24

24

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது – ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புடின் கூறும்போது,

“சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் மரியுபோல் பகுதிக்கு புடின் திடீரென பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தில் மரியபோலில் மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆலோசனையை அவர் நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

 

குருந்தூர்மலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள உத்தரவு !

வடக்கிலுள்ள முக்கியமான வரலாற்றுத் தளங்களில் ஒன்றான முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆலயத்தின் மேற்கு எல்லையில் தொல்பொருள் திணைக்களத்தினால் 229 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு தண்ணிமுறுப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தக் காணியில் புத்தர் ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து குறித்த நடவடிக்கை நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது.  எனினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி குருந்தூர்மலையில் விகைரைப் பணிகள் முழுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட 229 ஏக்கர் காணியையும் உடனடியாக விடுவித்து உரியவர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான கடிதத்தை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அதிபர் செயலகம் அனுப்பி வைத்துள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்ற பல நாடுகள் இறுதியில் வீழ்ந்து போனதே வரலாறு.” – ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா அறிவுரை!

நாடு பலமடைந்து வருகின்றது என்று ஜனாதிபதியும் வெளிநாட்டு நாணய கையிருப்பு பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கி ஆளுநரும் கூறுகின்றனர் என்று தெரிவித்த

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, நகைச்சுவைகளை கூற வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உள்ளிட்ட கடனுடன் 6,200 கோடி ரூபாய் கடனுக்குள் இலங்கை தள்ளப்பட்டுள்ளது. நாட்டை சீரழித்தவர்களுக்கு மாற்று வழிகளை கொடுப்பதற்காக நாங்கள் வரவில்லை. அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும். நாங்கள் எப்படி மாற்றுவழியில் முன்னேற்றுவது என்று தீர்மானம் எடுக்கலாம்.

நாடு வங்குரோத்தடையவில்லை. பலமடைந்து வருகின்றது என்று ஜனாதிபதி கூறுகின்றார். மத்திய வங்கி ஆளுநரும் வெளிநாட்டு நாணய கையிருப்பு பிரச்சினை இல்லை என்று கூறுகின்றார். இவ்வாறு நகைச்சுவைகளை கூறாது அது உண்மையென்றால் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளையும், பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தலாம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தலாம். இதனை செய்யாது மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம் என்று கேட்கின்றோம்.

இதேவேளை நிலைமையை அறிந்துகொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதியை வழங்கி உடனடியாக தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இப்போது கடன் வாங்குவதுடன், நாட்டின் அரச நிறுவனங்களை விற்பதற்கும் முயற்சிக்கின்றனர்.

லெபனான் போன்ற நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றது தான் இறுதியில் வீழ்ந்து போனது. இதனால் சர்வதேச நாணய நிதியத்தை நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது.

அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அடக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தண்டனை வழங்குவோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. உண்ண உணவு இல்லாவிட்டாலும் சிலர் பாற்சோறு சாப்பிடுகின்றனர். சிறிய கடன் கிடைத்தது என்பதற்காக பாற்சோறு சாப்பிடும் மனிதர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு அறிவு உண்டாகட்டும் என்று வேண்டுகின்றோம்.

“தன்நாட்டின் சக மக்கள் கொல்லப்பட்டதற்கும் , கடன் வாங்கியதற்கும் பெருமைப்பட்டு பட்டாசு கொளுத்தும் வித்தியாசமான மக்கள் இங்குள்ளனர்.” – இரா.சாணக்கியன்

“தங்களது நாட்டினுடைய சக மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்த போது வீதிகளில் வெடி கொளுத்தி, பாற்சோறு காய்ச்சிய மக்களும், சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலுக்கு பட்டாசு கொளுத்திய வித்தியாசமான மக்களும் இலங்கையில் மட்டுமே உள்ளனர்.”

இவ்வாறு, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம், மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர்,

“சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலை இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனக் கூறமுடியாது, எமது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதை உறுதி செய்கின்ற விடயத்தையே இந்த கடன் ஒப்புதல் பிரதிபலிக்கிறது.

சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதலின் மூலம் இலங்கை மீண்டும் கடன் பெறுகின்ற நிலைக்கு மாறியுள்ளது, இது மேலும் கவலையளிக்கின்ற விடயமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க, பாரிய முதலீடுகளை கொண்டு வருவதற்கு, தமிழருக்கு நிரந்தர தீர்வினை வழங்குமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அரசிற்கு வலியுறுத்தி இருந்தோம்.

முதலீடுகளை கொண்டுவருவதற்கு எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் எனக் கூறினோம், இருப்பினும் இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்ப்பதாக இல்லை.

கடனை வாங்கிக்கொண்டு மட்டும் நாட்டை முன்னேற்றலாம் என்பது முட்டாள்தனமான சிந்தனை.

தமிழர் தாயகங்களில் இலங்கை அரசு பெளத்த விகாரைகளை அமைத்து தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ் மக்களை புறக்கணிக்கின்ற செயல்பாடுகளை நாளாந்தம் இலங்கை அரசு செய்து கொண்டிருக்கின்றது.

இதேவேளை, தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் தமிழ் மக்களுக்காண தீர்வு விடயத்தில் அமைச்சர் அலி சப்ரியும் இரட்டை வேடத்தை போடுகின்றார்.

அவரின் விருப்பத்திற்கு அமைய சம்பந்தம் இல்லாத கருத்துக்களை வெளியிடுகின்றார்.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒப்புதல் மட்டும் போதாது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வின் மூலமே அது சாத்தியமாகும்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் தலைமுடியை வெட்டி பரீட்சைக்கு தோற்ற விடாது செய்த அதிபரிடம் விசாரணைகளை ஆரம்பித்தது சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை !

கம்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் தலைமுடியை வெட்டி, பரீட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்காமல் அவர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வருடம் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றே இச்சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

22 ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பருவத்தேர்வு தொழில்நுட்ப பாட தாளுக்கான விடைகளை எழுதும் முன்னர் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆகியோர் மாணவர்களின் தலைமுடி நீளமாக வளர்ந்துள்ளதால் தலைமுடியை வெட்ட நடவடிக்கை எடுத்தனர்.

தலைமுடியை வெட்டிய பின்னர் அந்த மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப்படாமல் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஆசியாவில் ஊழல் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை உளளதாகவும் – ஊழல் தொடர்பான IMF விசாரணைகள் இலங்கையில் நடந்தே தீரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பியுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப்பட்டியலில் – அதிருப்தியில் அனுர !

மக்கள் விடுதலை முன்னணியுடன் அரசியலில் ஈடுபட்டதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா உட்பட மூன்று இராணுவ அதிகாரிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய அவர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா எந்தவொரு விமானப்படைத் தளத்திற்கும் நுழைவதற்கும் விமானப்படை நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் சக்தியுடன் தீவிர அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக துயகொண்டா கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“எந்தவொரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு தடையில்லை. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரத்ன போன்ற எத்தனையோ ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தீவிர அரசியலில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் ஒரு போட்டி அரசியல் கட்சியுடன் அரசியல் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களை கட்டுப்படுத்துவது நியாயமற்றது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை எனவும், கம்பஹாவில் இடம்பெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றியதற்காக ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் விமானப்படையின் நற்பெயரையும் ஒழுக்கத்தையும் களங்கப்படுத்துகிறது.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் அரசியலையும் இராணுவத்தையும் தெளிவாகப் பிரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கம்!

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய் கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு நடைபயணம் !

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு கால் நடையாக நடை பயணம் ஒன்றை இன்றுஆரம்பித்துள்ளார்.

நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூர நோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும். நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல, மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நேற்று காலை நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு, ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கஞ்சா விற்பனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் !

கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

மதுவரி திணைக்களத்தினர் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்து.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.