08

08

“இலங்கையிலுள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.” – ஐ.நா வலியுறுத்தல்!

இலங்கையில் உள்ள கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

பலவீனமான கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் அடிப்படை பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கான மக்களின் அணுகலை கடுமையாக தடை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே மீட்புக் கொள்கைகளில் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பின்னடைவுக்கான பிற விடயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஊழல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற அடிப்படை பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை நம்புவதும், சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலைமாறுகால நீதிக்கான உண்மையான மற்றும் விரிவான அணுகுமுறையை ஆதரிக்க தனது அலுவலகம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.

மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை கொடுத்து கொலை செய்ய முயன்ற தந்தை !

நபர் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சை கொடுத்து தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் கம்பளை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பளை தெல்பிட்டிய செவனக் கிராமத்தில் நேற்றிரவு (07) இடம் பெற்ற மேற்படி சம்பவத்தின் போது 4 வயது ஆண் பிள்ளையும்  7 மற்றும் 13 வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகளும் தந்தையான 40 வயது நபருமே நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும் சம்பவதினம் மனைவி வீட்டிலிருந்து வெளியேறி இருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்,  சம்பவதினம் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த  குறித்த நபர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் தெரியாமல்  இனிப்பு குளிர்பானத்தில் நஞ்சை கலந்து குடிக்குமாறு கூறிவிட்டு தான் தனது அறைக்குச் சென்று மது பானத்துடன் நஞ்சை கலந்து அருந்தியுள்ளாதாக தெரியவருகிறது.

இந்நிலையில் தனது தந்தையும் தம்பியும் தங்கையும் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த 13 வது சிறுமி இது குறித்து அயலில் வசித்த தனது பெரியப்பாவிடம் (தந்தையின் அண்ணன்) தெரிவித்ததையடுத்து பிரதேச வாசிகளுடன்  இணைந்து நால்வரையும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு நஞ்சை அருந்த கொடுப்பதற்கு முன்னர் முன்பு எடுத்த பழைய புகைப்படங்களை குறித்த நபர் வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதமும் புஸ்சல்லாவ புரட்டாசி தோட்ட மேமலை பிரிவிலும் குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை ஒருவர் தனது 12 மற்றும் 16 வயது பிள்ளைகளுக்கு நஞ்சை அருந்த கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க திட்டம் !

நாட்டின் சட்ட முறைமை பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் நடைமறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண மாணவர்களுக்கு சட்ட அறிவை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது 7-8 ஆண்டுகளாக, நாட்டின் அடிப்படை சட்ட முறைகள் பற்றிய கல்வியை சாதாரண தர மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

இது தொடர்பாக அமைச்சர்கள் குழு முடிவுவெடுத்துள்ளதுடன் அதை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கல்விப் பாடத்திட்டம், சாதாரண தர மாணவர்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

2023ல் நடைமுறைப்படுத்துவோம் என நம்பினோம். ஆனால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுமா..? எனத் தெரியவில்லை.

இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டுக்குள் இந்த பாடத்திட்டம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படும். ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்ன என்பதைப் பற்றிய புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள பலருக்கு அவர்களின் உரிமைகள் என்னவென்று தெரியாது. அதனால்தான் சில நேரங்களில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல புதிய சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

” பரீட்சைகள் எதுவாக இருந்த போதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும்.” – அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதற்கு இடைக்காலத்தின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகள் எதுவாக இருந்த போதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும் என்றும் அவர் கூறினார். ஏந்தவொரு நாட்டிலும் ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை யுனெஸ்கோ சர்வதேச அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு, கலாநிதி பட்டம், அதற்கும் மேற்பட்ட பட்டங்களுக்கும் பதிலளிக்க தாய்மொழி தேவைப்படுமாயின் அதற்கு இடமளிக்கப்படுவது அடிப்படை மனித உரிமையாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், சட்டக் கல்லூரியின் நிருவாக சபையில் உள்ள நீதிபதிகள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அடிப்படை தாய்மொழியான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத முறையில் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற பெண் மாயம் – இரண்டு வருடங்களுக்கு பிறகே நாங்கள் உதவி செய்வோம் என கூறிய யாழ்.மாவட்ட செயலகம் !

அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள பெண்ணின் கணவனும் இரு பிள்ளைகளும் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக வந்த போதே ஊடகத்திற்கு இந்த தகவலை வழங்கியுள்ளனர்.

39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு வீட்டுப் பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அவரது கணவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி அரபு நாட்டிற்கு சென்றிருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அங்கிருந்து பணம் அனுப்பியிருந்தார். எனினும் இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை.

அதனையடுத்து மனைவியுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போது, தொடர்பு கிடைக்கவில்லை எனவும், அதனையடுத்து அவர் பணிக்காகச் சென்றிருந்த வீட்டு உரிமையாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்த போது, அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பதிலில் முரண்பாட்டுத்தன்மை இருக்கின்றது. ஏனெில் வீட்டு உரிமையாளரான பெண், எனது மனைவி, வீட்டின் முன்பக்க வாயிலாலேயே தப்பிச் சென்றார் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கணவன் வீட்டு மாடியிலிருந்த ஏணியால் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் முரண்பாடான பதிலாலேயே எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவி தொலை பேசியில் உரையாடும் போது, பணிக்கு சென்றுள்ள வீட்டு உரிமையாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மனைவியின் தொலை பேசி மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பறித்து வைத்துள்ளதாகவும் அதனைத் தருமாறு கேட்டு முரண்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து 4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்தே வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனது மனைவி தற்போது உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை. வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு இறந்து விட்டாரா என்பது கூடத் தெரியவில்லை.

ஆகவே அரசியல் தலைவர்களும், நாட்டின் அதிபரும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை, மீட்டுத்தர வேண்டும். அவருக்கு என்ன நடந்தது, உயிருடன் இருகக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எமக்கு அறியத்தர வேண்டும்.

மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போது, இவ்வாறு வீட்டுப் பணிக்காக செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

எமது வறுமை காரணமாக மனைவி வீட்டுப் பணிக்காக வெளிநாடு சென்றிருந்தார். நானும் இங்கு கூலித் தொழில் தான் செய்து வருகின்றேன். தொழில்புரிவதற்காக வெளிநாடு சென்ற மனைவி தற்போது காணாமல் போயுள்ளார்.

எனது 2 பிள்ளைகளும் மனைவியைக் காணாது தவித்து நிற்கின்றோம். எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்ககை மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு – அவதியுறும் நோயாளிகள் !

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டுவரும் நோயாளர்களை சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டு செல்வதற்குகூட  வைத்தியசாலை ஊழியர்கள் இன்மையால் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள சைபர் துன்புறுத்தல்கள் !

பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கவலை வெளியிட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான முறைப்பாட்டு பொறிமுறைகள் அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மாற்றமடைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெருந்தொற்று மற்றும் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உலகில் வாழ்க்கை பாரிய விதத்தில் மாற்றமடைந்தது, தொழில்கள் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகள் மாற்றமடைந்தன எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

“சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்” – சிறுவயது திருமணங்களுக்கு எதிராக கிளிநொச்சி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய மாணவர்கள் கவனயீர்ப்பு செயற்பாடு !

அண்மைய தரவுகளின் படி உலகத்திலேயே சிறுவயது திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளுக்குள் இலங்கை அமைந்துள்ள தென்னாசிய வலயம் முன்னணியிலுள்ளது. ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவயது திருமண வீதம் குறைவாக உள்ள போதும் 16-18 வயதுக்கு இடையில் திருமணம் செய்வோர் வீதம் 12 வீதமாகவும் , 16 வயதுக்கு கீழானோர் திருமணம் செய்து கொள்ளும் வீதம் 2 வீதமான காணப்படுவதாகவும் யுனிசெப் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் இளவயது திருமணங்கள் அதிகமாக நிகழும் பகுதிகளில் வடக்கு மாகாணமும் முன்னிலையில் உள்ளது.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களும் – அதனால் ஏற்பட்ட வறுமையும், பாடசாலை இடைவிலகல்களும்  அதன் நீட்சியாக ஏற்பட்டுள்ள சமூகப் பிறழ்வுகளும் ஏராளமானவை. இதன் இன்னுமொரு வடிவமே இளவயது திருமணங்களாகும்.

பாடசாலை கல்வியை தொடர வேண்டிய சிறுமிகள் பலர் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அவர்களுடைய எதிர்கால கனவுகள் முழுமையாக சிதைந்து பல சிறுமிகள் கல்வியை தொடர வேண்டிய காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடும் அவலம் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.

மேலும் சிறுவயது திருமணங்கள் மூலம் அரோக்கியமற்ற எதிர்கால தலைமுறை ஒன்று தோன்றுவதற்கான அபாயமும் காணப்படுவதுடன் – எச்.ஐ.வி பரவல், இளவயத  தம்பதியினரிடையே மன உளைச்சல் மற்றும் இளவயது விவாகரத்துக்கள் என்பனவும் அடுத்தடுத்து நமது சமூகங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

முக்கியமாக அண்மைய நாட்களில் தமிழர் நிறைந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் – வாள்வெட்டு கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க பாடசாலை மாணவிகள் பலர் தென்னிந்திய சினிமா மோகத்தாலும் – வறுமையின் நிமித்தமும் பாடசாலை கல்வியை இடைவிட்டு  மேற்குறிப்பிடப்பட்ட சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோருடன் காதல் ஏற்பட்டு வாழ்க்கை பற்றிய அனுபவம் – புரிதல் ஏதுமற்ற வயதில் பாடசாலை கல்வியை கைவிட்டு திருமண வாழ்க்கை ஒன்றினுள் நுழைகின்றனர்.” என வடக்கில் சிறுவர் விவகாரம் தொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரச  அதிகாரி ஒருவர் தேசம்நெட்இடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் மகளிர் தினமான இன்று கிளிநொச்சி திருநகர் பகுதியில் இயங்கி வரும்  லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவயது திருமணங்களுக்கு எதிராகவும் – அது தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மாணவர்களிடையேயும் கிளிநொச்சி மக்களிடையேயும் ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி நகரிலுள்ள கிளி. மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கவனயீர்ப்பு செயற்பாட்டு ஏற்பாட்டு குழுவினர் கருத்து தெரிவித்த போது ” சிறுவயது திருமணங்கள் பற்றி எங்கேயோ நடந்ததாக கேள்விப்பட்ட காலம் போய் நமது பக்கத்து வீடுகளில் கூட அடுத்தடுத்து நடைபெறும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிறுவயது திருமணங்கள் ஆக்கப்பூர்வமான சமூகத்தை அன்றி மன உளைச்சலுக்குள்ளான சமூகத்தை உருவாக்குகின்றது. 16 வயதுக்கு கீழான பிள்ளைகள் கூட திருமணம் செய்து கொள்ளும் அபத்தமான சூழல் நமது பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 15வயதுக்கு கீழானோர் திருமணம் செய்யும் போது அது துஷ்பிரயோகமாக கருதப்பட்டு நீதிமன்றத்தீர்ப்புக்கு விடப்படுகின்ற போதும் 16-19 வயதுக்கு இடையான வயதுடைய பெண்கள் இந்த கட்டாய – விருப்பத்துடன் இளவயது திருமணங்களுக்குள் நுழையும் போது இலங்கையின் சட்டங்கள் அதற்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கான வரைபுகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை. இலங்கையில் 19 வயது அதாவது பாடசாலை கல்வி பூர்த்தியாகும் வரை மாணவர்கள் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதை தடுக்க இலங்கையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”  என வலியுத்தப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு செயற்பாட்டின் போது” சிறுவயது திருமணங்கள் சட்டரீதியான துஷ்பிரயோகம்”, “புத்தகப்பை சுமக்கும் வயதில் கருப்பை சுமப்பதா..?” “தாயோடு செல்லும் வயதில் பேரோடு செல்வதா” போன்ற வசனங்களை தாங்கிய பதாகைகளை பங்குபற்றியிருந்தவர்கள் தாங்கியிருந்தனர்.

“ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் உச்சமடையும்.” – SLUNBA எச்சரிக்கை!

பொருளாதாரம் சுருங்குவதைத் தடுக்க மத்திய வங்கி ஆளுநரால் உறுதியான முடிவை எடுக்க முடியாவிட்டால், ஏப்ரல் மாதத்திற்குள் நுகர்வோர் சந்தை 60% சுருங்கும் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகக் கூட்டமைப்பு (SLUNBA) தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் நுகர்வோர் சந்தை 40% சுருங்கியது, இதன் காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படும், தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, ​​இலங்கை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வசதிகளை குறைக்க வேண்டும் என அரசாங்கம் கோருகிறது, SLUNBA தெரிவித்துள்ளது.

எனவே, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என SLUNBA தலைவர் தன்யா அபேசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் (NCASL) தலைவர் சுசந்த லியனாராச்சி கூறுகையில், அரசாங்கம் டொலரை கட்டுப்படுத்தவில்லை, ஆனால் அது பணவீக்கத்தை கட்டுப்படுத்தியது மற்றும் பொருளாதாரத்தை சுருங்கும்போது மந்தநிலையை உருவாக்கியது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு ஆகியவற்றை விவரிக்கும் போது, ​​மார்ச் 2022 முதல் சந்தை இயங்கவில்லை என்றும் இலங்கையில் டொலர்கள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“டொலர் மாற்று வீதம் குறைக்கப்பட்டது, மேலும் இலங்கை ரூபாய்களை பெற முடியாததால் மக்கள் தங்கள் டொலர் கையிருப்புகளை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது மக்களிடம் கொள்வனவு செய்யும் சக்தி இல்லை. மக்கள் கையில் ரூபாய் இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“அவள் நாட்டின் பெருமை” – மகளிர் தின வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவம், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டுக் குறியீட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எழுத்தறிவில் முன்னணியில் திகழும் இலங்கைப் பெண்கள், இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விசேடமானது.

இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இந்நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பை பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக எனது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும்.

நிர்வாக மற்றும் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைக்குள் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, அரச, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க விரிவான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

“பாலின சமூக, சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல்” குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான பணிகள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இதனைத்தவிர, தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்க, எதிர்பார்த்துள்ளதுடன், ஒம்புட்ஸ்வுமன் ஒருவர் மற்றும் பெருந்தோட்ட, ஆடை உற்பத்தி ஆகிய துறைகளின் பணிப்பாளர் சபைகளில் பெண்களை நியமிப்பதற்கான அவசியம் குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிக திறமையுள்ள பெண்களை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு முழுமையான பங்களிப்பைப் பெறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. நவீன உலகத்தில் பெண்களின் பங்களிப்பை சரியாக புரிந்துகொண்டு, இதில் பங்களிப்புச் செய்யக்கூடிய பெண்களை எமது நாட்டில் வலுவூட்டுவது இந்தப் பணிகளின் நோக்கமாகும்.

நாட்டில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், “2048 அபிவிருத்தியடைந்த நாட்டை” உருவாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்ய, இந்நாட்டின் அனைத்துப் பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து, இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.