இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நகர பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
துஷ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட தொல்லியல் சின்னம் பற்றிய அறிவிப்பு பலகை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய நிலையில், குறித்த அறிவிப்பு பலகை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கிளிநொச்சி பேரூந்து மத்திய நிலையம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை போக்குவரத்து சபையினரும் தனியார் போக்குவரத்து சங்கத்தினரும் ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே மக்களுக்கு சிறந்த சேவையை பேருந்து நிலையத்தினூடாக வாழக்கூடியதாக இருக்கும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் மக்கள் சேவையை மனதில் கொள்ளாமல் இலாபமீட்டும் நோக்கில் செயற்படுவதாலேயே பிரச்சினைகள் எழுகின்றன. இதனால் பேருந்துகளில் பயணிப்போர் மாத்திரமல்ல வீதியில் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே பிரதான வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பாக யாழ். மாவட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது ஆராயவுள்ளதுடன், இது தொடர்பில் யாழ் உட்பட வடமாகாணத்தின் எனைய மாவட்ட தலைவர்களிடமும் காவல்துறை உயரதிகாரிகளுடனும் கேட்டுக்கொள்ள இருக்கின்றேன்.” என்றும் தெரிவித்தார்.