22

22

சாதியப் பாகுபாட்டிற்கு அமெரிக்காவின் சியட்டல் நகர சபை தடைவிதித்துள்ளது!

 

சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் மாறியுள்ளது. சியாட்டில் நகர சபை செவ்வாயன்று (February 21, 2023) நகரத்தின் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் சாதியையும் சேர்த்தது.

6 : 1 என்ற விகித்ததில் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டத்தை ஆதரிப்பவர்கள், சாதி அடிப்படையிலான பாகுபாடு, தேசிய மற்றும் மத எல்லைகளை மீறுவதாகவும், அத்தகைய சட்டம் இல்லாமல், சாதிய பாகுபாட்டை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

சியாட்டில் நகர சபையில் (சிட்டி கவுன்சில்) இந்து பிரதிநிதி ஒருவரால் ஒரு முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டது, இது இந்திய வம்சாவளி மக்களிடையே விவாதத்தைத் தூண்டியது. இந்த முன்மொழிவு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பானது.

பிரதிநிதி ஷமா சாவந்த் கொண்டுவந்த முன்மொழிவு தொடர்பாக செவ்வாயன்று வாக்களிப்பு நடந்தது. அதன் பிறகு சாதி பாகுபாடு சட்டவிரோதமாக மாறிய அமெரிக்காவின் முதல் நகரமாக சியாட்டில் ஆனது.

பிரித்தானியாவிலும் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி 2010 ஈக்குவாலிற்றி அக்ற் (Equality Act 2010) வருகின்ற போது முயற்சிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி 1. வயது, 2. பால் 3. மதம், 4. இனம் 5. ஊனம், 6. திருமணபந்தமும் சேர்ந்து வாழ்தலும், 7. தாய்மையும் மகப்பேறும், 8. பாலினமாற்றம் 9. பாலினச் சேர்க்கைமுறை ஆகிய இயல்புகளின் அடிப்படையில் ஒருவரை பாரபட்சமாக நடத்துவது குற்றமாக்கப்பட்டது. இந்த ஒன்பது இயல்புகளோடு சாதிய ரீதியாக ஒருவரைப் பாரபட்சமாக நடத்துவதும் குற்றமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. ஆனால் தற்போது சியாட்டல் நகரம் முன்ணுதாரணமாக மேற்கொண்டுள்ள இம்முயற்சி, எதிர்காலத்தில் பிரித்தானியாவிலும் சாதிய பாரபட்சம் காட்டப்படுவது குற்றமாக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் சியாட்டல் நகரின் முன்ணுதாரணமான நிகழ்ச்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சியாட்டல் நகரை முன்ணுதாரணமாகக் கொண்டு ஏனைய நகரங்களும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வர முயற்சிக்கலாம் என்ற அச்சத்தினால் இந்து அமைப்புகள் இந்த சாதியபாகுபாட்டுத் தடைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக தெற்காசிய சமூகத்தினரிடையே மாறுபட்ட கருத்து காணப்படுகின்றது. இந்த சமூகம் மக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் செல்வாக்கு மிக்க குழுவாக காணப்படுகிறார்கள். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கொண்டு வருவதற்கு இது ஒரு முக்கியமான படி என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான மக்கள் அதை எதிர்க்கின்றனர். தெற்காசிய மக்களை குறிப்பாக இந்திய அமெரிக்கர்களை குறிவைப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஷமா சாவந்த் ஒரு ஒடுக்கும் சாதிய சமூகத்தைச் சேர்ந்தவர். தெற்காசியாவில் எங்கு பார்த்தாலும் நிலவும் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடு அமெரிக்காவில் பரவலாக காணப்படாவிட்டாலும், இங்கும் பாகுபாடு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சாதியை சட்டத்தின் ஒரு அங்கமாக்குவதன் மூலம், அமெரிக்காவில் ´இந்துவெறி´ சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல அமெரிக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் 10 இந்து கோவில்கள் மற்றும் ஐந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி மற்றும் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகளும் இதில் அடங்கும். இந்த சம்பவங்களை சிலர் இந்து சமூகத்தை அச்சுறுத்தும் முயற்சியாக பார்க்கின்றனர்.

அமெரிக்காவில் குடியேறியவர்களில் இந்திய வம்சாவளி மக்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 42 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று 2018 ஆம் ஆண்டின் அமெரிக்க சமூக ஆய்வின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

சியாட்டல் சிட்டி கவுன்சிலின் இந்த சட்டம், 2021 இல் சாண்டா கிளாரா மனித உரிமைகள் ஆணையத்தில் ஈக்வாலிட்டி லேப் கொண்டு வர முயற்சித்ததைப் போன்றது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எதிர்ப்பைத்தொடர்ந்து இந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது.

சியாட்டிலில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவில் ஈக்வாலிட்டி லேபின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் இந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

அம்பேத்கர் ஃபுலே நெட்வொர்க் ஆஃப் அமெரிக்கன் தலித்ஸ் அண்ட் பகுஜன்ஸ் அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பாதுகாக்கப்பட்ட பிரிவில் சாதியைச் சேர்ப்பது, தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த எல்லா மக்களையும் நியாயமற்ற முறையில் ஒதுக்கி வைக்கும். இதில் தலித் மற்றும் பகுஜன் சமாஜூம் அடங்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சியாட்டில் முதலாளிகள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைப்பார்கள். இது தலித்துகள் மற்றும் பகுஜன்கள் உட்பட தெற்காசிய வம்சாவளியினர் அனைவருக்கும் வேலை மற்றும் பிற வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கும்” என்று அந்த அறிக்கை கூறியது.

உரிமைகளுக்காக குரல் எழுப்பும் முக்கியமான அமைப்பான ஈக்வாலிட்டி லேப், திங்களன்று நகர சபை உறுப்பினர்களை ´ஆம்´ என்பதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வலியுறுத்தியது.

“அமெரிக்காவின் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இனப் பாகுபாடு நிலவுகிறது என்பதை நாம் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம். இருப்பினும் அது ஒரு மறைக்கப்பட்ட பிரச்னையாகவே உள்ளது, “என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“வெறுப்பு குழுக்களின் தவறான தரவுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத கூற்றுக்கள் மூலம் ஒரு சிறுபான்மை சமூகம் வெளிப்படையாக தனிமைப்படுத்தப்படுவதைப் பார்ப்பது திகைப்பூட்டுகிறது,” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் புஷ்பிதா பிரசாத் கூறுகிறார்.

புஷ்பிதா பிரசாத்தின் குழு அமெரிக்கா முழுவதும் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.

“முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் சிறுபான்மை சமூகத்தின் (தெற்காசிய மக்கள்) சிவில் உரிமைகளை மீறும். ஏனெனில் முதலில் அது அவர்களை ஓரங்கட்டுகிறது. இரண்டாவதாக, மற்ற சமூகங்களை ஒப்பிடும்போது தெற்காசிய மக்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்று இது கருதுகிறது. மூன்றாவதாக வெறுப்புக் குழுக்கள் அளிக்கும் தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

அரசாணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பொதுப் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஆதரவாளர்கள் அமெரிக்க செய்தித்தாள்களில் பத்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகின்றனர்.

வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டமைப்பு, நகர கவுன்சிலர்கள் மற்றும் தெற்காசிய மக்களுக்கு ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதை ´ஒரு மோசமான யோசனை´ என்று கூறவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சுமார் 100 நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் குழு இந்த வாரம் சியாட்டில் நகர சபைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இந்த முன்மொழிவுக்கு எதிராக “இல்லை” என்று வாக்களிக்குமாறு அது வலியுறுத்தியது.

“உத்தேச அவசரச் சட்டம் அமலுக்கு வந்தால், இந்த ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் இந்துக்கள், தங்களை அப்பாவிகள் என்று நிரூபிக்காதவரை சாதி அடிப்படையிலான பாகுபாடுகளின் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள். இது அமெரிக்க கலாச்சாரம் அல்ல. அது தவறு” என்று வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் தலைவர் நிகுஞ்ச் திரிவேதி கூறினார்.

மறுபுறம், யோசனையை முன்வைத்த பிரதிநிதியான ஷமா சாவந்தும் வாக்களிப்பிற்கு முன் தனது பிரச்சாரத்தை விரைவுபடுத்துவதில் மும்முரமாக இருந்தார்.

இரண்டு இந்திய-அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ரோ கண்ணா மற்றும் பிரமீளா ஜெயபால் ஆகியோருக்கு கடிதம் எழுதி அவர் ஆதரவு கோரினார்.

இந்தியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாடு 1948 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது மற்றும் 1950 இல் இந்தக் கொள்கை அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டது.

இலங்கையில் இந்தியா அளவுக்கு சாதிய ஒடுக்குமுறை மோசமானதாக இல்லாவிட்டாலும் நாளாந்த வாழ்வில் சாதியப் பாகுபாடு என்பது மிக நுண்ணியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ்ப்பாணம் சாதியத்தில் ஊறிய ஒரு பிரதேசமாக உள்ளது. 30 ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் பின்னரும் சாதிய ஒடுக்குமுறையை ஒரு ஒடுக்குமுறை அம்சமாக எண்ணாத ஒரு சூழலே அங்கு காணப்படுகிறது. புரட்சிகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டிய யாழ் பல்கலைக்கழகத்தில் கூட சாதியம் ஆழமாக வேரூன்றியுள்ள. அங்கு காதல் கூட சாதிய அடிப்படையிலேயே மலர முடியும் என்ற நிலையுள்ளது. பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் கூட திறமையின் அடிப்படையில் அல்லாமல் பால், மதம், சாதியம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் ஆட்சியை கைப்பற்றக் கூடிய பிரதான கட்சியான எஸ்ஜேபி இன் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இக்கட்சிக்கு பல்வேறு வழிகளிலும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதும் பிரான்ஸில் உள்ள சிவன் கோவிலின் உரிமையாளரான இவரின் பண பலத்திற்காக குறித்தகட்சி அவரை பிரதான அமைப்பாளராக இன்னமும் வைத்துள்ளது. சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களை அனுபவிப்பது தங்களுடையதும் தனது தந்தையான பொன்னையா வெற்றிவேலுவினதும் பரம்பரை இயல்பு என் அவர் தன் வாயாலேயே கூறிய ஒலிப்பதிவை தேசம்நெற் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சியாட்டலில் சட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் சட்டங்கள் இருந்தும் அவை எதுவும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவில்லை.

யாழ்ப்பாண விஜயத்தின் போதாவது “பல பெண்களை ஏமாற்றிய மோசடியாளர் ஐக்கிய மக்கள் கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் ஜெயந்திரன் “ மீது நடவடிக்கை எடுப்பாரா எதிர்க்கட்சி சஜித்பிரேமதாஸ !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளைய தினம் (23.02.2023) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின் போது யாழ்மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சீர்கெட்ட நிலைதொடர்பில் கவனஞ்செலுத்துவாரா ..? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய கட்சி விடயத்தையே ஒழுங்காக கொண்டு நடத்த முடியாதவர் எப்படி ஒரு நாட்டை நிர்வகிப்பார்..? தன் கட்சிக்குள் இருக்கும் ஊழல் – போலித்தனமுடையவர்களை இனங்கண்டு அகற்ற முடியாதாவர் எப்படி ஒரு நாட்டின் ஊழல்வாதிகளை இல்லாதொழிப்பார்..? எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிவேலு ஜயந்திரனை யாழ் மாவட்ட அமைப்பாளராக நியமித்து சஜித் பிரேமதாஸ, அயோக்கியர் ஒருவரை தங்கள் மாவட்டத்திற்கு பிரதிநிதியாக நியமித்தால் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றி பெறமுடியும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஜெயந்திரன் ஒரு பொறுக்கியாகவோ ரவுடியாகவோ மட்டும் இருந்திருந்தால் அது இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால் ஜெயந்திரன் ஒரு சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா, ஒரு தேசியக் கட்சியின் பிரதான மாவட்ட அமைப்பாளர். இந்த லட்சணத்தில் தான் ஆலயங்களும் அரசியல் கட்சிகளும் மக்களை வழிநடத்துகின்றன? எதிர்கால சந்ததிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றன?

அன்று புலிகளில் இருந்து இன்று சிங்கங்கள் வரை ஜெயந்திரன் போன்றவர்களின் அயோக்கியத்தனத்தை யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் இவ்வாறான இளம்பெண்கள் ஜெயந்திரன் போன்ற பணமும் செல்வாக்கும் கொண்ட ஆசாமிகளின் முன் விட்டில் பூச்சிகளாக மடிந்து வீழ்கின்றனர். பாரிஸில் இளைத்த குற்றங்களுக்காக சிறைசென்ற ‘செம்மல்’ ‘கம்பிகள் ஊடாக’ என்று தன்னுடைய திருகு தாளங்களை எழுதி வெளியிட்டார். அதில் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் கண்டு இளம்பெண்கள் வீழ்வதாகவும் தன்னுடைய நண்பர்களின் மனைவியருக்கே தன்னில் நட்புப்பொங்கியதாகவும் அந்நூலில் அளந்துள்ளார் ஜெயந்திரன். இனி ‘அந்தப்புரக் கம்பிகள் ஊடாக’ என்று ஒரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியம் இல்லை.

மீற்றர் வட்டி கட்டாத அப்பாவிகளை அடித்து அதை வீடியோ எடுத்து போடும் துணிவு யாழில் உள்ள பொறுக்கிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் வந்திருக்கின்றது. அதைக் தட்டிக் கேட்க அதிகாரம் உள்ளவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தயாரில்லை. இன்னும் பல பத்து ஜெயந்திரன்கள், இந்த விளிம்புநிலை தமிழ் பெண்குழந்தைகளை வேட்டையாட தொடர்ந்தும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இதில் பெண்ணியம் பேசும் பெண்ணிய புலிகள் சிங்கங்கள் தங்களுக்கு தாங்களே முதுகுசொறிவதோடு நிறுத்திக்கொண்டு விடுகின்றன. இல்லாவிட்டால் தங்களோடு ஒத்தூத ஒருவரை முகநூலில் இழுத்து கையெழுத்துவேட்டை நடத்துவதோடு சரி.

பணம் அரசியல் செய்வதற்கு அவசியமாகிறது. அதனால் ஜெயந்திரன் போன்ற அயோக்கியர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஜெயந்திரன் போன்றவர்களுக்கு அரசியல் அந்தஸ்தும் கிடைத்த பின் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், அரசியல், அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் இன்னும் அவற்றைப் பெருக்கிக் கொண்டு அதிகார மையங்களாக மாறுகின்றனர். இவர்கள் முன் விட்டில் பூச்சிகளாக வீழும்; இளம்பெண்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரான்ஸ் லாகுர்னே சிவன் கோவிலில் உண்டியலுக்குள்ளும் அரிச்சினை என்ற பெயரிலும் விழும் ஈரோக்கள் நிறுத்தப்பட வேண்டும், மக்கள் லக்ஸ் ஹொட்டலைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அயோக்கியர்களை பொறுப்பான பதவிகளுக்கு பணத்துக்காக மதுவுக்காக மாதுவுக்காக நியமிப்பதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளில் இருக்கும் அயோக்கியர்களைக் களை எடுக்க வேண்டும். இதற்கு இவர்கள் தயாரா?

( இந்த பயணத்தின் போது சஜித்பிரேமதாசவை சந்திக்கும் ஊடகவியலாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்குடன் தேசம் இணையதளம் இந்த தகவலை மீள பதிவிடுகின்றது.)

தேசத்தின் இது பற்றிய முன்னைய கட்டுரை..!

https://www.thesamnet.co.uk//?p=93631

https://www.thesamnet.co.uk//?p=94055

 

“டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.” – இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம்

வாக்கெடுப்பு நடத்தும் போது ஏற்படும் கணிசமான செலவைக் குறைத்தல் உட்பட பல்வேறு வழிகளில் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், விரைவில் டிஜிட்டல் வாக்களிப்பு முறை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தேர்தல் செலவு மற்றும் தேர்தல் பணியாளர்களின் தேவையை வெகுவாகக் குறைக்கும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கத்தின் அழைப்பாளர் அமண்டா ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்குவதை ஒரு செலவாக கருதாமல் எதிர்கால முதலீடாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் மக்களின் மேலாதிக்கத்தை மதிக்கும் பட்சத்தில் அரசியல் சாதக பாதகங்கள் பற்றி சிந்திக்காமல் டிஜிட்டல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

“தேவையான திகதியில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சடித்து ஒப்படைக்க முடியாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படும் என கூறப்படுகிறது. பிரிண்டிங் பில் கோடிக்கணக்கில் உள்ளது. நாம் ஏன் டிஜிட்டல் முறைக்கு செல்ல முடியாது? டிஜிட்டல் வாக்களிப்பு மூலம் போக்குவரத்து, ஊழியர்களுக்கு பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் செலவிடப்படும் கணிசமான தொகை மிச்சமாகும்,” என்றார்.

2048 ஆம் ஆண்டிற்குள் இந்த நாட்டை செழிப்பாக மாற்ற அரசாங்கம் எண்ணுகிறது. அதற்கு பொது சேவையை டிஜிட்டல் மயமாக்குவது அவசியம். அந்த வகையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரேஷ்ட குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு, கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்தியா 2021 இல் மொபைல் அடிப்படையிலான மின்-வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இது ஒரு முன்னோடி திட்டம் மற்றும் இது 95 சதவீதம் வெற்றி பெற்றது. அதே சமயம், 1989 முதல் வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்துகிறது. இந்தியாவால் அதைச் செய்ய முடிந்தால், 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் ஏன் அதைச் செய்ய முடியாது? எனவும் அவர் கேட்டுள்ளார்.

மின்னணு தபால் மூலம் வாக்களிக்கும் முறை, தொலைபேசி மூலம் வாக்களிக்கும் முறை அல்லது இணையவழி வாக்களிப்பு முறைக்கு செல்லுமாறு சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நகரங்களில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குவதே எங்கள் முன்மொழிவு. மின்னணு வாக்குப்பதிவுக்கு இடமளிக்க தேவையான சட்டங்களை மாற்றவும். வாக்களிப்பது மட்டுமல்ல, அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 21 அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை !

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 21 பேர் நிபந்தனைகளின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாணத்திலும் கொழும்பிலும் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் மற்றும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த 21 நபர்களும் 2014 ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வவுனியா, கிளிநொச்சி, பூசா ஆகிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் சில மாதங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், அவர்களது உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நாடளாவிய ரீதியில் பல சாத்வீக போரட்டங்களை மேற்கொண்ட நிலையில், கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த 21 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் 21 பேரையும் எந்த நிபந்தனைகளும் இன்றி அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டிற்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியத்தை தவிர உலகில் வேறு எந்த நிறுவனமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருப்பின், அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்பதற் கான வாய்ப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற கண்டி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல் கட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் எவருக்கும் விளையாட முடியாது எனவும் வலியுறுத்தினார்.

இந்த சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சவால்கள் தொடர்பில் தெரியாமல் தான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்கவில்லை எனவும், தடைகள் வந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை தெளிவுபடுத்துவதற்கும், இந்நிலையிலிருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காகவும் இன்று இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. நாம் இன்று கடினமான காலங்களை கடந்து கொண்டிருக்கிறோம். ஒரு வீட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது வீட்டிலுள்ளவர்கள் அதை உணர்கிறார்கள். ஒரு வணிகம் வீழ்ச்சியடைந்தால், வர்த்தகர்கள் அதை உணர்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் அதை ஒட்டுமொத்த மக்களும் உணருவார்கள்.

பதினொரு மாதங்களுக்கு முன்னர் நாம் இந்த நிலையை எதிர்கொண்டோம். எங்களிடம் எரிபொருள், மின்சாரம், மருந்து எதுவும் இல்லை. ஒரு நாடு என்ற வகையில் நாம் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.

நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் போது இவ்வாறானதொரு பிரச்சினைக்குரிய சூழல் நாட்டில் இருந்தது. ஆனால் முறையான திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மேலும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் உரங்களை வழங்கியதால், இந்த முறை பெரும்போகத்தில் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது.

இப்போது எரிபொருள் வரிசைகள் இல்லை. மின்சாரம் உள்ளது. அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை முந்தைய நிலையை விட படிப்படியாக சிறந்த நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று பணவீக்கம் உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் மிக அதிகம். அதனால், வர்த்தக சமூகம் சிரமங்களை எதிர்நோக்குவதை நாம் அறிவோம். சட்டத்தரணிகளும் தங்கள் பணியை மேற்கொள்வதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம் என்றே கூற வேண்டும். மேலும் பல பிரச்சினைகள் நமக்கு முன்னால் உள்ளன.

ஒரு நாடு வங்குரோத்தடையும் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் தான் செல்ல வேண்டும். அதைத் தவிர, ஒரு நாடு வங்குரோத்தடையும் போது உதவி செய்யும் வேறு எந்த அமைப்பும் உலகில் இல்லை. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே மீண்டு வந்துள்ளது. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து கிரீஸ் மீண்டுவர 13 ஆண்டுகள் சென்றது. பதின்மூன்று ஆண்டுகள் ஜனாதிபதி பதவியில் இருக்கும் எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. இந்த வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஒரே ஒரு ஏணிதான் உள்ளது. அதுதான் சர்வதேச நாணய நிதியம். பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு கதைகளை கூறி வருகின்றன. சரிந்த பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு வேறு ஏணி இருந்தால் சொல்லுமாறு நான் அவர்களுக்கு கூறுகின்றேன்.

2019 இல் இருந்ததைப் போலவே நமது வரி வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. தற்போது அது 09% ஆக குறைந்துள்ளது. நீங்கள் உங்கள் மக்களுக்கு வரிச்சலுகை வழங்குவீர்களாயின், நாம் எவ்வாறு எங்கள் மக்களிடம் அதிக வரி வசூலித்து உங்களுக்கு நிவாரணம் வழங்குவது என்று அவர்கள் எம்மிடம் கேட்கிறார்கள்.

அதனால், எமது கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கத் தயாராக உள்ளோம். சர்வதேச நாணய நிதியம் அந்த முன்மொழிவுகளுடன் உடன்படுகிறதா என்பதைப் பார்க்க முடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அதன்படி, செப்டம்பரில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பாடு காண முடிந்தது. அவர்கள் எமக்கு நடைமுறைப்படுத்த பதினைந்து விடயங்களைக் முன்வைத்தார்கள். டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அதனை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியம் கால அவகாசம் வழங்கியது. ஆனால் அன்று அதைச் செய்ய முடியவில்லை. பின்னர் ஜனவரி 31ஆம் திகதி வரை அவகாசம் பெற நடவடிக்கை எடுத்தோம். அப்போதும் அந்த 15 விடயங்களை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இறுதியாக பெப்ரவரி 15 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. பெப்ரவரி 15 ஆம் திகதி மாலை 06:00 மணிக்குள் அனைத்து விடயங்களையும் நிறைவேற்றி வாஷிங்டனுக்கு அனுப்பினோம்.

இந்தப் பதினைந்து விடயங்களில் ஒரு விடயம் மட்டுமே தாமதமாகி வருகிறது. அது மின்சார சபை கட்டண உயர்வு தொடர்பானது. மின்சார சபைக்கு வருடாந்தம் 230 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது. நிறுவனங்களைப் பராமரிக்க அரசாங்க வரிகளை பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டில் ஒருவர் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எதிர்த்தார். இதன் காரணமாக, சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறுவது ஆறு வாரங்கள் தாமதமானது. இல்லையென்றால், ஜனவரி இறுதிக்குள் இதனை நிறைவுசெய்திருக்கலாம். தற்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட 15 விடயங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்போது சர்வதேச நாணய நிதியத்திற்கான சந்தர்ப்பமே உள்ளது.

எங்களுக்கு கடன் வழங்கிய பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா என்பன கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்குத் தேவையான நிதி உத்தரவாதத்தை வழங்கும் முறைமை பாரிஸ் கிளப்பில் உள்ளது. இந்தியாவிடம் மற்றொரு முறைமை உள்ளது. சீனா மற்றொரு முறையை நடைமுறைப்படுத்துகிறது. பாரிஸ் சமூக நாடுகள் தங்கள் சொந்த முறையைத் தவிர இந்தியாவின் முறையையும் ஏற்றுக்கொண்டன, ஆனால் சீனாவின் முறை குறித்து இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.

இது குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டுவந்து கலந்துரையாட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியமும் பரிந்துரைத்தது. ஆனால் சீனா உலக வல்லரசாக இருப்பதால் அவர்களின் முறை வேறு. ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடுகளின் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது குறித்து அங்கு ஆராயப்பட உள்ளது. அதில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை குறித்து சீன நிதி அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்க் கப்பட்டுள்ளது. அவர்களின் நிலைப்பாட்டின்படி, செயல் படுத்த இரண்டு அல்லது மூன்று மாற்று வழிகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி பெறாவிட்டால், எதிர்காலத்தில், எரிபொருளின்றி 12 மணி நேர மின்வெட்டுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும். சிறு போகத்திற்கு உரம் கிடைக்காது. இந்த நிலையில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

நாட்டின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையாகும். அதை நோக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும். அது இல்லாமல், இந்த பிரச்சினையை மறைக்க முடியாது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும். ஆனால், பிரதம நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக அமர்ந்தாலும் கூட நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை , நீதிமன்றத்தில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. பொருளாதாரத்தை முன்கொண்டுசெல்லும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே இருக்கிறது. எனவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.

தேவைப்பட்டால், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, இரான் மற்றும் ஹர்ஷ போன்றவர்களின் முன்மொழிவுகளைக் கூட சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்க முடியும். இதற்கான ஆதரவையும் வழங்க முடியும். சில அரசியல் கட்சிகள் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதில்லை. இது தொடர்பாக மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுகின்றனர். நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட முடியாது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நாங்கள் பொறுப்பு. எனவே, பொருளாதாரத்தைக் கட்டியெ ழுப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன்.யாரிடமாவது மாற்று முன்மொழிவுகள் இருந்தால், வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களுடன் கலந்துரை யாடும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.

யாரும் முன்வராத நிலையிலே இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகையில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதை அறிந்தே ஜனாதிபதிப் பதவியை ஏற்றேன். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன். இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்பத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடின்றி 225 பேர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கு உங்களின் தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறோம். 2024 ஆகும் போது மீண்டும் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.