15

15

தண்ணீர் போத்தல்களில் கழிப்பறை இருக்கைகளை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் !

மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களில் கழிப்பறை இருக்கைகளை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்கள் சராசரி கழிவறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களை தங்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட  ஆராய்ச்சியாளர்கள் குழு, தண்ணீர் போத்தலின் பல்வேறு பகுதிகளான ஸ்பூட் மூடி(spout lid), ஸ்க்ரூ-மேல் மூடி, ஸ்ட்ரே லிட்(screw-top lid, stray lid) மற்றும் ஸ்க்வீஸ்-மேல் மூடி என ஒவ்வொன்றையும் மூன்று முறை வரை துடைத்து எடுத்து நடத்திய ஆய்வில், கிராம் நெகட்டிவ் ராட்ஸ் மற்றும் பேசிலஸ்(gram-negative rods and bacillus) என்ற இரண்டு வகையான பாக்டீரியாக்களை கண்டறிந்துள்ளனர்.

இந்த கிராம்-எதிர்மறை பாக்டீரியாக்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதிகளவில் எதிர்க்கும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சில வகையான பேசிலஸ் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் போத்தல்களின் தூய்மையை வீட்டுப் பொருட்களுடன் ஒப்பிட்டு போது, இவை வீட்டு சமையலறை மடுவை விட இரண்டு மடங்கு கிருமிகளைக் கொண்டிருப்பதாகவும், கணினி சுட்டியை விட நான்கு மடங்கு பாக்டீரியாவையும், செல்லப்பிராணி குடிக்கும் கிண்ணத்தை விட 14 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் வைத்தியர் சைமன் கிளார்க் வழங்கிய தகவலில், போத்தல்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும், அது ஆபத்தானது அல்ல என தெரிவித்துள்ளார்.

இந்த மீண்டும் பயன்படுத்தும் தண்ணீர் போத்தலை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூடான சவர்கார நீரில் கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

“மக்களுக்கு எதிராக ஒரு தோட்டாவை கூட பயன்படுத்தாதவர் சவேந்திர சில்வா” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவுடன் எமக்கு சில விடயங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் இருந்ததை மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேற்கொள்ளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்காததால் தான், அவர் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டாம் என மற்றைய தரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவருக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தோட்டாக்கள் பயன்படுத்தாமை தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட முயற்சி எடுக்கப்படுமானால் நாம் சவேந்திர சில்வாவின் பக்கம் நிற்போம்.

ஏனெனில் அன்று அவர் மக்கள் பக்கமே நின்றுள்ளார். இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்துள்ளார்” எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக வேலை செய்யாத அரசு அதிகாரிகள் – தங்களுக்கு பிரச்சனைகள் என்றால் மட்டுமே போராடும் அபத்தமான அதிகாரிகள்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்ததாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த போராட்டங்களால் மாணவர்கள், நோயாளர்கள் உட்பட பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொதுமக்கள் பலரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டங்களால் வைத்தியசாலைகளில் யாரும் கவனிப்பாரின்றி உள் மற்றும் வெளி நோயாளர்கள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய போராட்டத்தால் இந்த நிலை இன்னமும் மோசமடைந்துள்ளது.

இதைவேளை ஆசிரியர்களின் போராட்டத்தால் 100% பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாடசாலைகள் ஒரு வருட கால இடைவெளியில் இயங்கிவரும் நிலையில் இறுதித்தவணை பரீட்சை நேரத்தில் சம்பள உயர்வு வேண்டி பாடசாலை ஆசிரியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் பெற்றோர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முழுமையாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு கூறியுள்ளமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய நெருக்கடி நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிலுள்ளவர்கள் இந்த அரசாங்க அதிகாரிகள் தான். ஆட்சியாளர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்த அரசாங்க அதிகாரிகள் பதவியில்  நிலையாக ஆயுள் முழுமைக்கும் இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எந்த விடயங்களிலும் இதுவரை முன்னேற்றம் இல்லை. நாட்டு மக்களுக்கு தேவையான – அடிப்படை தகவ்லகள் கூட இன்னமும் கணினி மயப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் கணினித்துறைக்குள் தன்னுடைய நிர்வாக கட்டமைப்பை மிக வேகமாக உள்நுழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ள நினைக்காத பிரித்தானியர் கால  நிர்வாக கட்டமைப்பு ஒன்று தான் இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு அரசு திணைக்களங்களில் அளவுக்கு அதிகமான அதிகாரிகள் நித்திரை கொள்வதற்காகவே நியமிக்கப்பட்டது போல அசமந்தப் போக்கிலேயே இந்த நிர்வாக கட்டமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமான அபத்தம் தான் அண்மையில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த இலவச உணவுப் பொதிகள் கூட மக்கள் கைகளுக்கு ஒழுங்காக சென்று சேராத பிரச்சினை. மலையகம் தொடங்கி இலங்கையின் பல பகுதிகளிலும் அந்த உணவுப் பொதிகளின் நிலை என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.

இந்தக் கல்வித்துறை தொடர்பான இடங்களில் பணியாற்றிக் கொண்டிருக்க கூடிய ஆசிரியர்கள் எண்ணத்தை சாதித்து விட்டார்கள் என சம்பள உயர்வு கேட்டு போராடுகிறார்கள் என தெரியவில்லை. பாடசாலை மாணவர்களுக்கு நூலகப் பாவனைக்கான வசதிகளை கூட ஏற்படுத்திக் கொடுக்காத – ஏற்படுத்திக் கொடுக்க நேரமில்லாத ஆசிரியர்களும் – அதிபர்களும் தான் இங்கு அதிகம் பேர்.

மாணவர்களின் உடைய பிரச்சனைகளுக்காக இந்த ஆசிரியர்களும் – நோயாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகளும்- பொதுமக்களின் உடைய தேவைக்காக நிர்வாக அதிகாரிகளும் இதுவரையில் போராட்டம் செய்ததாக பெரிதாக பதிவுகள் இல்லை. எப்பொழுதெல்லாம் இந்த நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்பொழுது மட்டுமே நாடு சீரழிகிறது என இந்த அரசாங்க அதிகாரிகள் அழுது வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் புரட்சி என பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு – இந்த அபாயகரமான நிலைக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இந்த அரசு அதிகாரிகளுக்கும் உரியது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – தேடுதலில் பொலிஸார் !

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.

இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மயானம் அமைப்பது தொடர்பில் சிக்கல் – வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் அதிகாலை 12.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நாகர் கோவில் பகுதியில் மயானம் ஒன்றுக்கு சுற்றுமதில் அமைக்கும் முயற்சியின் தொடராக ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் போது துப்பாக்கிப் பிரயோகமும் தடியடியும் பொலிஸார் மேற்கொண்டதாக மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பகல் இரண்டு தரப்புகளும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் சமரசத்தில் ஈடுபட்ட நிலையில் மயானத்துக்கான மதில் அமைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களுடன் அசெம்பிள் செய்யப்பட்ட SENARO GN 125 பைக் !

புத்தம் புதிய SENARO GN 125 மோட்டார் சைக்கிள்கள் இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கையில் வாகன உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்தல், அசெம்பிள் செய்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்காக தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான செயற்பாட்டு நடைமுறை (SOP) இந்த மோட்டார் சைக்கிள்களின் அசெம்பிளில் பின்பற்றப்பட்டது.

செனாரோ மோட்டார் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான வடுகேவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக சாவிகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆவணங்கள் வழங்கப்பட்டன.

யக்கல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அசெம்ப்ளி தொழிற்சாலையானது SENARO GN 125 மோட்டார் சைக்கிளை 35% பெறுமதி சேர்ப்புடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிப் பாகங்கள் மூலம் உற்பத்தி செய்து வருகின்றது, Senaro Motor Company Pvt. லிமிடெட் நிறுவனம் ரூ. இலங்கை வங்கியின் முழு நிதியுதவியுடன் இந்த முயற்சியில் 1.5 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.

கிட்டிய எதிர்காலத்தில் பெறுமதி  கூட்டுதலை 50% ஆக அதிகரிப்பது மற்றும் 160 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இதன் இலக்காகும்.

இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட, SENARO GN 125 மோட்டார் சைக்கிள் தற்போது உள்ளூர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதிலும், உள்ளூர் நிறுவனங்களுக்கு புதிய ஆற்றலை சேர்ப்பதிலும் ஒரு சக்தியாக உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சி பெரேரா (PC), பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, பிரதிப் பொது முகாமையாளர் ரோஹன குமார, Senaro மோட்டார் நிறுவனத்தின் பணிப்பாளர் மொஹான் சோமச்சந்திர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை மக்களிடையே குறைவடையும் மதுபான பாவனை – இலங்கை மதுவரித்திணைக்களம் கவலை !

மது விற்பனையில் வேகமான சரிவு ஏற்பட்டுள்ளதால், 13 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கலால் துறை மற்றும் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் கலால் வரியை குறைக்க ஆவண செய்யுமாறு நிதி அமைச்சிடம் கலால் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது .
அக்கடிதத்தில் கலால் வரியை 2000 ரூபாவால் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது மது, பியர் ஆகியவற்றுக்கு 4500 முதல் 5500 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.

தற்போது, ​​மது விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது, மேலும் சில மது உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மது விற்பனை பாரியளவில் குறைந்துள்ளதாக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுகுறித்து கலால் திணைக்கள கூடுதல் கலால் ஆணையர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளதாவது : மதுபான உற்பத்தியாளர்கள் போன்று கலால் திணைக்களமும் கலால் வரியை குறைக்க கோரியுள்ளது , மதுபானத்தின் விலை உயர்வால் , பலர் சட்டவிரோத மதுவை நாடியுள்ளனர். இந்த நிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுவரியை இயன்றவரை குறைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளின் படி மதுபான விற்பனை, சிகரட் விற்பனை போன்றவற்றால் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட இவற்றை பாவிப்பவர்களுக்கான மருத்துவசெலவு எகிறியுள்ளதாக கடந்த ஆண்டு தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில்; மக்கள் மதுபானங்களை நுகரும் திறன் குறைந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

“நாமல் ராஜபக்ஷ அரசியல் அறிவு இல்லாத பிராய்லர் கோழி” – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத பிராய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச விபரித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய வீரவன்ச, மக்கள் அவதிப்படும் வேளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் கிரிக்கெட் விளையாடுவதாக தெரிவித்தார்.

“அவர் ரணிலைப் போன்றவர், அவர் இன்னும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, மக்கள் கோபப்படுவது நியாயமானது, அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார், அவர் வளர்ச்சியடையாத பிராய்லர் கோழி”

நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த வாரிசு அரசியலே காரணம். கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். டலஸ் அழகப்பெருமதான் அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் தெரிவித்துள்ளார்.