05

05

“தொழில் வல்லுநர்களின் கழுத்தை நெரித்து ஆட்சியாளர்களின் சட்டைப்பை நிரப்பப்படுகிறது.”- விரிவுரையாளர் சங்கம் கவலை !

புதிய வருமான வரி மூலம் தொழில் வல்லுநர்களின் கழுத்தை நெரித்து ஆட்சியாளர்களின் சட்டைப்பையை நிரப்பும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொள்வதாக மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமாயின், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் வேறு வழிகளில் வரி வசூலிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் போன்ற துறைகளின் ஊடாக அறவிடக்கூடிய பாரியளவிலான வரியை அரசாங்கம் வேண்டுமென்றே மறந்துவிட்டதாக மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தங்களின் வருமானத்தின் மூலம் செலுத்த வேண்டிய வரியை தந்திரோபாயமாக நீக்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிடப்படும் வரி மூலமாக எவ்வித நன்மையும் கிடைக்காத நிலையில், மருந்து பற்றாக்குறை, மின் கட்டண அதிகரிப்பு, வட்டி வீதம் அதிகரிப்பு போன்றவற்றின் ஊடாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளுக்கான வசதி வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்பதற்கான சூழலும் அற்றுப்போயுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் போது அறவிடப்படுகின்ற வரியை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தமது தனிப்பட்ட நன்மைகளுக்காக பயன்படுத்தி வீண் விரையம் செய்யக்கூடாது எனவும் அதனை சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய துறைகளுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயங்களை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை விரைவில் ஆதாரங்களுடன் தெரியப்படுத்துவேன் – பழ.நெடுமாறன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்திச்சேவை இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளது.

எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

2030 வரை ஜனாதிபதி ரணில் தான் !

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2030 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார். அனைத்து போட்டியாளர்களும் ரணில் விக்ரமசிங்கவின் திறமைக்கு அப்பால் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலை வேண்டுகோள் !

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என இரத்த வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி 49 சேகரிப்பும், 49 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

இம்மாதம் 1ஆம் திகதி 17 சேகரிப்பும் 48 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

2ஆம் திகதி 33 சேகரிப்பும் 39 வழங்கலும் இடம்பெற்றுள்ளது.

குறித்த புள்ளி விபரத்தின்படி, சேகரிப்பை விட வழங்கல் கூடுதலாக காணப்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இரத்த தானம் செய்பவர்கள் மற்றும் இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பவர்கள் தமது 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

“எப்போது எந்த தேர்தல் நடைபெற்றாலும் நாம் தான் வெற்றியாளர்கள்.” – பஸில் ராஜபக்ச

“எப்போது எந்த தேர்தல் நடைபெற்றாலும் நாம் தான் வெற்றியாளர்கள்.” என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

“இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தலுக்கான வருடங்களாகும், ஆனால் எந்த தேர்தல் முதலில் நடைபெரும் என எமக்கு தெரியாது, நாட்டில் எந்த வகையான தேர்தல் நடைபெற்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது.

வருகின்ற காலங்களில் உள்ளூராட்சிசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் இதில் எந்த தேர்தல் எப்போது நடக்கும் என எமக்கு தெரியாது.

எந்த தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது உறுதி. உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகளை வைத்து ஆட்சி மாற்றத்தை செய்ய முடியாது, நாடாளுமன்ற தேர்தல் மூலமே அதனை செய்ய முடியும்.

இருப்பினும், மக்களின் ஜனநாயகத்தை நிலைநாட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போடமல் விரைவில் நடத்த வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது – ரிஷி சுனக்

சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான வீசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் சகலருக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என புலம்பெயர் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.

இந்த பின்னணியில் பிரித்தானியா தங்களது குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தநிலையில், புதிய திருத்தங்களுடன் இந்த விடயம் தொடர்பான சட்ட மூலம் அந்த நாட்டு உள்துறை செயலாளர் சுவெல்ல பிரேவமானினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செயல்பாட்டிற்கு அமைச்சர்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தமது ஐந்து முன்னுரிமை நடவடிக்கைகளில், ‘படகுகளை கட்டுப்படுத்தல்’ என்ற விடயத்தையும் உள்ளடக்கியுள்ளார். சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் வருபவர்கள் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, பிரித்தானிய செஞ்சிலுவை சங்கம் இந்த திட்டம் மனிதாபிமான முறையில் எதிர்கொள்ள வேண்டியது என தெரிவித்துள்ளதுடன், அது கவலையளிக்கும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டிக்கு செல்லும் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கனைகள் !

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கனைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

குறிப்பாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இப் போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 13 வயது பெண்கள் பிரிவில் உ.வைஷாலி மூன்றாம் இடத்தினைப் பெற்றும், அ.ஆருத்ரன் 17 வயது ஆண்கள் பிரிவில் நான்காம் இடத்தினைப் பெற்றும், பி.ஜனுக்சன் 13 வயது ஆண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப் பெற்றும், பி.பிரதிக்சா 9 வயது பெண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப் பெற்றும் இலங்கை அணி சார்பாக கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

“உக்ரைன் – ரஷ்ய போரை என்னால் ஒருநாளில் முடிவுக்கு கொண்டு வர முடியும்.”- ட்ரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேல் ஆகியும் முடிவுக்கு வராமல் உள்ளதால் உலக நாடுகள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2022 பெப்ரவரி மாத இறுதியில் ரஷிய ஜனாதிபதி புடின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ரஷிய படைகள் வேகமாக முன்னேறி உக்ரைனை திணறடித்தன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் பதில் தாக்குதலை  மேற்கொண்டு போரில் தாக்குபிடித்து வருகிறது.

பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை ரஷ்யா 1,16,950 வீரர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் நாட்டிற்கு புதிதாக 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஆயுத உதவியாக 31 போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இந்த போர் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷியா – உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். போரை தற்போதைய அமெரிக்க அரசு ஒழுங்காக கையாளவில்லை எனக் கூறிய டொனால்டு டிரம்ப்,

“நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறதா? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. 3ம் உலகப் போரைத் தடுக்கும் வல்லமை எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும்” என்றார்.

“உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற புலிப் பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க அமெரிக்காவே உதவியது.” – அமைச்சர் அலி சப்ரி !

“உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற புலிப் பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க அமெரிக்காவே உதவியது.” வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதெ நேரம் திருகோணமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளிற்காகவே  சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர்  நிராகரித்துள்ளார்.

இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில் மேலும் பேசிய அவர்,

நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான  வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என  தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன்  காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணவனை பழிவாங்க ஒன்றரை வயது மகளை கொலை செய்ய முயன்ற 20 வயதுடைய தாய்  !

புத்தளம், உடப்பு பகுதியில் கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது ஒன்றரை வயது மகளை இறால் தொட்டியில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையொன்றில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவி, தனது கணவனை பழிவாங்கும் நோக்கில் தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்வதற்கு முயற்சித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இறால் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை பார்த்த சக தொழிலாளி ஒருவர் குழந்தையை காப்பாற்றியுள்ளதுடன், அந்த குழந்தை குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.

சிறுமியை இறால் வளர்ப்புத் தொட்டிக்குள் தள்ளியதாக கூறப்படும் 20 வயதுடைய தாய்  உடப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும், குழந்தை தொட்டியில் தவறி விழுந்ததாக சந்தேக நபரான தாய் பொலிஸாரிடம் ஏற்கெனவே தெரிவித்திருந்த போதிலும், இறால் பண்ணையின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சியை அவதானித்தபோது சந்தேக நபர் தனது குழந்தையை கையால் பிடித்துத் தள்ளுவது தெளிவாக புலப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.