24

24

மாணவர்கள் இல்லை – யாழ்ப்பாணத்தில் மூடப்படுகிறது தமிழ் கலவன் பாடசாலை!

யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் !

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் பகுதிகளில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பை நிச்சயம் பாதிக்கும் என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தியாவில் நூற்றில் இருந்து நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் எங்களுக்கு காணி வேண்டும்.” – காணி அற்றோர் மக்கள் இயக்கம் போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது.

நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் , பெருந்தொகை வாடகையை செலுத்த முடியாது தவித்து வருவதாகவும் , அதனால் யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் , அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு சென்று செயலாளரிடம் மகஜரை கையளித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்தனர். அதேவேளை அரச காணிகளை இராணுவத்தினர் கடற்படையினர் விமான படையினர் தமது படைமுகாம்களை அமைக்க தருமாறும் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதுடன் , அக்காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஒரு வருடத்தை தொட்டது ரஷ்ய – உக்ரைன் போர்” – இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட மனித உயிர்கள் பலி !

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது தாக்குதலை தொடங்கியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து சின்னாபின்னமாகிவிட்டன.

இந்த சண்டையில் சுமார் 2 லட்சம் வீரர்களும், 42 ஆயிரம் பொதுமக்களும் உயிர் இழந்துவிட்டனர். 57 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். பலம் வாய்ந்த ரஷியாவிடம் உக்ரைன் சில நாட்களில் வீழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் அதி நவீன ஆயுத உதவிகள் செய்ததால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் ஆக்ரோஷத்துடன் போரிட்டு வருகிறது.

இதனால் இந்த போர் மாதக்கணக்காக நீடித்து இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. போர் தொடங்கி இன்று 366-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனாலும் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் அமைதி நிலைக்க ரஷியா போரை நிறுத்துவது தொடர்பாக 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைனை விட்டு ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

ரஷியாவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து 141 நாடுகளும், எதிராக 7 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகள் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. 141 நாடுகள் ஆதரவு கொடுத்ததால் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நடந்த விவாதத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷியாவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ரஷிய பாதுகாப்பு துறை மந்திரி கெர்கய் குற்றம் சாட்டினார்.

 

வருடம் முழுவதும் இயங்கும் சுற்றுலாத் தளமாக  மாற்றியமைக்கப்படுகிறது இலங்கை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

வருடம் முழுவதும் இயங்கும் சுற்றுலாத் தளமாக  இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில்

“சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க;

அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒரு சுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.

3.4 மில்லியன் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்துள்ள உலக உணவுத் திட்டம்!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கவனம் செலுத்தும் நிலையிலேயே  உள்ளது என்று உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத்திட்டம் இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட வீட்டு உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி 33 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கொழும்பின் நகர்ப்புறங்களில் கடந்த ஜனவரியில் உணவுப் பணவீக்கம் 60.1 சதவீதமாக இருந்தாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் பொது உணவு விநியோகம், பாடசாலை உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு மூலம் 3.4 மில்லியன் மக்களுக்கு உதவ தாம் திட்டமிட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சமூக வலைத்தளங்களில் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது !

பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (22) நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஒருவர்  மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவிற்கு முறைப்பாடு ஒன்றினை வழங்கி இருந்தார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை மாணவியின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்தனர்.

குறித்த இளைஞன் பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து குறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன் அதனை காணொளியாக தனது கைத்தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.

பின்னர் 2 வருடங்களாக தொடர்ந்த காதல் பின்னர் இடைநடுவில் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த இளைஞன் விரக்தியுற்று மாணவியின் பெற்றொருக்கு பல்வேறு அழுத்தங்களை தொலைபேசி ஊடாக வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சமூக வலைத்தளங்களில் அம்மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருந்தன.

இதனை அடுத்து அம்மாணவியின் தாயார் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்து நேற்று (23) கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 8 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழிநுட்ப பிரிவினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற கட்டளையையும் மீறி தமிழர் பகுதியான குருந்தூர்மலையில் கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது. இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது . இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர் மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும் போது பூரண மடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமான வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபடும் இராணுவ, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மலையடி வாரத்தில் தங்கியிருப்பதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் 4kg கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

4 kg 100g கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டீல் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருத்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணும், மீட்கப்பட்ட கஞ்சா பொதியும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வரமுன்பே யாழில் உள்ள உதவாக்கரைகளோடு கூட்டு! யாழில் சோபையிழந்த கூட்டம்!! கைதட்டவே மக்கள் கூச்சம்!!!

பெப்ரவரி 23 இல் யாழ் ரக்கா லேனில் சஜித் பிரேமதாஸாவின் சமாஜி ஜன பலவேய – ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. சில நூறுபேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களைப் பற்றி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸாவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சட் பதியுதீனும் உணர்ச்சி பூர்வமாக பேசிய போதும் யாரும் அவர்களது உரைகளுக்கு கரவோசம் பண்ணாமல், அவர்களது உரையை உதாசீனம் செய்பவர்களாக, அக்கூட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லாதது போல் இருந்தனர்.

இக்கூட்டத்தை பணமோசடி மற்றும் குற்றச்செயல்களுக்காக பிரான்ஸில் சிறையிலடைக்கப்ட்ட வெற்றிவேலு ஜெயந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். இவர் தற்போது பெயரில் உள்ள எழுத்துக்களை இடமாற்றியும், வயதைப் பத்து வருடங்கள் குறைத்தும் மோசடியான அடையாள அட்டையோடு உலாவி வருகின்றார். ஆட்சியைப் பிடிக்கப்போவதாகக் கூறும் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் விரோத சக்திகளோடு கைகோர்த்துள்ளது.

இளம்பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்தும் வெற்றிவேலு ஜெயந்திரன் பெண்களைப் பற்றி மிக மோசமாக இழிவுபடுத்தி மிகக்கேவலமாக தூசணங்கள் பேசிய விடியோபதிவு இரு வாரங்களுக்கு முன் தேசம்நெற் இல் வெளியானது. இச்செய்தியின் கீழும் அக்காணொலி இணைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தை வெற்றிவேலு ஜெயந்திரனுடன் இணைந்து கிருபாகரன், விஜயகாந், மதன்ராஜ் ஆகியோரும் ஏற்பாடு செய்திருந்தாக தெரிய வருகின்றது. இவர்களும் வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ரக்காலேனில் இடம்பெற்றதற்கும் ஜெயந்திரனுக்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. ஜெயந்திரனினால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்ட இளம்பெண்களின் நீண்ட படிட்டியலில் ஒருவர் ரக்கா லேனிலேயே வசித்தவர். ரட்சணிய சேனையில் இருந்த சகோதரியான பெண்ணை கவர்ந்து வந்து பின்னர் உதறிவிட்டுவிட்டு அவருடைய தங்கை பக்கம் தாவியவர் வெற்றிவேலு ஜெயந்திரன். பாதிக்கப்பட்ட அப்பெண் இன்னமும் திருமணமாகாமல் வாழ்கின்றார். இவ்வாறு பல இளம்பெண்களின் வாழ்வை சின்னா பின்னமாக்கிய ஒருவரை வைத்துக்கொண்டு ‘’இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன்” என்று சஜித் ரீல் விடுகின்றார். அதற்கு அக்கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பேச்சாளர் உமா சந்திரபிரகாஷ் நூல் எடுத்துக்கொடுக்கின்றார்.

வெற்றிவேலு ஜெயந்திரனின் முழுக் குற்றச்செயல்களையும் ஜெயந்திரனால் பாதிக்கப்பட்ட குறைந்தது நான்கு பெண்களை உமா சந்திரபிரகாஷிற்கு நன்கு தெரியும். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தி இத்தீய மக்கள் விரோத சக்திகளை வைத்தே யாழில் அரசியல் செய்கின்றது. “வெற்றிவேலு ஜெயந்திரன் போன்றவர்கள் தமிழ் பிரதேசங்களில் தேர்தலிலும் வெற்றி பெற்றால் யாழ் மண் மீள முடியாத சீரழிவுக்குள் தான் செல்லும்” என்கிறார் ஜெயந்திரனினால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர். அவர் மேலும் குறிப்பிடுகையில் “ராஜபக்சக்களைப் பற்றிக் கதைக்க இவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பிய அவர் “ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்தனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரமுன்னரேயே கொள்ளையர்களை கட்சியில் சேர்த்துள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே ஆபத்தாகிவிடும்” என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் இக்கூட்டம் பற்றி தெரிவிக்கையில் “நான் லக்ஸ் ஹொட்டலில் பார்டிகளில் கலந்துகொகிறனான். வற்புறுத்திக் கூப்பிட்டார்கள் வரமலிருப்பது சரியில்லை என்பதால் தலையை காட்டுவதற்காக வந்தேன்” என்றார். உங்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள பணம் தந்தார்களா? எனக் கேட்டபோது “நான் பணம் வாங்கி வரவில்லை. ஆனால் மற்றவர்கள் பணம் வாங்கினார்களா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார். வெற்றிவேலு ஜெயந்திரனுடைய ஒலிப்பதிவைக் கேட்டீர்களா என்று கேட்டபோது “கேள்விப்பட்டேன். ஆனால் இப்ப இதையெல்லாம் யாரும் அவ்வளவு பெரிதாக எடுப்பதில்லை” எனத் தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் பெண்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இன்று அரசியலில் வெற்றிவேலு ஜெயந்திரன் போன்ற மொள்ளமாரிகளும் முடிச்சவிக்கிகளும் தான் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக ஊளையிடுவதாக’ அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் தேசம்நெற் க்கு தெரிவித்தர். “அவர்களிடம் பண பலம் அரசியல் பலம் இருக்கு. அதை வைத்து எல்லாரது வாய்களையும் அடைத்துவிடுவார்கள்” என்று சலிப்புடன் தெரிவித்தார் அவ்வூடகவியலாளர்.