01

01

“நீங்கள் அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள்.” – மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு !

தொலைபேசி அல்லது வட்ஸ்ஏப் ஊடாக நீங்கள் அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள் என இனந்தெரியாதவர்களால் அறிவிக்கப்பட்டால் அதனை நம்ப வேண்டாம் என மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

அல்லது குறித்த அழைப்பு மற்றும் தகவல்களை 0765200290 என்ற இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறும் மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்து உயிரை காப்பாற்றிய 25 வயது மகள் !

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண், தனது தந்தைக்கு ரகசியமாக சிறுநீரக தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்த தந்தை உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம், கிர்க்வுட் நகரை சேர்ந்தவர் ஜான் (60). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். குடும்பத்தினர் சிறுநீரக தானம் வழங்குவதை ஜான் விரும்பவில்லை.

பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு யாரோ ஒரு பெண் அவருக்கு சிறுநீரக தானம் செய்ய முன்வந்திருப்பதாக ஜானிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அவர் ஏற்றுக் கொண்டார். கடந்த 16-ம் திகதி அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நலம் தேறிய பிறகு தனக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய பெண்ணை சந்திக்க அவர் விரும்பினார். இதன்படி சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவமனையில் ஜானை சந்தித்தார். சிறுநீரக தானம் வழங்கிய பெண்ணை பார்த்ததும் அவர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார். அந்தப் பெண் அவரது ஒரே மகள் டெலாய்னி (25).

“கடவுளே, எனது மகளா எனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கினாள்’’ என்று அவர் கண்ணீர் மல்க கூறினார். மகளை ஆரத் தழுவி உச்சி முகர்ந்து வாழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இதுகுறித்து டெலாய்னி கூறியதாவது: எனது தந்தை அவதிப்படுவதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. நான் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தபோது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கே தெரியாமல் மருத்துவர்களை அணுகி சிறுநீரக தானத்துக்கு தயாரானேன். ஒரே வீட்டில் தந்தையுடன் வசித்தாலும், நான்தான் அவருக்கு சிறுநீரக தானம் வழங்குகிறேன் என்பதை கூறவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு உண்மையை அறிந்ததும் அவரால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. இவ்வாறு டெலாய்னி கூறினார்.

ஜான் கூறும்போது, “எனது மகள் எனக்கு மறுபிறவி அளித்திருக்கிறாள். உயிருள்ளவரை அவளுக்காக வாழுவேன்’’ என்று தெரிவித்தார்.

“இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும்  கடமையும் பிரித்தானிய அரசாங்கம் கொண்டுள்ளது.” – மனோகணேசன்

“இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும்  கடமையும் பிரித்தானிய அரசாங்கம் கொண்டுள்ளது.” என பிரித்தானியாவிடம் மனோகணேசன்  வலியுறுத்தியுள்ளார்.

நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பிரித்தானிய தரப்பினரிடம், பாராளுமன்ற உறுப்பினர் மனோ மேலும் கூறியதாவது,

 

மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை பயன்படுத்தி எமது இந்த இலங்கை கனவை நனவாக்க உதவ வேண்டும்.

“பிரித்தானியாவின் தார்மீக பொறுப்பு, பிரிட்டீஷ் அரசாட்சி, இம்மக்களை இருநூறு வருடங்களுக்கு முன்னர் தொடக்கம் தென்னிந்திய தமிழகத்திலிருந்து கொண்டு வர ஆரம்பித்ததுடன் ஆரம்பமாகிறது. அன்று முதல் எமது மக்கள், உலகம் கண்டிராத கடுமையான உழைப்பின் மூலம், இன்றுவரை மிகப்பெரிய ஏற்றுமதி தொழில் துறையாக இருக்கின்ற பெருந்தோட்டங்களையும், பெரும் நெடுஞ்சாலைகளையும், பாரிய ரயில் பாதைகளையும், கொழும்பு துறைமுகத்தையும் அமைத்து, அன்று சிலோன், இன்று ஸ்ரீலங்கா என்ற இலங்கையை உருவாக்கியுள்ளார்கள்.”

இதற்கு பிரதியுபகாரமாக, நன்றிகெட்டத்தனமாக 1948 ல் எமது மக்களின் குடியுரிமைதான் பறிக்கப்பட்டது. வாக்குரிமைதான் பறிக்கப்பட்டது. நமது மக்கள் பலவந்தமாக 1964 ல் சிறிமா-சாஸ்திரி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்டார்கள். இது நடக்கும் போது, சிலோன் என்ற இலங்கை ஒரு பிரிட்டீஷ் ஆதிக்க நாடாக இருந்தது. 1972 ல் குடியரசு ஆகும்வரை, இலங்கையில் பிரித்தானிய அரசாட்சிக்கு பதில் சொல்லும் மகாதேசாதிபதியே ஆட்சியில் இருந்தார். 1948 ன் சோல்பரி அரசமைப்பின் 29 ம் பிரிவும் எம்மை காப்பாற்றவில்லை. ஆகவே இன்றைய பிரிட்டீஷ் அரசரின் அரசாங்கம் இலங்கை மலையக தமிழரின் மீது பாரிய தார்மீக பொறுப்பையும், கடமையும் கொண்டுள்ளது.

இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் எமது பிரச்சினைகளை கையாளும் பொறுப்பை முழுமையாக விட்டு விட வேண்டாம். அது சரி வராது. இந்தியா ஏற்கனவே, இலங்கையுடனான தமது நட்புறவை எமது விஷயத்திலும் அவ்வப்போது பயன்படுத்துகிறது. ஆனால், அது எமக்கு போதாது. அவர்களுக்கு அவர்களது சொந்த தேசிய கரிசனைகள் அநேகம் உள்ளன. அவை எமது விஷயங்களை விட முன்னுரிமை கொண்டவை. எமக்கு அவை தெரியும்.”

“தேசிய நீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாத காரணத்தால், நாம் ஒதுக்கப்படுகிறோம்.எமக்கு பிரிட்டீஷ் உதவியும் தேவை. பிரிபடாத ஒரே இலங்கைக்குள் எமது சமூக-அரசியல் அபிலாஷைகளை அடையவும், கடந்த காலங்களில் இழந்த உரிமைகளை பெறவும் நாம் பாடுபடுகிறோம். எமது மக்கள் ஜனதொகையில் மூன்றிலொன்றுக்கு குறைவில்லாத பிரிவினர் இன்னமும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினராக அவர்கள் இருக்கின்றார்கள். ஐநா மனித உரிமை ஆணையகத்தின் நவீன கொத்தடிமை தொடர்பிலான விசேட அறிக்கையாளர், ஐநா நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவை முன்வைத்துள்ள கணிப்பீடுகளின்படி, இந்த துன்பகரமான உண்மைகள் உலகறிய செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிரிட்டீஷ் அரசு, விசேட ஒதுக்கீட்டு திட்டங்களின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களுக்கு உதவிட வேண்டும்.”

நாங்கள் இந்நாட்டில் முழுமையான பிரசைகள் ஆக உதவுங்கள். நம் நாட்டிற்கு நீங்கள் வாழ்வாதார உதவிகள் வழங்கும் போது, இலங்கையில் மிகவும் பின்தங்கிய நலிந்த பிரிவினரான, பெருந்தோட்ட பாமர மக்களுக்கு அவை கிடைகின்றனவா என கேள்வி எழுப்புங்கள். தேடுங்கள். எமக்காக இலங்கை அரசுடன் பேசுங்கள். நாம் இல்லாமல் இலங்கை முழுமையடையாது என்பது இனிமேல் மனதில் கொள்ளுங்கள்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு தகவல்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை !

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் நோக்கங்களாகும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரைகளை வழங்கினார்.

முதலீட்டு ஊக்குவிப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் நிலத்தை செயற்திறனுடன் பயன்படுத்துவது தொடர்பான 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.

ஒவ்வொரு அரச நிறுவனங்களாலும் திணைக்களங்களாலும் பயன்படுத்தப்படாமல் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவை விரைவாகக் கண்டறிந்து அடையாளம் காணப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய தரவு வங்கியொன்றை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடையாளம் காணப்பட்ட காணிகளை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு பொருளாதார ரீதியாக பயனுள்ள முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் இது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி பயிரிடக்கூடிய வயல்நிலங்களில் மீண்டும் பயிரிடவும் ஏனைய வயல் நிலங்களில் ஏனைய பயிர்களை விளைவிக்கக்கூடிய வகையில் அது தொடர்பான சட்டங்களை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் மூலோபாய விவகாரங்களுக்கான சிரேஷ்ட மேலதிக செயலாளர் சாந்தனி விஜேவர்தன ஆகியோருடன் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

எட்டு வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் – சந்தேகநபரான பௌத்த மதகுருவை தாக்கி கொலை செய்த உறவினர்கள் !

எட்டு வயது சிறுமி ஒருரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபரான 70 வயதுடைய பௌத்த மதகுரு ஒருவர் தாக்கப்பட்டதில் மரணடைந்துள்ளார்.

குருநாகல் வைத்தியசாலையில் மரணமடைந்த மேற்படி மதகுரு ஹெட்டிப்பொல பிதேசத்தைச் சேர்ந்த விகாரை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

குறித்த பௌத்த மதகுரு சம்பவ தினம் “போதி பூஜா” ஒன்றுக்காக வந்திருந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியே சிறுமியின் உறவினர்களால் குறித்த மதகுரு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மதகுரு சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். ஹெட்டிப்பொல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இலங்கை தயார் – சீனா

இலங்கை நிலைமையை ஆராய்ந்து அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைய வழிவகை செய்வதற்கும் சீனா தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதற்காக தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடுமையான கடன் சுமையை தணிக்க தமது நாடு முக்கியத்தும் வழங்கும் என்றும் அந்த நாடுகளின் வளிர்ச்சிக்கு தீவிர பங்களிப்பை சீனா வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜி-20 கட்டமைப்பின் கீழ், கடன் நிவாரண முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய அரசுக்கு எதிரான காலி முகத்திடல் போராட்டத்தில் விடுதலைப் புலிகளும் பங்கேற்றனர் – எஸ்.பி.திசாநாயக்க

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான முழுமையான விபரங்களும் நாம் அறிவோம். ஆனால், அதனை பகிரங்கப்படுத்த போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் இடம்பெற்ற கலவரத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியே அனைவரின் விட்டிற்கும் தீவைத்திருந்தாகவும் அமரகீர்த்தி அத்துக்கோறளவையும் ஜே.வி.பியே கொலை செய்திருந்தாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

அன்றைய கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே தலைமை தாங்கியிருந்ததாகவும், காலி முகத்திடல் போராட்டத்திற்கு தலைமை வகிக்க முயற்சித்து ஜே.வி.பியினர் தோல்வி கண்டிருந்ததாகவும் அங்கு ஏற்கனவே முன்னிலை சோசலிச கட்சி ஆதிக்கம் செலுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாடுகளில் செயற்படுகின்ற புலிகளின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலிமுகத்திடலுக்கு வருகை தந்திருந்தாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி, முஸ்லிம், அடிப்படைவாதிகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த கோட்டாபய ராஜபக்சவினால் முடியாமல் போனதாகவும் ஆனால் ரணில் அதனை கனகச்சிதமாக நிறைவுக்கு கொண்டு வந்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த போராட்டத்தின் போது இராணுவத்தினர் ஏன் அமைதியாக இருந்தார்கள் என்பதும் தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதனை இப்போது கூற முடியாது என்றும் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் !

எதிர்வரும் நான்கு வருடங்களில் 330 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய மின் உற்பத்திக்கு 2300 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிசக்தி எரிசக்தி அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்படும் திட்டங்களை விரைவுபடுத்தவும், அங்கீகாரம் பெற முடியாத திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களை இரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 26 பேர் பலி !

கிரேக்கத்தில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 100 பேர்கள் வரையில் காயமடைந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு போராடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், தடம் புரண்ட பெட்டிகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயந்துபோன பயணிகள் அதில் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏதென்ஸுக்கு வடக்கே சுமார் 235 மைல் தொலைவில் உள்ள டெம்பே என்ற பகுதியிலேயே  நள்ளிரவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சரக்கு தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து என்பன மோதியதில் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறார்கள் உட்பட மொத்தம் 85 பயணிகள் காயங்களுடன் தப்பியுள்ளதாக இதுவரை வெளியான தகவலில் தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் சுமார் 25 பேர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறுகின்றனர். பயணிகள் தொடருந்தில் 350 பயணிகளுக்கும் மேல் சம்பவத்தின் போது பயணித்துள்ளனர்.

தொடருந்துகள் இரண்டும் பலமாக மோதியுள்ளது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோதலின் தீவிரம் காரணமாக முதல் இரண்டு பெட்டிகள் சிதைந்து போயுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டு தீவிர நடவடிக்கையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இராணுவத்தினரையும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 நோயாளர் காவு வண்டிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள. மோசமான இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையிலிருந்து ஜனாதிபதி ரணில் விடுதலை – மைத்திரிபாலவின் மனு நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.