நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை 2 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையில் மீட்கப்பட்டது. நெடுந்தீவு – மாவலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நேற்றுமுன்தினம் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அதன்போது, வயோதிபப் பெண்ணொருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை குற்றவாளி மனோநிலை பாதிக்கப்பட்டவர் என பல ஊடகங்களிலும் செய்திகள் பரவலாக பரப்பப்பட்டு வரும் நிலையில் அதற்கான வாயப்புக்கள் இல்லை எனவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மிகத்தெளிவான திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த படுகொலைகள் குற்றவாளியின் போதைப்பொருளுக்கான ஆசையை நோக்கியதே தவிர மற்றும்படி இந்த ஊடகங்கள் குறிப்பிடுவது போல சுயநினைவு அற்ற நிலையில் நடந்தவை என கொள்ளமுடியாது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குறித்த ரகு எனும் குற்றவாளி போதைப்பொருள் தேவைக்காகவே இந்த கொலைகளை செய்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் ஆரம்பத்தில் பேசப்பட்டாலும் கூட பின்பு அவர் மனஆநாயாளி என்ற வகையில் இந்த செய்தியை ஊடகங்கள் கையாள ஆரம்பித்துள்ளன.
இந்தப்புள்ளியில் இருந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நகர்வுகளை யாழ்ப்பாண சமூகமும் – காவல்துறையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. போதைப்பாருள் பாவனையை இலகுவாக கடந்து செல்ல முடியாது. அது எந்தளவு ஆபத்தான நிலையில் வளர்ந்துள்ளது என்பதையே இந்த கொலைகள் எமக்கு காட்டியுள்ளன.