April

April

“நாட்டை முன்னேற்ற முயற்சித்த பசில் ராஜபக்ச மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.”- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர். அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்தத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவர் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய தலைவர் பசில் எனவும், கடந்த காலங்களில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாதியாக குறைக்கப்பட்டது உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை !

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4,714 ஆக குறைக்கப்படுகிறது.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய தேசிய குழு தமது அறிக்கையின் இரண்டாம் அலகை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று கையளித்தது.

தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செள்த பொலிஸ் அதிகாரி !

கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பொலிஸ் களப்படை தலைமையகத்தில் பணிபுரியும் சாரதி கான்ஸ்டபிள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முப்பதாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு பெண் ஒருவருக்கு மூன்று மாத்திரைகளை உட்கொள்ளச் செய்து கருக்கலைப்பு செய்வதாகவும் இவர் தொடர்பான விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றம் – இருவர் கைது !

கொழும்பு, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்),  டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமானது உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும், மற்றைய நபர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட தலாய்லாமா மன்னிப்பு கோரினார் !

திபெத்திய பௌத்தமத தலைவரான தலாய்லாமா தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என சிறுவனிடம் கேட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தலாய்லாமாவை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலாய்லாமா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘சமீபத்தில் நடந்த நிகழ்வில், ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா? என்று கேட்டது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. அதில், தனது வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால், அதற்காக சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தலாய்லாமா மன்னிப்பு கேட்க விரும்புகின்றார்’ என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா 2019ல் கூறியது சர்ச்சையானது. அதன்பின்னர் தலாய்லாமா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சினை – ஒருவர் கொடூரமாக கொலை !

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரமாகத் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

நீண்டகாலமாக சாந்திபுரம் பகுதியில் இரு குடும்பத்திற்கு இடையில் நிலவி வந்த பிரச்சினை பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு குறித்த இரு குடும்பத்திற்கு இடையில்  மீண்டும் பிரச்சினை இடம் பெற்ற நிலையில் முரண்பாடு முற்றியுள்ளது.

இந்நிலையில்  பலர் இணைந்து கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய நிலையில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சத்தியா என்ற நபர் மரணமடைந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட  ஐவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜீவன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – உருவாகிறது மலையக பல்கலைகழகம் !

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.

இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதன்படி விரைவில் பணி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், வீ.இராதாகிருஷ்ணன், எஸ்.பி. திஸாநாயக்க, சீ.பீ ரத்னாயக்க ஆகியோரும், ஜனாதிபதி செயலாளர், மாகாண ஆளுநர், அரச அதிபர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தற்போது ஸ்தம்பித நிலையில் உள்ள அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி, வசந்தகால பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளன

போதைபொருள் பாவித்த யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் – உறுதிப்படுத்தியது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை !

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் றோட்டுப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப்பட்டுப் பின்னர் பல்கலைக்கழக அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில மாணவர்களை உளவளத் துணை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும்

“இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களின் சிபார்சின் அடிப்படையில், போதைக்கு அடிமையாகி இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் மாணவர்களைத் தேவையான உளவளத் துணைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்த மாணவர்களின் பெற்றோர்களும் நேரடியாக அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் எடுக்கும் எந்தச் சட்ட நடவடிக்கைளிலும் பல்கலைக்கழகம் குறுக்கிடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால், அவர்கள் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டிருந்தனர். எனினும், மாணவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தேவையான புனர்வாழ்வு நடவடிக்கைகளைப் பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட மாணவர்கள் இன்று நண்பகல் பரீட்சை முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் மாத்திரமே போதை மாத்திரை உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வைத்தியசாலை வட்டாரங்கள், இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தன.

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலமே நாட்டுக்கு அவசியமானது – சஜித் பிரேமதாச

பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை அன்றி ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தையே அரசாங்கம் துரிதமாக கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் ஊடாக பன்டோரா பத்திரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட ஊழல்வாதிகள் மற்றும் கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இவ்வாறு குறித்த சட்டமூலத்தைக் கொண்டுவருதன் மூலம் ஊழல்வாதிகளை உரிய முறையில் தண்டிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அரசாங்கம் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் சட்டமூலத்தையே கொண்டுவர முனைவதாகவும் அதன் ஊடாக தமது உற்ற ஊழல்வாதி கூட்டாளிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள மக்களை பாதிக்கின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது சிங்கள மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை மட்டுமல்லாமல் சிங்கள இனத்தையே அடிமைப்படுத்தப்போகும் ஒரு சட்டமாக இது அமையும் என்றும் சிறிதரன் எச்சரித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்புக்கள் காரணமாக இந்த சட்டமூலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, அதனை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அமுல்படுத்த அனுமதிக்க போவதில்லை என்றும் அதற்கான முழு முயற்சியை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.