30

30

மக்கள் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் – பெண்ணின் கழுத்தை நெரித்த பொலிஸார் !

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்றமையால்,  பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக சென்ற பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி, முக்கியமாக இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் நிற்க வைத்து பிரதான கதவை பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து  அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக சூரிய கலங்களை நிறுவுவதற்காக விவசாய காணிகளை கையகப்படுத்துவது சம்பந்தமான பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை மீனவர்கள் பிரச்சினை, காணிகளை காப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் முறைப்பாடு வழங்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பிரச்சினையை ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும், பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,  ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவரின் கழுத்தை காவல்துறையினர் நெரித்தமையால் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மாவட்ட அரசியல்வாதிகளின், மாவட்ட முதலாளிகளின், கார்ப்பரேட் கொம்பனிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் இடமாக இது போன்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திற்கு செல்வதற்கு அனுமதியை பொலிஸாரிடம் கோரிய நிலையில், பொலிஸார் இராஜாங்க அமைச்சரையும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.

இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள்வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விளங்கங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும்,அதனை ஏற்றுக்கொள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்குஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவத்து, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வெளியேறிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து, இரா. சாணக்கியனும், சில வினாக்களை, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் கிடைக்காததையடுத்து, இரா.சாணக்கியனும் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தார். இதன் பின்னர் அபிவிருத்திக் குழுக்கூட்டம் சுமூகமாக இடம்பெற்றது.

2213ஆவது நாளை தொட்ட முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் போராட்டம் 2213 ஆவது நாளான 30.03.2023 இன்று நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்னால் முல்லைத்தீவு முதன்மை வீதியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளதுடன் பதாதைகளை தாங்கியாவறு ஓ.எம்.பியும் வேண்டாம் நட்டஈடும் வேண்டாம், மரணசான்றிதழும் வேண்டாம், இலஞ்சமும் வேண்டாம் போன்ற கோசங்களை தாங்கி சர்வதேச விசாரணையே தங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர ஒரே வழி சர்வதேசமே பதில் சொல் என வலியுறுத்தி இந்த கவயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி சர்வதேச நீதிமன்றத்தில் எங்கள் உறவுகளுக்கு என்ன செய்தார்கள் என்பதை சொல்லவேண்டும் அதற்கான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றோம்

சர்வதேசம் இலங்கைக்கு பொருளாதார பிர்ச்சினைக்கு நிறைய உதவி செய்து கொண்டிருக்கின்றது இதேமாதிரி எங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் சரியான நீதியினை பெற்றுத்தரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இன அழிப்பு தொடச்சியாக இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் ஆதாரமாக இருக்கின்றது

நீதி கிடைக்கும் வரை எவரின் அழுத்தம் வந்தாலும் தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு இந்த நட்டஈடு, மரணசான்றிதழ்கள், ஆற்றல்படுத்தல்கள் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

“பயிர்களை மேயும் ஆசிரியர்கள் என்ற வேலிகள் ” – பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த பாடசாலை ஆசிரியர் !

மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28 ம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார்.

மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் மகிழுந்து ஒன்றில் ஏறிச் செல்வதைக் சிலர் கண்டதாக தந்தைக்கு கூறியுள்ளனர்.

இந்தநிலையில், மாணவியைத் தேடி பெற்றோர் பல்லகஸ்வெவ சந்திக்கு சென்றபோது, ​​அவர் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர் ஒருவர் தன்னை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற பல முறைப்பாடுகள் அடுத்தடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி கொடுத்து அந்த மாணவர்களூடாக சக வகுப்பு மாணவிகளூ வன்புணர்வுக்கு உட்படுத்தி காணொளியாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் 05.03.2023 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார்.

இது போல் இந்த வருடம் ஜனவரி மாதம் ஹொரவபொத்தானை பகுதியில் 10 வயதான சிறுமியை பலவந்தப்படுத்தி தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமும் நினைவில் கொள்ளத்தக்கது.

இதே போல பத்து வயது  மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து பாடசாலை ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 46 வயதான ஆசிரியரே கைது செசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கான இறுக்கமான தண்டனைகள் எதுவும் இல்லாமை தான் ஆசிரியர்கள் சுதந்திமாக இந்த பாலியல் சேட்டைகளில் ஈடுபட முக்கியமான காரணமாகும். கடந்த 2016ல் யாழ்ப்பாணம் பெரிய புலம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் போது அதிபர் கூட கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அதன் பின்பு அந்த வழக்கு என்ன ஆனது..? என்ற பேச்சே இல்லாமல் போய்விட்டது.

இது போல ஆசிரியர்களின் மாணவிகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான பல செய்திகள் உடனடியாக வெளிவந்தாலும் கூட குறித்த ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் எத்தகையதாக உள்ளது என அறியவே முடிவதில்லை.

இப்படியாக அரச அதிகாரிகள் என்ற பெயரில் ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி ஆசிரியர் சங்கம் போராடுவதாக இதுவரை தெரியவில்லை. இந்த ஆசிரியர்கள் தான் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்க போகிறார்கள் என பெற்றோர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிரான இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படும் வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆலய கோயிலின் பழமையான சிலைகளை காணவில்லை!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1846 ஆம் ஆண்டு அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உற்சவ காலங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

பின்னர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் காரணமாக எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.

வாழ்ந்து வரும் காலத்தில் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. ஆலய விக்கிரமங்களும் இருந்தன.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற போது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன.

தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம். தற்போது சிலைகள் காணாமல் போயுள்ளன.

வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?

24 மணி நேரமும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ராணுவம் ஈடுபட்டிருக்கும் போது நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட ராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம்.

இவ்வாறு நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் எப்படி காணாமல் போனது என கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் !

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் “ விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் நேற்று (29) நடைபெற்ற ஆராய்ச்சி உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பொருளாதார பாதுகாப்பு” என்ற ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த சிரேஷ்ட ஆய்வு அதிகாரி பிரசன்ன விஜேசிறி, மாதமொன்றுக்கு எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் மற்றும் சிறுதொழில் மூலம் வருமானம் ஈட்டும் மக்களின் உணவுப் பாவனையும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். .

இந்த நாட்டில் உள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பின்மை 54 சதவீதமாக இருப்பதாகவும், நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டத் துறையில் உணவுப் பாதுகாப்பின்மை முறையே 43, 53 மற்றும் 67 சதவீதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2021ம் ஆண்டை விட, 2022இல், சிக்கன், மீன், முட்டை உள்ளிட்ட புரத உணவுகளை உட்கொள்வதை 50 சதவீதம் குறைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலை இந்த ஆண்டிலும் தொடர்கிறது என மூத்த ஆராய்ச்சி அதிகாரி மேலும் கூறினார்.

 

இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை இழந்து விட்டோம் – ஜப்பான்

இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை இழந்துவிட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் ஜப்பானிற்கும் இடையில் 1952 ம் ஆண்டுமுதல்  பல தசாப்தங்களாக இராஜதந்திர வர்த்தக உறவுகள் காணப்பகின்ற போதிலும் இலங்கை அரசாங்கத்தின் திடீர் மற்றும் தன்னிச்சையான கொள்கைகளால் ஜப்பானிய வர்த்தகர்கள் தற்போது இலங்கையில் வர்த்தகம் செய்வது குறித்த நம்பிக்கையை இழந்துள்ளனர் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடியாகி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொருளாதார ஆட்சிமுறை மற்றும் வெளிப்படைதன்மை தொடர்பில் அடிக்கடி கொள்கை மாற்றங்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இதன்காரணமாக ஜப்பானிய வர்த்தகர்கள் இலங்கை குறித்து நம்பிக்கையை இழந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இலங்கை வாகன வர்த்தகர்கள் சம்மேளனத்தின் நிகழ்வில் கேள்விகளிற்கு பதிலளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்கால பொருளாதார நிலை மற்றும் மீட்சி குறித்த கேள்விகளிற்கு பதிலளிக்கையில் ஊழலை இல்லாமல் செய்வதற்கான கொள்கைகள் வருமான இடைவெளியை குறைத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் அரசநிறுவங்களின் வினைத்திறனை அதிகரிப்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடுக்குநாறி ஆலய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு !

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும், இன்னும் அந்த பிரச்சினை தொடர்கிறது.

வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.

அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதே வேளை வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வவுனியாவில் இன்று பேரணி ஒன்று நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் கண்டிக்கப்பட்டதுடன் தமிழரின் வழிபாட்டு உரிமைகளை பறிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

“இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது என்றும், நாடு முன்னேற வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றத்தில் ‘பொருளாதார உரையாடல்- சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தலைப்பில் விசேட உரை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி – 13,800 ஆசிரியர்கள் நியமனம்!

அனைத்து முதலாம் தரப் பிள்ளைகளுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கங்கொடவில சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) முதலாம் தரப் பிள்ளைகளுக்கான ஆங்கில மொழிப் பாவனையை ஆரம்பிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்குத் தேவையான சுமார் 13,800 ஆரம்ப ஆசிரியர்கள் இதுவரை பயிற்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் மாணவர்கள் ஆரம்பம் முதலே ஆங்கிலத்தில் கல்வி கற்பதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொள்ள ஆங்கில மொழி ஊடான கல்வியை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, அடுத்த வருடம் இத்திட்டம் தரம் இரண்டிலிருந்தும் பின்னர் தரம் மூன்றிலிருந்தும் ஆங்கில மொழி மூலமான கல்வி இணைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்