April

April

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியுமா..? – நீதியமைச்சர் தெரிவித்துள்ள விடயம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்ய பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது ஆர்வமுள்ள எந்தவொரு தரப்பினருக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம் மீதான விவாதத்தின் போது திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்கம் சட்டமூலத்தை பின்கதவால் கொண்டு வரவில்லை எனவும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் திறந்திருப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தை தூண்டுவதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் ஈடுபட்டு அனைத்து இலங்கையர்களையும் பாதுகாக்க பொருத்தமான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவில் உள்ள சில விதிகள் குறித்து உலக மற்றும் உள்ளூர் சமூகம் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதாக நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிர்வாகம் நெகிழ்வானது என்றும், சட்டமூலத்தை மேலும் ஆலோசித்த பின்னர் அவற்றைத் திருத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை ஆதரிக்க மறுத்த தம்மை பதவி நீக்கம் செய்ய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும், தன்னை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தேவைப்படும் 113 பெரும்பான்மையை பெற முடியாது என்று ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார்.

மின்சாரத்தின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும் தேவை குறைவது நஷ்டத்தில் இருக்கும் இலங்கைக்கு உதவாது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு மூலம் இழப்பை ஈடுகட்ட மின்சார சபை முயற்சித்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு புரியாத அடிப்படை விஷயங்கள் இவையாகும். அவர்களுக்கு பொருளாதாரம் புரியவில்லை. அவர்களுக்கு அரசியல் மட்டுமே தெரியும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இன்னுமொரு சீர்திருத்தம் சாத்தியம் என்றும் அது மற்றொரு கட்டண உயர்வாகக் கூட இருக்கலாம் என்று மின்சார சபை கூறியுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொது அறிவு இல்லை என்றும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க சேவைகளை பெற முடியும் – அனுராதா விஜேகோன்

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும், ஒரு நாடு என்ற வகையில் அரச துறையில் மட்டுமன்றி வேறு எந்தப் பணியிலும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் பிரதான மொழிகளாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அரச கரும மொழிப்; பாடத்தை கையாள்வதற்கான தனியான பிரிவு ஒன்று இருப்பதாகவும், நாட்டின் அரச கரும மொழிக் கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசியலமைப்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் போதை ஊசிகளுடன் மூவர் கைது !

யாழ்ப்பாணம், நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நெடுந்தீவு படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் !

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

நெடுந்தீவு பகுதியில் 3 பெண்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை! அதிகாலையில் பயங்கரம்

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

நெடுந்தீவு இறங்கு துறை மற்றும் கடற்படை முகாம் என்பவற்றிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்துள்ளனர். இதன்போதே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும், 1 நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இது வரை வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை குழுவாகவோ அல்லது தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் கடற்படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூடானில் ரமழானை ஒட்டி 70 மணி  நேர போர் நிறுத்தம் !

சூடானில் ரமழானை ஒட்டி 70 மணி  நேர போர் நிறுத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் துணை ராணுவப்படையினர் அறிவித்துள்ளனர் .

கடந்த 16 ஆம் திகதி துணைராணுவம் சூடானின் தலை நகரை முற்றுகையிட்ட நிலையில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையில் பெரும் சண்டை வெடித்துள்ள நிலையில் 350 பேர் மோதலில் கொள்ளப்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரமழான் பண்டிகையையொட்டி மனிதாபிமானத்தை அடிப்படையாக கொண்டு காலை 6 – அடுத்த நாள்  72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்திற்கு வந்துள்ளது. இதனை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

“நாட்டிற்கு வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களுக்கு விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் வர்த்தகத் துறையில் விஷேட செயல்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் நோக்கில் மேற்படி விருது வழங்கும் விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நாம் இரு வருடங்களுக்கு முன்னதாக இறுதியாக சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில் கடுமையான நெருக்கடிகளுடன் கூடிய இரு வருடங்களின் பின்னரான சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என கணிக்க முடியாமல் இருந்திருந்தாலும் தற்போது நாம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குரிய பாதைக்குள் பிரவேசித்துள்ளோம்.

இருப்பினும் ஸ்திரமானதும் அபிவிருத்தியை நோக்கி நகர்வதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். வொஷிங்டனில் நடைபெற்ற வசந்த கால அமர்வுகளில் பங்கேற்கச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் பல்தேசிய நிறுவனங்கள் நமக்கு உதவ முன்வந்துள்ளது என்ற நற்செய்தியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் பரிஸ் கிளப் பிரதானியுடனும் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடியிருந்தோம். நாம் முன்னேறிச் செல்வதற்கான ஊக்குவிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். அதேபோல் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகிறன.

நாம் நெருக்கடிகளிலிருந்து துரித கதியில் மீண்டு வந்துள்ளமை வியப்புக்குரியதாக இருந்தாலும், உங்களால் தாங்கிக்கொள்ள கூடிய கடினமாக தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ள உள்ளமை எனது வாழ்விலும் கடினமான காலமாகும் என்றே கூறுவேன்.

நீண்ட கால தீர்வுகள், மற்றும் இடைப்பட்ட காலங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றி தேடியறிவதால் நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் பணம் அவசியம் என்பதால் வருமானம் ஈட்டிக்கொள்ளும் பிரச்சினையே நம்முன் பெரிதாக நிற்கிறது. அதனால் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளையும் தேடி அறிய வேண்டும்.

சில காலங்களுக்கு முன்பு உங்களிடத்திலும் உங்களது நிறுவனங்களிடத்திலும் வரி சேகரிப்பது மாத்திரமே அதற்குரிய வழியாக காணப்பட்ட போதிலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளே அதற்குரிய சரியான வழிமுறையாக தெரிகிறது. எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும், அதற்கான பணிகளுக்கு திறைசேரியும் தயாராக வேண்டியது அவசியமாகும். நாம் மேம்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது அவசியமாகும். எனினும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் குறித்து எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேபோல் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது கடன் வழங்குநர்களுக்கு நாமும் பங்களிப்புக்களை வழங்க வேண்டியது அவசியமாகும். சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நமது அர்பணிப்புக்கள் அவசியமாகிறது. மறுமுனையில் திறைசேரி அதற்குரிய மாற்று வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.

நாம் கடன் மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில் நாம் கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். எவ்வாறாயினும் மேற்படி செயற்பாட்டிற்கான மாற்று வழிகள் மக்களுக்கு நெருக்கடியாக அமைந்திருக்காது என்ற உறுதியை வழங்குகிறேன்.

அதற்காக இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ள அதேநேரம். மே மாத இறுதிக்குள் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். பொருளாதார ஸ்திரத் தன்மைக்கான குழுவின் அறிக்கையும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.” – அமைச்சர் அலி சப்ரி

ராஜபக்‌ஷக்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தத் தீர்வுகளும் எந்தச் சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் விஜேராம இல்லத்தில் (19) இடம்பெற்ற இப்தாரில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சமய பெரியார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.பின்னர்,இதற் குப்பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர்.கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.இலங்கை அரசியலில் ராஜபக்‌ஷக்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கின்றனர்.இதனால்,இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது.

நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ, இளம் வயதிலிருந்தே பலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மஹிந்த ராஜபக்‌ஷவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.