10

10

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் காலத்து சிவன் கோயில் இடிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை – அருட்தந்தை மா.சக்திவேல் விசனம்!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி.வடக்கில் போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நாகரீகம் அற்ற செயலை மலையக சமூக ஆய்வு மையம் மற்றும் மலையக தமிழர் பண்பாட்டுப் பேரவை என்பன வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துன்புற்றிருக்கும் மக்களின் வேதனையோடு தாங்களும் நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அராங்கம் இந்து மக்களிடத்திலும், தமிழ் மக்களிடத்தும் இச்செயல் தொடர்பாக மன்னிப்பு கோருவதோடு அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை முற்றாக அங்கிருந்து அகற்றி அங்கு இந்து மக்களின் சுதந்திர வழிபாட்டுக்கும் இடம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 64 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்.எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் சுமாா் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் மீட்கப்பட்டிருக்கின்றது.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் மோட்டாா் சைக்கிள் ஒன்றை சோதனையிட்டனா்.

குறித்த கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. இதனை அடுத்து சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில்,அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை சுழிபுரம் காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த50 கிலோ கேரள கஞ்சாவை இராணுவத்தினா் மீட்டுள்ளனா். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில்  மேற்படி கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டு வேலைவாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணமோசடி செய்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர் !

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுற்றுலா விசாவில் மக்களை லாவோஸுக்கு அழைத்துச் சென்று, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் அம்பலாந்தோட்டை உள்ளூராட்சி மன்றத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளை தவிர்த்து வந்த அவர், சட்டத்தரணி ஊடாக பணியகத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் உள்ள நிறுவனமொன்றில் வேலை வழங்குவதாகக் கூறி சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிக்கித் தவிக்கும் நபர்களைப் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சந்தேக நபரிடம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, விசாரணை அதிகாரிகளை தவிர்த்து வந்த சந்தேக நபர் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்ட நிலையில், சட்டத்தரணி ஊடாக விசாரணை பிரிவில் சரணடைந்துள்ளதுடன், இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் சீனாவின் ஜனாதிபதியாக ஜின்பிங் !

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டார்.

அதன்பிறகு 2வது முறையாக அவர் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் அவர் சீன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

சீனா கம்யூனிஸ்டு கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத அளவில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் முறையாக ஜின்பிங் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அனைத்து உயர் மட்ட குழுவினரும் சேர்ந்து அவரை தேர்ந்தெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். மேலும் அவர் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார். சீன வரலாற்றில் இதுவரை யாரும் தொடர்ந்து 3 முறை அதிபராக பதவி வகிக்கவில்லை. அந்த சாதனையை ஜின்பிங் பெற்று இருக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவர் சீன அதிபராக பதவி வகிப்பார்.

தற்போது 69 வயதாகும் அவர் கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து இப்போது ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“இலங்கை தமிழரசுக் கட்சியினை ஏனைய கட்சிகள் பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள்.” – சி.சிறீதரன்

“70 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியினை ஏனைய கட்சிகள் பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள்.”  என தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“மாநகர சபையில் மக்கள் எமக்கு பெரும்பான்மையினை வழங்க தவறி விட்டார்கள். அதைவிட எதிர்வரும் காலத்தில் யாழ். மாநகர சபையில் 25க்கும் மேற்பட்ட ஆசனத்தை பெற்று யாழ் மாநகர சபையினை பூரணமாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அதற்குரிய ஆணையை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் மாநகர சபையை தமிழரசுக் கட்சி பூரணமாக கைப்பற்றும் என்பதில் எந்தவிதமாற்று கருத்துக்கும் இடமில்லை.

மக்கள் எங்களுடன் தான் உள்ளார்கள். ஓரிருவர் கூறும் வார்த்தைகள் நியமாகிவிட முடியாது.  மக்களை ஏமாற்றி மாதச் சம்பளத்தை பெறுவதற்காக பின்வாசலால் கையெழுத்திட்டு சபை அமர்வுக்கு கலந்து கொள்ளாது விட்ட ஏனைய கட்சிகளின் கதைகளை கேட்பதற்கு நாம் தயார் இல்லை.

ஏற்கனவே சூ.சிறில் பல வருடங்களுக்கு முன்னர் மாநகர சபையின் பிரதி முதல்வராக செயற்பட்டவர்.   அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். ஆளுமை மிக்கவர். அவ்வாறான ஒருவரைத் தான் இம்முறை எமது வேட்பாளராக தெரிவு செய்தோம்.

அது மாத்திரமல்ல கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாக குரல் கொடுத்த ஒருவரை தான் தமிழரசுக் கட்சி முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்துள்ளது.

எனவே ஏனைய கட்சிகள் எமது கட்சியை பழிவாங்கும் முகமாக செயற்படுகிறார்கள் என்பது இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது” – என்றார்.

ஒன்றரை வயது சிறுமி மீது கொடூர சித்திரவதை – தந்தை கைது !

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (10) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பகமூன பொலிஸார் தெரிவித்தனர்.

மீண்டும் ராஜபக்சக்களுக்கு பதவி !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

“பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டாம்.” – பிரசன்ன ரணதுங்க

பாடசாலைகளுக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பெற்றோர்கள் வேதனை அடைவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இவ்வாறான உரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (S.J.B) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, அமைச்சர் அவர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பேசுகின்றார். அரச பயங்கரவாதத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல சேதங்கள் ஏற்பட்டன. றோயல் கல்லூரி மாணவர்களுக்கும் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கும் இவ்வாறு நடக்கும்போது கல்வி அமைச்சர் எடுக்கும் முடிவு என்ன?

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (S.LP.P) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நேற்றும் இவர் உரையாற்றினார். பாடசாலைகளுக்கு அருகில் போராட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்பதற்கே பாடசாலைகளுக்கு அனுப்புகிறார்கள். பாடசாலைகளுக்கு முன் போராட்டங்களை நடத்தும் போது பெற்றோர்களும் வேதனை அடைகின்றனர். குழந்தைகளுடன் பெற்றோரும் வலியை உணர்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச (S.J.B) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதன் அடிப்படையில் இந்த நாட்டின் நீதித்துறையில் தலையிடுவது போன்ற வேலைத்திட்டங்களை இந்த பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் புகைப்படமாக படம் நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை இருக்கிறது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (S.L.P.P) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இவர் பாராளுமன்றத்திற்கு அதிகாலையில் வந்து பிரசங்கம் செய்கின்றார். ஒரு தடவை மருந்து இல்லை என்றும், இன்னொரு தடலை மற்றொன்றும்சொல்கிறார். எதிர்க்கட்சிகள் தங்கள் விருப்பப்படி பாராளுமன்றத்தை செய்ய விடாதீர்கள்.

“மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன்” – ஜீவன் தொண்டமான்

“மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஊடாகவே பாராளுமன்றம் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அவர் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அவர் விசேட காணொளி மூலமாக விரிவாக விளக்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றது முதல் இன்று வரை எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது, மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமையாகும்.

2020 ஆம் ஆண்டு நான் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தபோது, எனது அமைச்சின் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்துக்காக 680.79 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக 396.48 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக 68.83 மில்லியன் ரூபாவில் செலவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு 2.08 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அத்துடன், இந்திய வீடமைப்பு திட்டத்துக்காக 2020 ஆம் ஆண்டில் 0.88 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் மட்டும் மேற்படி திட்டங்களுக்காக 1,236.18 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றும் வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காகவும் தனியாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.

2021 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் அமைச்சின் ஊடாக வருகின்ற வீடமைப்பு திட்டத்துக்காக 314.37 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது. மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டங்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை.

எனவே, வீடமைப்பு திட்டத்தை முழுமைப்படுத்துவதற்காக 385.24 ரூபா ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

அதேபோல 2021 இல் இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகளை நிர்மாணிக்க 1084.11 ரூபா செலவளிக்கப்பட்டது. கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் என்பதால் இக்கால கட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால் இந்திய வீடமைப்பு திட்டமும் சற்று தாமதமானது.

2021 ஆம் ஆண்டில் 93 வீதிகள் அமைக்கப்பட்டன. பொது வேலைத்திட்டங்களும் (அபிவிருத்தி, உட்கட்டமைப்பு) முன்னெடுக்கப்பட்டன. இவ்விரு திட்டங்களுக்காகவும் 177.13 மில்லியன் ரூபா செலவளிக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல புதிதாக 25 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக 42.70 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. தகரம் மாற்றும் 34 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்காக 4.70 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. வடிகாலமைப்பு சம்பந்தமாக 220 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்காக 21.40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சம்பந்தமான 12 வேலைத்திட்டங்கள் 15.77 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டன. நீர்வளங்கள் திட்டத்தின்கீழ் 6 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக 4.93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டிலும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். இந்திய வீடமைப்பு திட்டத்தையும் அமுல்படுத்த உத்தேசித்திருந்தோம். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள், எம்மை அரசிலிருந்து வெளியேற வைத்தன. ஏப்ரல் 05 ஆம் திகதி பதவி விலகல் கடிதத்தை கையளித்தேன்.

அதன்பின்னர் ஜனாதிபதியும் பதவி விலக நேரிட்டது. பொருளாதார நெருக்கடியும் உக்கிரம் அடைந்தது. இதனால் எம்மால் எதிர்பார்த்தளவு வேலைத்திட்டங்களை 2022 ஆம் முன்னெடுக்க முடியாமல்போனது. எனினும், ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று காலப்பகுதிக்குள் அமைச்சின் ஊடாக இடம்பெற்ற வீடமைப்பு திட்டத்துக்காக 164.69 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இந்திய வீடமைப்பு திட்டத்தின்கீழ் 154. 03 மில்லியன் ரூபா செலவளித்திருந்தோம். உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 138.13 மில்லியன் ரூபா செலவளித்தோம்.

இவ்வாறு கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். என்மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தனர். எனவே, அவர்களுக்கு உண்மையுள்ளவராக சேவை செய்துள்ளேன் என நம்புகின்றேன். இவற்றை விளம்பரப்படுத்தாதவே நாம் செய்த தவறு, அதனால்தான் விமர்சனங்கள் எழுகின்றன.

தற்போது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக செயற்படுகின்றேன். எனவே, மக்களுக்கு அதிகளவான சேவைகளை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கும். அவர்கள் எந்த பகுதிகளில் வசிப்பவர்களாகவும் இருக்கலாம். பிரச்சினைகள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள், பேஸ் புக் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக எனக்கு தகவல் தாருங்கள். என்னால் முடிந்தவற்றை மக்களுக்கு நிச்சயம் செய்வேன்.

இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். டில்லியில் நடைபெற்ற பேச்சில் சாதகமான பதில் கிடைத்துள்ளது. மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றேன். சிறு தாமதம் ஏற்படலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்றார்.

 

இளம் மாணவியை வாகனத்தால் மோதி மரணத்தைத் தந்த ரெலோ மூத்த போராளி ஜேர்மனியில் மரணம்!

கட்டிளம் பெண்ணான வாழ்க்கை பற்றிய பல்வேறு கனவுகளோடு வாழ்ந்த மிதுலா அப்போது நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஆண்டு ஒன்பதில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார். ஒரு ஆசிரியையாக வரவேண்டும் என்ற கனவோடு வாழ்ந்த மிதுலா, 1995 சூரயக்கதிர் இராணுவ நடவடிக்கையோடு, தங்கள் சொந்த ஊரான யாழ் தாவடி (கொக்குவில்) பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் பல பிரதேசங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். இறுதியில் கொழும்பு செல்லாம் எனத் தீர்மானித்து வவுனியாவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று முகாமில் தங்கியிருந்தனர். அப்படித் தங்கியிருந்த காலத்தில் தான் மிதுலா நெல்லுக்குளம் மகாவித்தியாலயத்தில் படித்தார். மிதுலாவோடு மூன்று வயது மூத்த சகோதரி ஒருவரும் இருந்தார். குடும்பப் பொறுப்பு மிக்க மிதுலா பொறுப்பில் தான் பண நிர்வாகம் இருந்தது. அவ்வளவு பொறுப்பு மிக்கவர். அவர் கடைசியாக எழுதிய பரீட்சையில் வழமைக்கு மாறாக முதலாம் பிள்ளையாகவும் வந்திருந்தார். படிப்பில் ஆர்வம் ஏற்பட்ட காலமது. மிதுலா தனது அக்காவுக்கு எழுதிய ஓட்டோகிராப்யை கீழே காணலாம்.

அத்தங்கையின் விரும்பம் போலவே அதையும் தாண்டி கல்வியில் ஒரு நிலைக்கு வந்துவிட்டார் சகோதரி கங்கா. இவ்வாறான அன்புக்கும் பாசத்திற்குமரிய தங்கையுடன் சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள அந்தத் தங்கை தன்னோடு இல்லை என்ற ஏக்கத்துடனேயே கங்கா இன்றும் தனது நாட்களை கடந்து செல்கின்றார். கங்காவிடம் இருந்த அந்தத் தங்கையைப் பிரித்தது ?

1997 செப்ரம்பர் 20 அதுவொரு சனிக்கிழமை மிதுலா தன்னுடைய சகோதரி கங்காவோடும் கங்காவின் நண்பியோடும் உல்லாசமாக வெளியே புறப்பட்டு நெரிக்குளம் மகாவித்தியாலய முகாமில் இருந்து வந்து செட்டிகுளம் பிரதான வீதிக்கு வந்தனர்.

அதே செட்டிகுளம் சந்திக்கு அருகில் உள்ள வீட்டில் வின்சன் என்றழைக்கப்படும் கந்தையா அகிலன் தன் நண்பர்களோடு மது அருந்தி குடிபோதையில் இருந்தார். இவர் ஒரு தமிழீழ விடுதலை இயக்கப் போராளியும் கூட. இலங்கை வாகன ஓட்டுனர் பத்திரம் இல்லாத இவர் இந்தியாவின் வாகன ஓட்டுனர் பத்திரத்தையே வைத்திருந்தார். இவருக்கு லொறி போன்ற பெரிய வாகனத்தை ஓட்டிய அனுபவமும் இருக்கவில்லை. அந்நிலையில் அங்கிருந்த லொறியை எடுத்து ஓட்டுகிறேன் என்று வீராப்பு பேசி லொறியை வேகமாக ஒட்டிக்கொண்டு செட்டிகுளம் வீதிக்குள் நுழைந்தார் வின்சன்.

அதேசமயம் மிதுலா, சககோதரி கங்கா, கங்காவின் நண்பி வீதியின் ஓரமாக நடந்துகொண்டிருந்தனர். கங்கா தூரத்தே ஒரு லொறி வேகமாக வருவதை கண்டுவிட்டார். ஆனாலும் தாங்கள் வீதியின் ஓரத்தால் செல்வதால் வேறு எதைப்பற்றியும் எண்ணவில்லை. நிகழப் போகும் அனர்த்தத்தம் பற்றி கிஞ்சித்தும் எண்ணியிருக்கவில்லை.

ஆம் வின்சன் மது போதையில் ஓட்டிவந்த லொறி இப்பெண்கள் மீது மோதி அருகில் சென்றுகொண்டிருந்த ரக்ரரையும் தாக்கி அப்பகுதியையே புழதி மண்டலமாக்கியது. அந்தப் புழதிக்குள் லொறியை ஓட்டி வந்த வின்சன் லொறியிலிருந்து இறங்கி அவ்விடத்தை விட்டே ஓடிவிட்டார். மிதுலா தலையில் ஏற்பட்ட பாரிய அடியினால் சிதைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கங்காவின் நண்பி பாரிய காயங்களுக்கு உள்ளானார். கங்கா அதிஸ்ரவசமாக சிறிய காயங்களோடு உயிர் தப்பினார்.

விசயத்தைக் கேள்விப்பட்டு நெல்லிக்குளம் முகாமில் இருந்த மிதுலாவின் சகோதரன் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், இன்னும் சிலர் லொறியின் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். அதில் மிதுலாவின் சகோதரனும் ஒருவர். அதற்குள் அப்போது வவுனியாவுக்கு ரெலோ பொறுப்பாளராக இருந்த குகனும் சம்பவ இடத்திற்கு வந்து தாங்கள், சம்பந்தப்பட்ட சாரதி வின்சனுக்கு தகுந்த தண்டணை வழங்குவதாக உறுதியளித்தனர். மரண நிகழ்வுக்கான ஏற்பாடுகளையும் குகன் ஏற்பாடு செய்திருந்தார். இறுதிக்கிரியைகளின் போது வின்சன் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடிக்கப்பட்டார்.

ஒரு உயிர் இழப்பை எவ்வளவு பணமும் ஈடு செய்யாது, இழப்பீடாக 50,000 ரூபாயை வழங்கினர். குடும்பத்தினர் அதனை ஏற்க மறுக்கவே, பணத்தை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றனர்.

காயப்பட்ட கங்காவின் நண்பி குணமடைய இரு ஆண்டுகள் ஆனது. காலங்கள் உருண்டோட வவுனியா ரெலோ பொறுப்பாளராக இருந்த குகன் இயக்க மோதலில் கொல்லப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி கொலையைச் செய்த வின்சன் வவுனியா பொறுப்பாளரானார். இதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. அதின் பின் வின்சன் எப்படியோ ஜேர்மனி வந்தடைந்தார்.

கங்காவும் பிற்காலத்தில் அங்கு வந்து சேர்ந்தார். காயப்பட்ட கங்காவின் நண்பியும் ஜேர்மனியிலேயே வாழ்வதாகவே அறிய வருகின்றது. ஆனால் இவர்கள் யாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை.

இந்நிலையிலேயே ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் முகநூலில் கந்தையா அகிலன் மறைந்த செய்தியை வெளியிட்டு அஞ்சலியைச் செலுத்தி இருந்தார். அதற்கு மிதுலாவின் சகோதரி இடம் குறிப்பு கீழேபதிவு செய்யப்பட்டுள்ளது.

கந்தையா வின்சன் இந்த விபத்தை திட்டமிட்டு மேற்கொள்ளவில்லை. ஆனால் அவருடைய பொறுப்பற்ற செயல்: மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியது, முன் அனுபவமில்லாமல் அந்த வாகனத்தை பொது வீதியில் ஓட்டியது இரண்டுமே இந்த விபத்துக்குக் காரணம். இந்தப் பொறுப்பற்ற மனிதரை ‘மூத்த போராளி’ என அவருக்கு ஒரு அந்தஸ்த்தை வழங்குவது இன்னமும் மோசமான செயல். இவ்வாறான சில்லறைத்தனமான பொறுப்பற்ற செயல்களால் தான் நாடு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொருவரும் தங்களளவில் பொறுப்புடன் செயற்பட்டால் மட்டுமே ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியமைக்க முடியும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சிகளில் உள்ள பொறுப்பற்ற மனிதர்களை தூக்கி எறியத் தயாராக வேண்டும். மக்களும் பொறுப்பற்றவர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்த வேண்டும். மாறாக மௌள்ள மாரிகள், முடிச்சவிக்கிகள், பொறுக்கிகள் என கோயில்களும் அரசியல் கட்சிகளும் கொடியவர்களின் கூடாரமாகிவிட்டது.

2019யைக் காட்டிலும் 2020இல் இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2019இல் 2840 ஆக இருந்து விபத்து மரணங்கள் 2020இல் 3590 ஆகா 26வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பாதிக்கப்படுபவர்களில் 70 வீதமானவர்கள் பொருளாதார ரீதியாக சிக்கனமான போக்குவரத்தை பயன்படுத்துபவர்களாகவே உள்ளனர். விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் 50 வீதமானவர்கள் இருசக்கர அல்லது முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள். வீதி விபத்துக்களில் கொல்லப்படுபவர்களில் பாதசாரிகள் மூன்றில் ஒரு பங்கினர். மேலும் 25,000 பேர்வரை விபத்துக்களில் காயமுறுகின்றனர். இலங்கையில் யுத்தத்திற்குப் பின் உடல் ஊனத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக வீதி விபத்துக்கள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் பொலிஸார் வீதி விபத்துக்களை பதிவு செய்த போது எடுக்கப்பட்ட புள்ளிவிபரம். ஆனால் வீதி விபத்துக்களில் காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்கள் கடந்து இறந்தும் உள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது 2020இல் வீதி விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணக்கை 4,200க்கும் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தினமும் பதினொருவருக்கு அதிகமானவர்கள் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றனர்.

தெருக்களில் வாகனங்களின் அதிகரிப்பு (கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்து இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.) பராமரிப்பற்ற அல்லது பாராமரிப்பு குறைந்த வீதிகள், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது நம்பகத்தன்மை மற்றும் உறுதிப்படுத்தல்களில் காட்டப்படும் அசிரத்தை, வீதிக் குற்றங்கள் முறையாகத் தண்டிக்கப்படாமை, பொதுப் போக்குவரத்து வளர்த்தெடுக்கப்படாமை என்பன வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிடும் இவ்விபத்துக்கள் பல்லாயிரம் குடும்பங்களை உருக்குலைய வைக்கின்றது. அவர்களுடைய கனவுகளை வண்டிச் சக்கரத்தில் நசித்துவிடுகின்றது. வேகம் ஒரு போதும் விவேகமானதல்ல. உயிரினும் மேலானது எதுவுமில்லை. ஒரு வீதம் வேகத்தை அதிகரிப்பது உயிரிழப்பை நன்கு வீதத்தால் அதிகரிக்கின்றது. இன்னொரு உயிரைப் பறிக்கின்ற, எம்முயிரை பறிக்கின்ற வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். வேகமாகச் சென்று நாம் எதனையும் சாதித்துவிடுவதில்லை. ஆகையால் விவேகத்துடன் நிதானத்துடன் வாகனத்தை ஓட்டுவோம்.

துரதிஸ்ட்டவசமாக அன்று மிதுலாவை மோதிய வாகனத்தை அடித்து நொருக்கிய அண்ணனும் கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் கொல்லப்பட்டார். முன்னாள் போராளியான இவருடைய இன்னுமொரு சகோதரரும் மூத்த போராளியாக உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்இ சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்இ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல்இ அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகள் நெடுஞ்சாலைகளில் கைது செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்இ 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66,252.

மிதுலா விபத்தில் கொல்லப்பட்டு கால்நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனால் இலங்கையின் வீதிகள் இன்னமும் எமலோகத்திற்கான வீதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வீதி விபத்துக்களில் 1.3 மில்லியன் மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனை மட்டுப்படுத்த 2030இல் வீதி விபத்துக்களை 50 வீதத்தால் குறைக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐநா பொதுச் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. ஆனால் இலங்கையின் வீதிகள் என்னவோ மரணப் பொறியாகவே மாறி வருகின்றது. பொறுப்பற்ற மனிதர்களை சாரதி இருக்கையில் இருந்து தூக்கியெறிவதே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.