19

19

லூட்டன் (பிரித்தானியா) பொதுப் பூங்காவில் தமிழ் கடைக்காரரின் உடல் மீட்பு! கொலையா? தற்கொலையா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை!

யாழ் சாவகச்சேரி சரசாலையைச் சேர்ந்த கந்தசாமி பிரபாகரன் (39) என்ற கடைக்காரர் ஒருவரின் உடல் மார்ச் 17ம் திகதி லூட்டன் எல்யூ 1 (LU1) என்ற பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் கண்டெடுக்கப்பட்டதாக தேசம்நெற்க்கு தெரிய வருகின்றது. தனது கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு மொத்தக் கொள்வனவாளர்களிடம் சென்றவர் மார்ச் 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டதாக கொல்லப்பட்டவரின் சகோதரருக்கு நெருக்கமான நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இது பற்றி தேசம்நெற்குத் தெரியவருவதாவது பிரபாகரன் மார்ச் 17 காலம் தாழ்த்தி காலையுணவை முடித்துக்கொண்டு கடைக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய, அங்குள்ள மொத்தக் கொள்வனவு நிலையத்துக்கு செல்வதாகக் கூறி வெளிக்கட்டுள்ளார். பிரபாகரன் நீண்ட நேரமாக வராததினாலும்; தொலைபேசிக்கு பதிலளிக்காததாலும்; மற்றையவர்களுக்கும் தொடர்புகொண்டு விசாரித்தும் பதிலில்லாத நிலையில், அவருடைய மனைவி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் பின்னர் இவருடைய தொலைபேசியின் சிக்னலைக்கொண்டு அது இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். அன்றைய தினம் இரவு பிரபாகரனின் உடல் தூகிடப்பட்டநிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டது என அந்நண்பர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரன் கந்தசாமி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு வந்தவர். யாழ் சாவகச்சேரியில் ஓரளவு வசதியான வர்த்தகக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதர் அதற்கு முன்னரேயே லண்டன் வந்தவர். அவர் கடையை நடத்தி வந்தார். அதன் பின் பிரபாகரனும்; ஒரு கடையை ஆரம்பித்தார். பிரபாகரன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி அவருக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு கைக் குழந்தையும் உண்டு. குடும்பம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் இருந்ததாகவும் தற்கொலை செய்வதற்கான எந்தக் காரணமும் குடும்பத்தில் இருக்கவில்லை என்றும் அக்குடும்பத்திற்கு நெருக்கமான மற்றொருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பிரபாகரனின் உடல் கண்டெடுப்பதற்கு சிறிது காலம் முன்பாக அவர் கெபாப் (Kebab) உணவகமொன்றுக்கு சென்றிருந்ததாகவும் அங்குள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் பிரபாகரனின கடைக்கு அருகில் கடை நடாத்திவரும் இன்னுமொரு கடைக்காரர் தேசம்நெற்குக்குத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவருக்கு குறிப்பிடத்தக்க அளவு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு இருந்ததாகவும் அக்கடைக்காரர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தேசம்நெக்கு மேலும் ஒரு உறுதிப்படுத்தப்பட முடியாத தகவலும் கிடைத்தது. அதன்படி பிரபாகரன் தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சந்தித்து வழக்கில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவாரத்தையில் ஈடுபட்டதாகவும் செல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

இளம் குடும்பஸ்தரான உயிரிழந்த பிரபாகரன், சாவகச்சேரியில் பல உதவித்திட்டங்களை மேற்கொண்டுவந்ததாகவும் அவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் தெரியவருகின்றது.

சில ஊடகங்கள் இதனை ஒரு படுகொலை என்று தீர்க்கமானதாக செய்தி வெளியிட்டுள்ளதுடன் அப்படுகொலை ஹரோவில் வெறிச்சோடிய பகுதியில் நடைபெற்றதாகவும் ஹெரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லூட்டன் பொலிஸார் எவ்வித தகவல்களையும் யாருடனும் பரிமாற வேண்டாம் என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகின்றது. பிரேத பரிசோதணையின் பின்னரேயே இம்மரணம் தொடர்பில் வேறு யாரும் தொடர்புபட்டுள்ளனரா என்பதை பொலிஸாரல் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மரணம் தொடர்பில் லூட்டன் பொலிஸார் எவ்வித அறிக்கையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை.

இராணுவ முகாமாக மாற்றமடையும் யாழ்ப்பாணத்து பாடசாலை !

யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்திற்கு கைமாற்றப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருக்கிறது.

இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையினர் யாழ். குடாநாட்டை கைப்பற்றியது முதல் இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறு முகாமாக இயங்கும் பாடசாலைக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தினரிற்கே நிரந்தரமாக கையளிக்குமாறு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு இப் பாடசாலையை கையளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சை எழுத்தில் கோரியுள்ளது.

தலிபான்களின் மீள் வருகையால் ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட 50 சதவீத செய்தி நிறுவனங்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

” ஊழல் இல்லாமலா சஜித் பிரேமதாச தரப்புக்கு 235 மில்லியன் ரூபா வந்தது? இல்லை மரத்தில் இருந்து பறித்தார்களா?” – ஜீவன் தொண்டமான் கேள்வி !

ஊழல் ஒழிப்பு.., ஊழல் ஒழிப்பு… என உறங்கும் வேளையிலும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தமது கட்சியால் வழங்கப்பட்டுவரும் பஸ்களுக்கான உதவித்திட்ட வழிமுறைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பஸ்கள் வழங்க எவ்வாறு நிதி கிடைக்கின்றது. அந்த வழிமுறையை சொன்னால் சிறப்பாக இருக்குமென நான் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தால் சிலருக்கு தொடை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கைக்கூலிகள் மூலம் கட்டுக்கதைகள் பரப்பட்டு வருகின்றன. இப்படியானவர்களின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. மக்கள் அவற்றை நம்ப போவதுமில்லை. ஏனெனில் மக்கள் என்பக்கம் எனவும் ஜீவன் தொண்டமான் கூறினார்.

அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் எல்லா வேலைத்திட்டங்களையும் எதிர்த்தால் தான் அது எதிர்க்கட்சி என நினைத்துக்கொண்டே பிரதான எதிர்க்கட்சி செயற்படுகின்றது. அதுமட்டுமல்ல அரசால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை குழப்பும் நோக்கில் ´ஊழல்´ முத்திரை குத்தப்பட்டு வருகின்றது. தேர்தல் காலம் வந்தால்போதும் – அலசி ஆராயாமல்கூட எடுத்த எடுப்பிலேயே ஊழல், ஊழல் என கோஷம் எழுப்புகின்றனர்.

ஆனால் தாங்கள் எதையாவது செய்துவிட்டால் அது சேவை என்ற போர்வையில் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்க்கட்சியால் பாடசாலைகளுக்கு பஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பஸ்லின் விலை 5 மில்லியன் ரூபா எனக் கூறப்படுகின்றது. இதுவரை 47 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படியானால் 235 மில்லியன் ரூபா எங்கிருந்து வந்தது? மரத்தில் இருந்து பறித்தார்களா? வந்த வழியைதான் கேட்டேன். ஏனெனில் அவர்கள் வெளிப்படை தன்மை பற்றி கதைப்பவர்கள். எனவேதான் பஸ் விடயத்திலும் வெளிப்படை தன்மையை வலியுறுத்தியுள்ளேன்.” – என்றார்.

14வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச்சென்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது !

காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.

மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்ற வேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு சிறுமி அழைத்துச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக்காலம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாளை (20ஆம் திகதி) முதல் உள்ளூராட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் நாளை (20) முதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் வைக்கப்படும்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமானது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாக, அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2018 ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது.

அரசியலமைப்பின் பிரகாரம் 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நான்கு வருட காலத்திற்குப் பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது. தனது அதிகாரத்தின் பிரகாரம் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன்படி அந்த 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும், இதுவரை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறாததாலும், உள்ளூராட்சி நிறுவனங்கள் அரசு அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களின் கீழும், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களின் கீழும் இருக்கும்.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு – வெளியாகியுள்ள அறிவிப்பு !

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள், முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறித்த தரவுச்சுட்டியை வெளியிடும் இணையத்தளமும் தரவுகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளது – மத்திய வங்கி

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் வரவிருக்கும் ஒப்புதல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் அதேவேளை நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில், கலாநிதி வீரசிங்க, IMF வாரியம் நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கான கடனை முறைப்படி அங்கீகரிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான வகையில் இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறும் இராணுவ வீரர்கள்!

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் ஆயுதப்படையின் இருபத்தைந்து அதிகாரிகள் உட்பட மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மட்டும், பத்து அதிகாரிகள் உட்பட சுமார் 1,500 ஆயுதப் படை வீரர்கள் வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் உட்பட பதின்மூன்று அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கும் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்கும் முப்படைகளின் தளபதிகளின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு குடிவரவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார சிரமங்களினால் கடனை செலுத்த முடியாத நிலை, அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு உள்ள வசதிகள் குறைப்பு போன்ற காரணங்களால் இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கடந்த வருடம் டிசம்பர் மாதமளவில் 14000த்துக்கும் அதிகமானோர் சட்ட விரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறியதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் கட்டிப்பிடிக்க தடை.” – துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும் கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எம்.லமாவன்ச தெரிவித்துள்ளார்

அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், பேராதனை பல்கலைக்கழகம் ஒருவருக்கொருவர் கட்டியணைப்பதை தடை செய்யாது என்றார்.

பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் , அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் பேராசிரியர் லமாவன்ச கூறியுள்ளார் .

“எனது நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும். கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநிலையுடன் இணக்கமான குழுவாக பணியாற்ற அவர்களை அனுமதிக்கிறேன்,” என்றார்.

வளாகத்தில் கட்டிப்பிடிப்பது தடைசெய்யப்படவில்லை, ஆனால் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பல பார்வையாளர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க தங்கள் வரம்புகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று துணைவேந்தர் மேலும் கூறியுள்ளார்.