25

25

ஐ.நா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை !

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துமாறும், உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை உடனடியாக வெளியேறுமாறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளவில்லை.

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ராம் சோரும் தனது இலங்கை விஜயத்தின் போது ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அ‍மெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்,ஜேர்மனி, கனடா உள்ளிட்ட 141 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், ரஷ்யா, பெலாரஸ், ‍கொரியா, எரித்திரியா,மாலி, நிகரகுவா, சிரியா ஆகிய 7 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இ‍தேவேளை, இலங்கை, சீனா, பாகிஸ்தான், கியூபா  உள்ளிட்ட 32 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இலங்கையில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாது – மின்சாரசபை

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருடத்தில் மின்சார சபையின் 72 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களில் 22 பேர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை வழமையாக நடத்துவதற்கு 123 பொறியியலாளர்கள் பணியாற்ற வேண்டும், ஆனால் இன்று 100 பேரே பணிபுரிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த பொறியியலாளர்கள் பற்றாக்குறையால், வருங்காலத்தில் ஆலையை நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என்றும், அப்படி நடந்தால், மின் நெருக்கடி கடுமையாகும் என்றும் அவர் கூறினார்.

 

“உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விலைவாசிகள் உயர்ந்த வண்ணம் உள்ளன. விலைவாசி அதிகப்பினாலும் வரி அதிகரிப்பினாலும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது.பலருக்கு வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத கடும் கஷ்டமான நிலை காணப்படுகின்றது.

அப்படியான சூழ்நிலையிலே இந்த உள்ளூராட்சி தேர்தல் என்கின்ற விடயத்தை  பேசு பொருள் ஆக்கி நாட்டிலே அதைக் குறித்த ஒரு சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை அதன் பால் திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

திசை திருப்புவதற்காக அரசாங்கம் சார்பிலும் ஜனாதிபதி சார்பிலும் முயற்சிகள் நடைபெற்றாலும் கூட தேர்தல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயம்.

ஒரு நாடு ஜனநாயக நாடா இல்லையா என்பதை தீர்மானிப்பது உரிய காலத்திலே தேர்தல்கள் கிராமமாக நடத்தப்படுவது முக்கியமான ஒரு அம்சமாகும். ஆகையினாலே நாட்டிலே பாரிய மாற்றங்கள் சென்ற வருட நடுப்பகுதியிலே இடம்பெற்றன

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அதாவது ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடினர். பிரதமர் தானாக பதவி விலகினாலும் கூட தங்களுடைய நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் ஆட்சியை தொடர்ந்து வருவதோடு  நாட்டை ஆட்டிப் படைக்கின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திடீரென வந்த புத்தர் சிலையால் பதற்றம் !

புத்தூர், நிலாவரையில் திடீரென வந்த புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக புத்தர் சிலை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், பிரதேச சபையின் தலையீட்டையடுத்து, இன்று சனிக்கிழமை பகலில் இந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது.

சனிக்கிழமை பகலில் இந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது.

 

யாழ்ப்பாணத்தில் தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்பு !

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென தெரியவருகிறது.

உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடாத்தும் பொலிஸார் கொலையா? தற்கொலையா? தீ விபத்து ஏதும் ஏற்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் போலியான ஆவணங்களை தயாரித்து அரச காணிகளை அபகரிக்கும் அரச அதிகாரிகள் – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்து அரசகாணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சவுக்கடி பகுதியில் காணியற்ற மக்கள் அரசகாணிகளில் குடியேறமுற்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

சவுக்கடி பகுதியில் பெருமளவான மக்கள் காணியற்று உள்ள நிலையில் அங்குள்ள அரச காணிகளை தனவந்தர்கள் பெருமளவில் காணிகளை அபகரித்துவரும் நிலையில் காணியற்ற மக்கள் தொடர்ந்து காணியற்ற மக்களாகவேயிருந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நேற்று மாலை அப்பகுதியில் போராட்டம் நடாத்திய நிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அப்பகுதிக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக காணி அபகரிப்புகள் பெருளமவில் நடைபெற்றுவரும் நிலையில் அதனை தடுக்க முனையாதவர்கள் தாங்கள் இருப்பதற்கு காணிகளை அடைக்கமுனையும்போது தங்களை கைதுசெய்யமுனைவதாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

ஏவ்வாறாயினும் தமக்கான காணிகளை பெற்றுத்தர அதிகாரிகள்,அரசியல்வாதிகள் முயற்சிகளை செய்யவேண்டும் என இங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆத்துடன் அரசகாணிகளை பாதுகாப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்றை கூட்டி காணி மாபியாக்கல் தொடர்பான விபரங்களை வெளியிடப்போவதாகவும் காணிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உறுதியளித்தார்.

உலக பல்கலைக்கழகங்களில் இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகமும் !

உலக பல்கலைக்கழகங்களின் ‘யுஎஸ் நியூஸ் இன்ஸ்டிட்யூட்டின்’ தரவரிசையின் படி உலகின் தலைசிறந்த 1,000 பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது.

உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையின்படி, பேராதனை பல்கலைக்கழகம் உலகளவில் 901ஆவது இடத்தையும் ஆசியாவில் 240ஆவது இடத்தையும் பிடித்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறானதொரு புதிய அங்கீகாரத்தை பெற்ற முதலாவது பல்கலைக்கழகம் பேராதனை எனவும் பேராசிரியர் பாராட்டியுள்ளார்.

உலகப் பல்கலைக்கழகங்கள் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் பதின்மூன்று சிறந்த குறிகாட்டிகள் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த குறிகாட்டிகளில் உலகளாவிய ஆராய்ச்சி நற்பெயர், பிராந்திய ஆராய்ச்சி புகழ், வெளியீடுகள், மாநாடுகள் போன்றவை அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சர்வாதிகாரமாக மேற்கொள்ளப்படும் அதானி குழுமத்தின் காற்றாலை செயற்றிட்டம் – மன்னார் தீவில் வாழும் மக்கள் அச்சுறுத்தல் நிலையில் !

மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் காற்றாலை செயற்திட்டம், சர்வாதிகராமான முறையில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாக மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்றைய தினம் மன்னார் பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போது பிரஜைகள் குழுவினரால் குறித்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

“மன்னார் தீவு பகுதியில் ஏற்கனவே அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டிருக்கின்ற காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை தற்பொழுது விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எமது மன்னார் மாவட்டத்து மக்கள் இந்த காற்றாலை பிரச்சினையின் காரணமாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை அமைதி வழியிலே சாத்வீகமான முறையிலே நடத்தி இந்த நாட்டு அரசாங்கத்திற்கும் அதிபருக்கும் தங்களுடைய ஆதங்கங்களை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

இந்த காற்றாலை மின் பூங்கா திட்டத்தின் மூலமாக மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் கூட அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்காமல் மக்களுடைய வேண்டுகோளை புறந்தள்ளி திரும்பவும் தெற்கு பகுதியில் முடித்து வடபகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலே இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றார்கள்.

ஏற்கனவே தலைமன்னார் தொடக்கம் தாழ்வுபாடு வரை கிட்டத்தட்ட 36 காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறன.

அந்த குறிப்பிட்ட பகுதிக்குள் தலைமன்னார், நடுக்குடா ,பேசாலை, பெரியகரிசல், புதுகுடியிருப்பு, சின்னகரிசல், தோட்டவெளி, தாழ்வுபாடு, கீரி போன்ற கிராமங்கள் இந்த காற்றாலை மின் திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கிறன.

இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது மீன்பிடி, சிறு விவசாயம், அதே போல் அந்த பகுதியில் இருக்கின்ற பனை, தென்னை வளங்களை பயன்படுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.    ஏற்கனவே அமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக மீனவர்கள் மீன்பிடியிலே கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றனர்.

வீதிகளில் போராட்டங்களை மேற்கொண்டு மன்னார் மக்கள் தங்களுடைய அவல நிலையை பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். என்றாலும் கூட இவை எவற்றையும் கவனத்தில் எடுக்காமல் திரும்பவும் இப்படியான ஒரு செயல் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது என்பதை நினைக்கின்ற போது எமக்கு மிகவும் மனவேதனையாக இருக்கின்றது.

நமது மன்னார் மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் மன்னர் தீவுப் பகுதிக்குள் தான் வாழ்ந்து வருகின்றார்கள். நகரமும் தீவுப்பகுதிகுள் தான் அமைந்திருக்கின்றது.   எனவே இத்திட்டத்திற்காக பெருமளவு காணிகள் தனியாரிடம் இருந்து அதிகமான விலை கொடுத்து வாங்கப்பட்டதன் காரணமாக  விவசாயம், கடற்றொழில் அதேபோன்று பனை தென்னை வளங்களினால் தங்களுடைய ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருக்கும் பலர், தற்போதும், எதிர்காலத்திலும் அனைத்தையும் இழந்து ஒரு வறுமை நிலைக்குள் தள்ளப்படவேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் நகரத்தில் இருக்கின்ற வியாபாரிகளின் வியாபாரங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான துன்ப நிலையில் தான் நாங்கள் மன்றாட்டமாக இந்த அரசாங்கத்திடம் இச்செயற்திட்டத்தை வேறு பயன்பாடு இல்லாத இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஏற்கனவே வடபகுதியில் ஒரு நாளைக்கு ஆயிரம் தொடக்கம் இராண்டாயிரம் வரை இந்திய இழுவை படகுகள் மீன்வளத்தை அழித்துக் கொண்டு செல்கிறார்கள்.   இது ஒரு புறம் இருக்க இந்த காற்றாலைகளும் கடற்கரையோரங்களில் அமைக்கும் போது கரையிலே மீன்கள் வருகின்ற நிலைமை குறைவடையும்.

இதனால் கரையோர மீனவர்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றார்கள். இன்னும் சில காலங்களில் இந்தத் தீவை விட்டு வெளியேற வேண்டிய துன்பமான நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

இந்த ஆபத்தை உணர்ந்தவர்களாக மிகவும் வினையமாக இந்த நாட்டு அதிபரிடமும், அரசாங்கத்திடமும் இந்திய தனியார் நிறுவனமான அதானி நிறுவனத்திடமும் வேண்டி கொள்வது,  நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தேவை. ஆனாலும் மக்களுடைய வாழ்வாதாரத்தை வாழ்விடங்களை அழித்து ஏற்படுத்தும் அபிவிருத்தியாக வேண்டாம்.

அப்பிடியான அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவே மன்னார் மாவட்டத்தில் பாவிக்கப்படாத எத்தனையோ ஏக்கர் காணிகள் உள்ளன. அவ்வாறான காணிகளை இனம் கண்டு அந்த இடங்களின் இந்த திட்டத்தை மாற்றி இந்த மன்னார் தீவில் நாங்கள் வாழ்வதற்கான உரிமையை தந்துவமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.