March

March

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு – அவதியுறும் நோயாளிகள் !

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டுவரும் நோயாளர்களை சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டு செல்வதற்குகூட  வைத்தியசாலை ஊழியர்கள் இன்மையால் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள சைபர் துன்புறுத்தல்கள் !

பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கவலை வெளியிட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான முறைப்பாட்டு பொறிமுறைகள் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மாற்றமடைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெருந்தொற்று மற்றும் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உலகில் வாழ்க்கை பாரிய விதத்தில் மாற்றமடைந்தது, தொழில்கள் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகள் மாற்றமடைந்தன எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

“சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்” – சிறுவயது திருமணங்களுக்கு எதிராக கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்கள் கவனயீர்ப்பு செயற்பாடு !

அண்மைய தரவுகளின் படி உலகத்திலேயே சிறுவயது திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளுக்குள் இலங்கை அமைந்துள்ள தென்னாசிய வலயம் முன்னணியிலுள்ளது. ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவயது திருமண வீதம் குறைவாக உள்ள போதும் 16-18 வயதுக்கு இடையில் திருமணம் செய்வோர் வீதம் 12 வீதமாகவும் , 16 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்து கொள்ளும் வீதம் 2 வீதமான காணப்படுவதாகவும் யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும்  அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

பாடசாலை கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைந்து பல சிறுமிகள் கல்வியை தொடர வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் அரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி பரவல், இளவயத  தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு  மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்.” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச  அதிகாரி ஒருவர் தேசம்நெட்இடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும்  லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழுவினர் கருத்து தெரிவித்த போது ” சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுவயது திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”  என வலியுத்தப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

“ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் உச்சமடையும்.” – SLUNBA எச்சரிக்கை!

பொருளாதாரம் சுருங்குவதைத் தடுக்க மத்திய வங்கி ஆளுநரால் உறுதியான முடிவை எடுக்க முடியாவிட்டால், ஏப்ரல் மாதத்திற்குள் நுகர்வோர் சந்தை 60% சுருங்கும் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பு (SLUNBA) தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் நுகர்வோர் சந்தை 40% சுருங்கியது, இதன் காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும், தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, ​​இலங்கை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வசதிகளை குறைக்க வேண்டும் என அரசாங்கம் கோருகிறது, SLUNBA தெரிவித்துள்ளது.

எனவே, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என SLUNBA தலைவர் தன்யா அபேசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் (NCASL) தலைவர் சுசந்த லியனாராச்சி கூறுகையில், அரசாங்கம் டொலரை கட்டுப்படுத்தவில்லை, ஆனால் அது பணவீக்கத்தை கட்டுப்படுத்தியது மற்றும் பொருளாதாரத்தை சுருங்கும்போது மந்தநிலையை உருவாக்கியது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு ஆகியவற்றை விவரிக்கும் போது, ​​மார்ச் 2022 முதல் சந்தை இயங்கவில்லை என்றும் இலங்கையில் டொலர்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“டொலர் மாற்று வீதம் குறைக்கப்பட்டது, மேலும் இலங்கை ரூபாய்களை பெற முடியாததால் மக்கள் தங்கள் டொலர் கையிருப்புகளை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது மக்களிடம் கொள்வனவு செய்யும் சக்தி இல்லை. மக்கள் கையில் ரூபாய் இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“அவள் நாட்டின் பெருமை” – மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவம், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டுக் குறியீட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எழுத்தறிவில் முன்னணியில் திகழும் இலங்கைப் பெண்கள், இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விசேடமானது.

இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இந்நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பை பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக எனது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும்.

நிர்வாக மற்றும் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைக்குள் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, அரச, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க விரிவான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

“பாலின சமூக, சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல்” குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான பணிகள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இதனைத்தவிர, தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்க, எதிர்பார்த்துள்ளதுடன், ஒம்புட்ஸ்வுமன் ஒருவர் மற்றும் பெருந்தோட்ட, ஆடை உற்பத்தி ஆகிய துறைகளின் பணிப்பாளர் சபைகளில் பெண்களை நியமிப்பதற்கான அவசியம் குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக திறமையுள்ள பெண்களை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு முழுமையான பங்களிப்பைப் பெறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. நவீன உலகத்தில் பெண்களின் பங்களிப்பை சரியாக புரிந்துகொண்டு, இதில் பங்களிப்புச் செய்யக்கூடிய பெண்களை எமது நாட்டில் வலுவூட்டுவது இந்தப் பணிகளின் நோக்கமாகும்.

நாட்டில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், “2048 அபிவிருத்தியடைந்த நாட்டை” உருவாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்ய, இந்நாட்டின் அனைத்துப் பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து, இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கள்ளக்காதலால் பெண் குழந்தையை கவனிக்காது விட்ட தாய் – உடலில் வீக்கம் மற்றும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி !

நேற்று பிற்பகல் பின்கெல்ல பிரதேசத்தில் வீடொன்றில் 06 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலுடன் வசித்து வந்த குழந்தை பல நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், மருத்துவ உதவி வழங்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை இதற்கு முன்னர் பல தடவைகள் தாயின் கள்ளக்காதனால் உடல்ரீதியாக தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தையின் உடலில் பல தழும்புகள் மற்றும் வீக்கங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பாக குழந்தையின் 25 வயது தாயும், பெண்ணின் 29 வயது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

IMF கடன் – உத்தரவாதமளித்தது சீனா !

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா உத்தரவாதம் அளித்துள்ளது.

சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக  புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வௌியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா தனது உத்தரவாதத்தை வழங்க தாமதித்ததன் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவித் திட்டம் தாமதமானது.

மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் !

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டு குழுந்தைகள் தாய் மற்றும் தந்தையே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்றையதினம் வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இருபிள்ளைகளான கௌ. மைத்ரா வயது9 ,கௌ.கேசரா வயது3 ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

“எந்த வகையான நாசகார செயற்பாடுகளை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” – நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

“எந்த வகையான நாசகார செயற்பாடுகளை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் அவர் தெரிவிக்கையில்;;

உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள அமுல்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகவும், தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் கஷ்டங்கள் தொடரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMF ற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி , எந்த வகையான நாசகார செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்றொரு ஜூலை 09 ஆம் திகதி நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று கோரியதோடு நாட்டை சீர்குலைப்பதை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் முப்படை மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம் என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

“29 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் கூட கிடையாது.” – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம் !

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதேச செயலகம். இதற்கு கணக்காளர் இல்லை என்று சொல்வதோ அல்லது நியமிக்கப்படவில்லை என்று சொல்லுவதோ ஒரு அலட்சியமான பதில்.

இலங்கையில் பிரதேச செயலகம் ஒன்றுக்கு கணக்காளர் தேவையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். இது முற்றுமுழுதாக ஒரு தவறான விடயம். உங்களுடைய பொது நிர்வாக அமைச்சினுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாகவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடத்துவது இல்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் எடுக்கப்படாத பல தீர்மானங்களை, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற அடிப்படையில் செயற்படுத்துகின்றார்.

உங்களுடைய பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் இல்லை என்றால் அது தேவையில்லாத விடயம் என நீங்கள் கூறுவீர்களா. 29 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகம். அங்கு நிதியினை கையாள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நியமிக்கப்படவில்லை.

நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு இரவில் இதனை செயற்படுத்துவோம் என்று. அதேபோன்று இராஜாங்க அமைச்சர்களான வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்கள் கூறினார்கள் கணக்காளரை நியமிக்காவிட்டால் நிர்வாகத்தினை முடக்குவோம் என்று.

ஆனால் இன்று அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அதேபோன்று கருணா அம்மானும் இதுகுறித்து பேசினார். ஆனால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.“ என தெரிவித்துள்ளார்.