03

03

கடலட்டை பண்ணைகளை எதிர்க்கும் மக்கள் – கடலட்டை பண்ணைகளால் 7700 மில்லியன் டொலர் வருமானம் வந்ததாக மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம், கிளி நொச்சி, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் மூலம் 7700 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

விரைவில் பனை தென்னை அபிவிருத்தி சபை போன்று கடலட்டை அபிவிருத்தி சபையை உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று அவர் தனது கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். வடக்கில் தற்போது 1700 கடலட்டைப் பண்ணைகள் வந்துள்ளன என்றும் கடலட்டை மூலம் கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று மடங்காக அதிகரிப்பதே தனது நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதே நேரம் பாரம்பரியமாக மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் கடல் அட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபடுவதனால் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது என தெரிவித்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பலர் கடந்த நாட்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அட்டைப் பண்ணை அமைப்பதற்காக கடற்கரையோரமாக  இருக்கின்ற  கண்டல் தாவரங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் மீன் பெருக்கம் தடைப்படுவதுடன்  பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கடல் அட்டை பண்ணை அமைப்பதனால் பெண்தலைமத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டோம். விரைவில் இதற்கு நீதி கிடைக்க  வேண்டும். எனவும் பலரும் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மனைவியை நிர்வாணமாக்கி உடலில் மிளகாய்த்தூள் பூசிய கணவனை தேடி பொலிசார் விசாரணை!

பாதுக்க – அங்கம்பிட்டியவில் மனைவியை நிர்வாணப்படுத்தி  அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயான 39 வயதான பெண் இது தொடர்பில், பாதுக்க பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

மதுபோதையில் வந்த தன்னுடைய கணவன், தன்னுடைய கண்களையும் கைகளையும் கட்டிவிட்டு அட்டை அல்லது புழுவொன்றை தன்னுடைய உடலுக்குள் செலுத்தினார். அது தனக்கு கடுமையான வலியை ஏற்படுத்தியது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வதற்கு இடமளிக்காமல் விட்டால், கடுமையான தாக்குதல்களை மேற்கொள்வார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய 11 வயதான மகளின் முன்னிலையிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்துவார் எனத் தெரிவித்த அந்த பெண், இதனால் மகளும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், நான்கு வயதில் குழுந்தையொன்றும் தனக்கு இருக்கிறது என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் சாரதியாக கடமையாற்றுபவர் என்றும் அவருக்கு நிரந்த தொழில் இல்லை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்​தேகநபரான அவருடைய கணவன் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தனர்.

இலங்கையில் கட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகள் – WHO உதவிக்கரம் !

நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உடனான கலந்துரையாடலின் போது இலங்கையின் தற்போதைய சுகாதார நிலைமை குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் 13ஆவது தடவையாக சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்!

வடக்கின் நுழைவாயில்..” சர்வதேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (03) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் (03) தொடக்கம் நாளை மறுதினம் வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்.

கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில் நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பல வருடகாலமாக வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு முன்பாக மதுபான விற்பனை – போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

திருகோணமலை கடல் முக வீதியில் உள்ள பிரபல பெரும்பான்மையின கலவன் பாடசாலைக்கு முன்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விடுதி ஒன்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் பாடசாலை சமூகத்தினர் இன்று ஒன்றிணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த விடுதிக்கு 100 மீட்டர் தூரத்தினுள் ஆலயம் மற்றும் பாடசாலை அமைந்திருக்க எவ்வாறு மதுபான சாலை திறப்பதற்கு அரச அதிகாரிகள் அனுமதிக்க முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

குறித்த விடுதியில் மது பானம் விற்பனை செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வீதியை மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அவ்வாறு மதுபான விற்பனை நிறுத்தப்படாவிடின் தாம் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திலும் இறங்க தயாராக இருப்பதாக இதன் பொது கருத்து  தெரிவித்தனர்.

இலங்கையின் நாணய கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கி அதன் நாணய கொள்கையில் வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த வட்டி விகிதங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate – SDFR)  15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியினால் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் (Standing Lending Facility Rate – SLRF) 16.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.