April

April

“6 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்” – பிரபாத் ஜயசூரிய புதிய சாதனை !

குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பிரபாத் ஜயசூரிய இன்று தனதாக்கியுள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று  வரும் போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்தபோது  தனது 50 ஆவது விக்கெட்டினை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் இவர் புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த தோமஸ் டர்னர் 06 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கியிருந்தார்.

எனினும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை!

முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கொள்ளையர்களால் பொல்லால் தலையில் தாக்கப்பட்ட 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு பொலிஸார், தடயவியல் பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேகநபர்களின் தடயங்கள் தொடர்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பிற்போடப்பட்டது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்பவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதாகவும் பலரதும் கருத்துகளைப் பெற்று, தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் கடற்படை தளபதி கறுப்பு பட்டியலில் – மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை மீறல் தொடர்பில் பேச அமெரிக்கா தயாரா என ரஷ்யா கேள்வி !

இலங்கையின் வடமேல் மாகாண ஆளுநரும் , முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரண்ணாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது . முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது .

எனினும் , அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் . கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘ தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன் ‘ இருப்பதாகவும் , ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார் . ‘ மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் , இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவினை கறுப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் இந்த முடிவு தொடர்பான கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளார்.

உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அமெரிக்காவின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கையானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளிவருவது துரதிர்ஷ்டவசமானது.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நல்லிணக்கம், பொருளாதார மீட்சி மற்றும் சமூக – பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடரும் எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை என வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார்.

என் மீது எந்தவிதமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் இணைக்கப்பட்டமை தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனகொடவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடை தொடர்பில் ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன் கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜகாரியன், “இந்த நாட்டின் வடமேற்கு மாகாண ஆளுநரான முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ் பொருளாதாரத் தடை விதித்துள்ளனர் என்பதை இன்று அறிந்து கொண்டேன்.

கண்ணாடியால் ஆன வீட்டில் வாழ்ந்தால் கற்களை எறியாதீர்கள் என்ற ஆங்கிலப் பழமொழி உண்டு. அங்கிருந்து மேற்கத்திய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பற்றி  பேசுவோம். அவர்கள் சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இதைவிட அதிகமான பிரச்சனைகள் இவர்களுக்கு உண்டு.ஆனால் உள்பிரச்சினைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது. இலங்கை உட்பட இறையாண்மை கொண்ட நாடுகள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு விரிவுரை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அது உங்களுடையது. உள் பிரச்சனை.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 வருட காலம் மூடப்பட்டிருந்த சிங்கள மகாவித்தியாலயம் மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பம் !

30வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக இன்று திறந்துவைக்கப்பட்டது.

கடந்த கால போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்துவந்தது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் மேற்கொண்ட முயற்சி காரணமாக குறித்த பாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பாடசாலை திறப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

எனினும் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவசர அவசரமாக இந்த பாடசாலை திறக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக இன்று திறந்துவைக்கப்பட்டது.

கடந்த கால போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்துவந்தது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் மேற்கொண்ட முயற்சி காரணமாக குறித்த பாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த பாடசாலை புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று மொழிகளையும் கற்கும் வசதிகளுடன் இந்த பாடசாலையாக இது திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா ஜகம்பத் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவசர அவசரமாக இந்த பாடசாலை திறக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு படுகொலை சம்பவம் – காயமடைந்த 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.

100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேக நபர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, குறித்த தாக்குதலின்போது தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர்.! – அரசியல்வாதியின் காடழிப்பை பகிரங்கப்படுத்தியற்காக இலக்கு வைக்கப்படுகிறாரா ஆசிரியர் திருமகன்..?

கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் வவுனியாவின் தரணிக்குளம் கணேஷ் வித்யாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக பணிபுரியும் திருமகன் என்பவர் பாடசாலை மாணவிகளிடம் தவறான வகையில் வாட்ஸ்அப் இல் பேசி உள்ளதாகவும் – தொடர்ச்சியாக அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இது தொடர்பான சில Screen shot தேசம் இணையதளத்துக்கும் கிடைத்திருந்தது. கிடைத்திருந்த அடிப்படை தகவல்களைக் கொண்டு தேசம் இணையதளம் இது தொடர்பான மேலதிக தகவல்களை திரட்ட ஆரம்பித்திருந்தது.

 

முதலில் அந்த ஆசிரியர் தொடர்பான விடயங்களை அலசி இருந்த நிலையில் குறித்த ஆசிரியர் கடந்த வாரம் வவுனியாவின் கட்டையர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இடம் பெற்று வந்த காடழிப்பு தொடர்பில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியதுடன் இது தொடர்பான பல பிரச்சனைகளையும் தனிப்பட்ட ரீதியில் அவர் எதிர்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.

காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் நேற்றுமுன்தினம் (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த காடழிப்பு  விடயத்தில் வவுனியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கு.திலீபனும் தொடர்புபட்டு உள்ளதாக அறிய முடிகிறது.

இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தவருமான ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆசிரியர் தரப்பிலும் – இது தொடர்பில் நாம் விசாரித்த வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த ஒரு ஆசிரியரும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ஆசிரியர் தொடர்பில் வலயக்கல்வி பணிமனையில் நல் அபிப்பிராயம் உள்ளதாகவும் குறித்த வலயக்கல்வி பணிமனை ஆசிரியர் நம்மிடம் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் உலாவும் தவறான செய்திகளாலும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதையும் அறியமுடிகிறது.

இதே நேரம் இந்த பிரச்சனையுடன் தொடர்புடைய தமிழ் பாட ஆசிரியரான திருமகன் தொடர்பில் குறித்த பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கக்கூடிய சில இளைஞர்களிடம் – அவருடைய வகுப்பில் கல்வி கற்ற சில மாணவிகளிடமும் நாம் தேசத்தின் ஊடாக தொடர்பு கொண்டிருந்தோம். அவரிடம் கடந்த வருடம் கல்வி கற்று இருந்த உயர்தர மாணவி ஒருவர் எம்மிடம் குறித்து ஆசிரியர் தொடர்பில் கூறிய போது “பொதுவாகவே தமிழ் பாட ஆசிரியர்கள் என்றால் இரட்டை அர்த்தமுடைய வார்த்தைகளை வகுப்பில் பாவிப்பார்கள். ஆனால்  திருமகன் ஆசிரியர் ஒரு தடவை கூட அவ்வாறான வார்த்தைகளை பிரயோகித்ததில்லை. திடீரென கோபப்படும் சுபாவம் உடைய சேர் தான். ஆனால் நடத்தைகள் பொருட்டு எனக்கும் என்னுடைய நண்பிகளுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் உறுதியாகவே சொல்கிறேன் நம்முடைய ஆசிரியர் அவ்வாறு செய்திருக்க மாட்டார்.” என குறித்த மாணவி உறுதிப்படக் கூடியிருந்தார். குறித்த ஆசிரியர் பணி புரியும் கிராமத்து இளைஞர்கள்ஜசிலரிடம் வினவிய போதும் மேற்குறித்த மாணவி கூறிய தகவல்களுடன் ஒத்த தகவல்களையே எங்களுக்கு வழங்கினர்.

இங்கு மிகப் பிரதானமான கேள்வி எங்கு என்ன நடந்தால் என்ன..? நாம் உண்டு நம்முடைய வேலை உண்டு என கடந்து செல்லும் இன்றைய அரச அதிகாரிகளிடையே தன்னுடைய பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய தலையீட்டுடன் சுமார் 12 ஏக்கர் காடு  அழிக்கப்பட்டதை அந்த ஆசிரியர் சுட்டிக் காட்டியதற்காக அவர் இவ்வாறு அவதூறு படுத்தப்படுகிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கு எதிராகவும் – குறித்த ஆசிரியருக்கு ஆதரவாகவும் அனைவரும் நிற்க வேண்டியது அவசியமாகிறது.

குறித்த ஆசிரியர் தொடர்பான அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ள சமூக வலைத்தளங்கள் போலியான அடையாளங்களுடன் கூடியவையாக உள்ளமையும் – அதே நேரம் அவை உறுதிப்படுத்தப்படாத நபர்களால் இயக்கப்படுவதாலும் – குறித்த ஆசிரியர் காடழிப்பு தொடர்பான பிரச்சனையை பகிரங்கப்படுத்தியதன் பின்பாகவே இந்த WhatsApp screen shot பரப்பப்பட்டுள்ளதாலும் / பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாளுமே இது இது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்கப்படுகிறது என்ற செய்திகள் அடிக்கடி நாம் காணும் – கடந்து போகும் செய்திகளாகியுள்ளன. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை எடுத்து குறித்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தி இருந்தார். இது போல் பல இடங்களில் பல பிரச்சனைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் குற்றவாளிகள் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த நிலையில் எப்பொழுதும் தேசம் இணையதளமானது இதற்கு எதிரானதாகவே இருக்கும். அதே நேரம் ஒரு தவறுமே செய்யாது சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் பாதிக்கப்படும்போது அதனை கண்டு கொள்ளாது செல்லவும் முடியாது.

இந்த காடழிப்பு விவகாரத்திலும் – குறித்த ஆசிரியர் மீதான அவதூறு பரப்பப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் – இதனால் குறித்த ஆசிரியர் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அறிய முடிகிறது. போலீசில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் போலீசாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என அறிய முடிகிறது. சட்டத்தை பாதுகாத்து –  போலீஸ் நிலையங்கள் மீதான நம்பிக்கையை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இலங்கை உள்ளதால் போலீசார் இது தொடர்பில் விரைந்து கவனம் எடுத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன் வர வேண்டும். ஆசிரியர் தவறு செய்திருப்பின் அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்காது விடின் – அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

“கோட்டாபாயவுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்காவே செய்தது” – விமல் வீரவங்சவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் !

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது.

நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி, முன்னாள் விமானப்படைத் தளபதி சவேந்திர சில்வா குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, ‘2022 மே 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி மற்றும் படைத்தளபதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.’ என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அடிப்படையற்றதாகும். சவேந்திர சில்வா கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தது அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள்வெட்டில் ஈடுபட்ட மகனை மீட்க பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட தாய் கைது !

வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் கைதான மகனை விடுவிப்பதற்காக பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முட்பட்ட   தாய் கைது செய்யப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்

கடந்த 21 ம் திகதி ஏறாவூர் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  ஐயங்கேணி மற்றும் வந்தாறுமூலை சேர்ந்த இரு  குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக

இதன் போது  இருவருக்கு வாள்வெட்டு  காயம் ஏற்பட்டுள்ளது.

ஐயங்கேணி பகுதியிலிருந்து தாக்குதலுக்கு சென்று கைவிட்டு தப்பியோடிய மோட்டார் சைக்கிளை மட்டக்களப்பு – கொழும்பு  ரயில் தண்டவாளத்தில்  தீயிட்டு கொளுத்தியமை காரணமாக மட்டக்களப்பு -கொழும்பு   ரயிலானது 9 நிமிடம்  தாமதித்து  சென்றுள்ளது

இந்த சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  எதிரிமான்ன ஆலோசனைக்கு அமைய  ஏறாவூர் பொலிஸ்  நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ்  பரிசோதகர் யோ .விஜயராஜா தலைமையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்

மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய சந்தேக நபர்கள் நால்வரும் வாளால் வெட்டி காயம் ஏற்படுத்திய மூவரும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு ஏறாவூர் நிதீமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .

மேலும்  வாளால் வெட்டிய சம்பவம் தொடர்பில் நேற்று 23 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் . இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்காக அவரது  45 வயது மதிக்கத்தக்க  தாய் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவரும்  ரூபா 20 ஆயிரம் பணத்தை  பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜாவிற்கு  இலஞ்சமாக வழங்கி  கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விருவரும்  கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை  மேற்கொணடு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் சிங்கள பாடசாலை – திறந்து வைக்கும் அனுராதா யஹம்பத்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஒரேவொரு சிங்கள மொழி பாடசாலை 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (27) மாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு இந்த பாடசாலை மூடப்பட்டது. மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திறந்து வைக்கவுள்ளார்.