேசும் போது எங்களுடைய பலம் குறைந்துள்ளதாகவே காணக்கூடியதாக இருகின்றது.

இதன் காரணமாகவே நாம் சொல்கின்றோம் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த சின்னம் தலைவர் காட்டிய சின்னம், உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்த சின்னம். ஆகவே, மக்கள் இந்த சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.“ என தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்த போதும் சரி அதற்கு  பிற்பட்டபகுதியிலும் சரி இரா.சாணக்கியன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர விசுவாசியாக உலா வந்தவர். திடீரென ஒரு மேடையில் இரா.சம்பந்தனுக்கு பொன்னாடை போர்த்தி தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட இரா.சாணக்கியன் இன்று முல்லைத்தீவில் நின்று கொண்டு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தேர்ந்தெடுத்த கட்சி தங்களுடையது என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்.

சாணக்கியன் போல உசுப்பேற்றி வாக்கு சம்பாதிக்கும் அரசியல் தலைவர்களாலேயே வடக்கு இலங்கையும் – தென் இலங்கையும் இன்னமும் முரண்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

தலைவர் காட்டிய கட்சி என்ற  கருத்தை இரா.சாணக்கியன் கிழக்கில் பேசமாட்டார். அங்கு முஸ்லிம்கள் இருப்பதால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் ஓட்டுக்கள் பெரும்பாலும் கிடைக்காது விட்டுவிடும் என்ற அச்சம் தான்.

உள்ளூராட்சி தேர்தலுக்கும் இவர்கள் பேசும் தமிழ்தேசியத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். பிரதேச சபைத் தேர்தல் முழுமையாக அபிவிருத்தியே முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது. இந்த தமிழ் தேசியவாதிகளின் சந்தர்ப்பவாத அரசியலால் உந்தப்பட்டு தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சி உருவான காலம் முதல் அதற்கும் அதன் கூட்டணிக்கும் தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள். விளைவு இன்னமும் நமது பகுதிகள் அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. வறுமை இன்னமும் அதிகமாகவுள்ளது. குன்றும் குழியுமான பாதைகள், அடிப்படை வசதிகளற்ற கிராமங்கள், சுய  தொழில் உற்பத்திகள் விருத்தி செய்யப்படாத நிலை என இந்த தமிழ்தேசியவாதிகளை நம்பியதால் நமது மக்கள் இழந்தது அதிகம்.

இரா.சாணக்கியன் போன்ற சந்தர்ப்பவாத அரசியல் செய்வோரை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரி மக்கள் பற்றி பேசும் – கற்ற – புதிய மாற்றத்தை பேசும் இளைஞர்களை தெரிவு செய்ய முன்வர வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்காக தம்மால் கோரப்பட்ட நிதி, திறைசேரி செயலாளரினால் வழங்கப்படவில்லை, மேலும் வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு போதியளவு பணம் கிடைக்கப்பெறாத நிலையில் அச்சிடல் பணிகள் அரசாங்க அச்சத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதனால் அரசாங்க அச்சகம் உரிய வகையில் வாக்குசீட்டுகளை வழங்காமையினால், எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை காலவரையறையின்றி பிற்போட தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு!

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை மருத்துவ சங்கமும், புகையிலை, மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நிபுணர் குழுவும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்தும், பொருளாதார நன்மைகளுக்காக, பயிர்ச்செய்கை தொடர்பான சட்டங்களை தளர்த்துவது குறித்தும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தமது கடிதத்தில் இந்த அமைப்புக்கள் கோரியுள்ளன. இலங்கையின் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் , இந்தநிலையில் அரசாங்கத்தின் கஞ்சா பயிர்ச்செய்கை நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று கூறியுள்ள குறித்த அமைப்புக்கள், இலங்கை மேலும் துயரத்திற்குள் செல்ல முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளன.

முல்லைத்தீவில் ஆசிரியரை சந்திக்க சென்ற பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் முறைசாரா கணவரால் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (19) புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியையின் திருமணமான கணவர் அவரை விட்டுப் பிரிந்து தனி வீட்டில் வசித்து வரும் நிலையில், அந்த ஆசிரியை வேறு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருடன் முறைசாரா உறவைப் பேணி அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த மாணவி கல்வி விடயம் தொடர்பாக ஆசிரியையின் வீட்டுக்குச் சென்ற போது, ​​அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது ஆசிரியை வீட்டில் இருக்கவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், மாணவி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

“ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதே சபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நேற்று நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“தேர்தல் நடக்குமா என மக்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர், ஆனால்  ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலைச் சந்திப்பதற்கு பயம், இதுவே தேர்தலை பிற்போடக் காரணம்.

நான் 2019 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி தனிநபர் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தேன், ஆனால் மாகாண சபைத் தேர்தலையும் இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் பிற்போட்டு விட்டார்கள்.

இப்போது மாகாண அதிகாரமும் கிடையாது, உள்ளூராட்சி அதிகாரத்தையும் வழங்க மறுக்கிறார்கள். மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தனது கையில் எடுத்து தேர்தலை பிற்போட செய்யும் சூழ்ச்சியை வெளியே கொண்டுவருவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

இந்த தேர்தலினால் ஏற்படப்போகும் விளைவுகளை உணர்ந்த காரணத்தினாலேயே குறித்த தேர்தலை பிற்போட முனைப்புக் காட்டுகின்றனர்.” இவ்வாறு நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி 6 வருடங்களாக போராடும் உறவுகள் – கண்டுகொள்ளாத தென்னிலங்கை – நடவடிக்கைகள் எதுவும் செய்யாத தமிழ் தலைமைகள் !

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும்  போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் அதை நினைவு படுத்திய போராட்டம் ஒன்று (20) இன்றைய தினம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி  கிளிநொச்சி கந்தசாமி கோயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து ஏழாவது ஆண்டு ஆண்டில் கால் பதிக்கின்றது.

இந்த நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்களை நினைவுபடுத்து முகமாக இன்றைய தினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கந்தசாமி கோவில் முன்னிலையில் இருந்து கிளிநொச்சி டிப்போ சந்தி வரை ஏ9 வழியாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெற்றோர் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பிய வாறு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதிகோரி மக்கள் போராடுவதை தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற தலைமைகள் தமது ஓட்டு வங்கியை நிரப்ப பயன்படுத்திக்கொண்டார்களே தவிர அதற்கான தீர்வுக்காக எந்த நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்வில்லை. தென்னிலங்கை அரசியல்தலைமைகளுடன் இணைந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாமன் போன்றோர் இந்த மாதத்துக்குள் தீர்வு, அடுத்த மாதத்துக்குள் தீர்வு என இழுத்தடிப்பு செய்கிறார்களே தவிர அவர்கள் கூட தீர்வுகளை நோக்கிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு காலத்தில் இந்த காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு தீர்வு தருவதாக கூறி போராடும் உறவுகளின் போராட்டத்தை தற்காலிகமாக நீர்த்துப்போக செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கிளிநொச்சியில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த நபர் கைது !

களியாட்ட நிகழ்வோன்றில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று முன்தினம் (18) கலியாட்ட நிகழ்வு ஒன்றில் இவ்வாறு அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்றல் நடவடிக்கை மற்றும் நோயாளருக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் ஒலிபெருக்கியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஒலிபெருக்கிச் சாதன பொருட்கள் அனைத்தும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

தொலைபேசி தகராறு – நான்கு பேர் கொண்ட குழுவினரால் கொலைசெய்யப்பட்ட இளைஞன் !

மொரட்டுவ – அங்குலான பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் உக்குன் என அழைக்கப்படும் சுதிர சம்பத் என்ற 26 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அவரது உறவினர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது லுனாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த இளைஞர், அங்குலானையில் உள்ள தமது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழுவொன்று கூரிய ஆயுதங்களுடன் வந்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.