April

April

யாழ்ப்பாணம் நயினாதீவில் உள்ள வீதிக்கு இரவோடிரவாக சிங்களத்தில் பெயர் மாற்றம் !

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளமையானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை துரித கதியில் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் இரவோடிரவாக இந்த பெயர்மாற்றமும் இடம்பெற்றுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

17 யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போதைப்பொருளுடன் கைது – மாணவர்களை விடுவித்த பீடாதிபதி !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த சந்தேகத்தில் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்கொல்லி போதைப்பொருளை விற்பனை செய்யும் நபர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய நேற்று மாலை மாணவர்கள் தங்கியிருந்த விடுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மணத்தறை வீதியிலுள்ள தனியார் விடுதியில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ளனர்.

குறித்த 17 மாணவர்களில் 15 சிங்கள மாணவர்களும், 2 தமிழ் மாணவர்களும் உள்ளடங்குவர்.

இது தொடர்பில் விஞ்ஞானபீட பீடாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன், கைதான மாணவர்களுக்கு பரீட்சை நடைபெற்று வருவதாக பீடாதிபதி தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டனர்.

பல்கலைக்கழக ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறும், மாணவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பில் ஆராயுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 25 மரணங்கள் – சாரதிகளே அவதானம் !

கடந்த ஐந்து நாட்களில் வாகன விபத்துக்களினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களில் 265 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகள், குறிப்பாக இளைய சாரதிகள் வாகனத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்.” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் நேற்று மாலை (08) ஊடகங்களுக்கு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரிய பொருளாதாரச் சிக்கல் ஒன்று இந்த நாட்டை பீடித்திருக்கின்றது. அதிலிருந்து இந்த நாட்டை மீட்க போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி வருகின்றார். அவ்வாறு நாடு மீண்டதாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. ஆனால் மிக விரைவிலே நாடு மிக மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு செல்ல இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் திரும்பவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதை கட்டுப்படுத்துவற்கு இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர். ஏனெனில் கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஏற்படுகிற பொழுது அதனைக் கட்டுப்படுத்த அல்லது ஒடுக்குவதற்கு தற்போது ஜனாதிபதியின் கையில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்று அவர் கருதுகின்றார்.

 

அதேபோன்று, பயங்கரவாத தடை சட்டங்களை பிரயோகித்தால் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமையும் என்பதாலே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொடுக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கூட இல்லாமல் போகின்ற நிலைமை ஏற்படும். ஆகவே புதியதொரு நல்ல விடயத்தை தாங்கள் செய்வது போல மிக மிக மோசமான ஒரு செயலையே செய்வதற்கு முனைகின்றனர். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு அதனை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமென்ற இந்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறேன் என்று ஒரு மாயத் தோற்றத்தை காட்டிக் கொண்டும் சர்வதேச நியமங்களுக்கு அமையவே புதிய சட்டத்தையே கொண்டு வருகிறேன் என்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான உண்மையான நோக்கம் என்னவெனில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக அல்லது அரசாங்கத்திற்கு எதிராகவோ தமது எதிர்ப்பை காண்பிக்கின்ற போது அதனை இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கான ஒரு கருவியாகத்தான் அல்லது முன்னெச்சரிக்கையாகத் தான் முன்கூட்டியே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைந்திருக்கின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அரசியலமைப்பை மீறுகின்றது. அவ்வாறு அரசியலமைப்பை மீறுகின்றது என்றோ அல்லது வேறு காரணங்களைக் கூறியோ நீதிமன்றம் சென்றாலும் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் நீதிமன்றம் சொல்லலாம். அதேநேரம் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என்றும் கூட நீதிமன்றம் சொல்லலாம். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அரசாங்கம் செய்யலாம். ஏனெனில் ஆளுங்கட்சியுடன் எதிர்க்கட்சியில் இருக்கின்ற சில தரப்புக்களும் இணையப் போவதாக அறிகின்றோம். ஆனாலும் இந்த அரசுக்கு இப்பொழுது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளில் இருக்கின்ற பலர் இப்போது கட்சிதாவுவதற்கு தயாராகின்றனர்.

அரசாங்கம் மூன்று இரண்டு பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றுக் கொள்ளலாம். ஆகையினால் அதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இதனை தடுக்க முடியாது. ஆகவே அரசின் இந்தப் புதிய சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறுகிறது என்பதை நாம் தெளிவாக சொல்லுகின்றோம்.

 

நாம் மட்டுமல்ல இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலரும் இந்த விடயங்களை கூறுகின்றனர். இதனால் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை கிடைக்காமல் போகலாம் என்பதும் தெரிந்த விடயம். அதன் மூலம்தான் இந்த சட்ட மூலம் இயற்றுகின்ற அரசின் யோசனையை மாற்றலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம். அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நிறுவனங்களும் கூட இதனுடைய தாற்பரியத்தை அல்லது மோசமான தன்மையை உணர்ந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் எப்படியாக நாடு பூராகவும் எழுச்சி ஏற்படுத்தினோமோ அதே போல் இந்த மோசமான சட்டத்தை தடுப்பதற்கு மக்களிடையே சென்று மக்கள் மத்தியில் விளக்கங்களை கொடுத்து ஒரு எழுச்சியை ஏற்படுத்த முனைகிறேன். இவ்வாறு நாட்டு மக்களிடத்தே இந்த விடயம் தொடரபில் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மக்கள் எழுச்சியை எடுத்துக் காட்டுவோமாக இருந்தால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கலாம் என்று கருதுகின்றேன் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்கள் !

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தொழில் தேடுபவர்களுக்கு அந்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்க ஜப்பானிய தொழிலாளர் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பூநகரியில் 213 கிராம் ஹெரோயின்  வைத்திருந்த ஒருவர் கைது !

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி பள்ளிக்குடா பகுதியில் 213 கிராம் ஹெரோயின்  வைத்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

10 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் தகவல் திருட்டு – டிக்டாக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்திது இங்கிலாந்து !

சிறார்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் டொலர் அபராதம் அபராதம் விதித்து இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ‘டிக்டாக்’ செயலியை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன. உளவு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் தகவல் ஆணையர் ஜான் எட்வர்ட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், ‘இங்கிலாந்தின் தகவல் சட்டங்களை டிக்டாக் கடைப்பிடிக்கவில்லை.

கடந்த 2018 மே முதல் 2020 ஜூலை வரை விதிமீறல்கள் நடந்துள்ளன. சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில், டிக்டாக் நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களின் தகவல்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எந்த வயதிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் டிக்டாக் செயலியை பார்க்க வேண்டும் என்பது குறித்த கட்டுபாடுகளை அந்த நிறுவனம் விதிக்கவில்லை. இதனால் சிறார்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீது கூட்டு வன்புணர்வு – போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நால்வர் கைது !

சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தியமை நேற்று பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹெட்செட் பாவனை – குறைவடையும் கேட்கும் திறன் !

அதிக ஒலி எழுப்பும் ளைப் பயன்படுத்துவதன் மூலம், இளைஞர்கள் மத்தியில் கேட்கும் திறன் குறைவடையும் அபாயம் உள்ளதாக தொண்டை, காது மற்றும் மூக்கு தொடர்பான விசேட சத்திரசிகிச்சை வைத்தியர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது, கேட்டல் கருவிகளைப் பயன்படுத்தியவாறு பாடல்களைக் கேட்கின்றனர். குறிப்பாக, ஹெட்செட், ஹேண்ஸ்ப்றீ உள்ளிட்ட கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதன்போது, ஓசையின் அளவை 60 இற்கும் குறைந்த அளவில் வைத்துக்கொண்டு, ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த காலமே, செவிமடுக்க வேண்டும். இதனை விடவும் அதிக நேரம் செவிமடுத்தால், காதுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த செயற்பாடானது, முதியவர்களைப் போன்று, இளைஞர்களுக்கும், கேட்கும் திறன் குறைவடையச் செய்வதில் தாக்கம் செலுத்தும் என வைத்தியர் சந்ரா ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம்.? – இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜையொருவர் தான் இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, சங்கிரி லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் உயிரிழந்த தனது சகோதரங்களின் பெயரால் இலங்கை மக்களிற்கு ஏதாவது செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் உண்மையை அறிய விரும்புகின்றேன். அவ்வளவுதான் நான் அரசியல்வாதியோ நீதிபதியோ இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அதுவரை எதிர்வுகூறல்கள் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.