01

01

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோருக்கு NVQ சான்றிதழ் கட்டாயம் – இன்று முதல் புதிய நடைமுறை!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

ஜப்பானின் முயற்சிகள் வெற்றி பெறுமா? – இதயச்சந்திரன்

ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அணிசேர்ப்பில், குவாடில் (QUAD)அங்கம் வகிக்கும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா வந்த ஜப்பானிய பிரதமர், சீனா-ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரள வேண்டிய அமெரிக்காவின் தேவையைக் கூறினார். ஆனால் இந்தியா அதற்குப் பதிலளிக்கவில்லை.

SCO மாநாட்டிற்கு ஜூலையில் இந்தியா வருகிறார் சீன அதிபர்.
அங்கு எல்லைப்பிரச்சினை பேசப்படுமா?. ரூபாய்- யுவானில் இருதரப்பு வர்த்தகம் குறித்தான இணக்கம் ஏற்படுமா?. அல்லது QUAD மீதான சீனாவின் அதிருப்தி பற்றி விவாதிக்கப்படுமா? . இவைகளும் இருதரப்பின் நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்கப்படலாம்.

அதாவது ஷாங்காய் கூட்டமைப்பில் (SCO)பேசப்படும் சகல விடயங்களையும் ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கும் என்று கணிப்பிடலாம்.

QUAD என்பதும் ஒரு வகையில் BRI போன்ற Regional Connectivity திட்டந்தான்.
தற்போது அமெரிக்க டொலர் கடன் பத்திரங்களை அதிகம் (1 ரில்லியன்) வைத்திருப்பது ஜப்பான்.
சீன உட்பட பல நாடுகள் இப்பத்திரங்களை விற்கத் தொடங்கியுள்ளன.
டொலர் index உம் வீழ்ச்சியடைகிறது.

அதேவேளை தம்மிடமுள்ள Bond களை விற்றால் அமெரிக்காவின் கோபத்திற்கு உள்ளாகலாம் என்கிற பயம் ஜப்பானுக்கு.

இந்திய உட்பட பல நாடுகள் டொலரின் வர்த்தகம் செய்யாமல் தமது சொந்த நாணயத்தில் செய்ய ஆரம்பித்திருப்பதால் டொலரில் உள்ள சொத்துக்களுக்கும், அந்நிய செலாவணிக் கையிருப்பிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதென ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகள் அச்சமடைகின்றன.

1944 இல் டொலரை மையப்படுத்திய உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உருவாக்கம் இடம் பெற்றது. டொலரிற்கு ஆபத்து ஏற்படுகையில், இந்த நிதிமையங்களும் ஆட்டங்காணும்.

அதனை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகக் கணிக்கப்படும் ஜப்பானும் கவலையுடன் கவனிக்கும்.

மேற்குலகின் அரசியல், பொருளாதார, படைத்துறை ஆதரவு இருந்தாலும், ஆசியாவில் தனக்கான ஆதரவு நாடுகளைத் திரட்ட வேண்டிய அவசியம் ஜப்பானிற்கு உண்டு.

‘தென்சீனக்கடல் பிராந்தியத்தில் சீன விரிவாக்கத்திற்கு எதிராக அணிதிரள்வோம்’ என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி, தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளோடு இணைய முயற்சிப்பது போன்று, இந்துசமுத்திரப் பிராந்திலும் அதே சீன விரிவாக்கத்தைக் காட்டி இந்தியாவுடன் அணிசேர ஜப்பான் துடிக்கிறது.

இந்தியாவிலிருந்து திருக்கோணமலைக்கு எண்ணெய் குழாய் போடுவதன் ஊடாகவோ அல்லது இலங்கைக்கு நிதிஉதவி அளிப்பதன் மூலமோ இந்தியா-ஜப்பான்- இலங்கை என்கிற பிராந்திய இணைப்பினை உருவாக்கிவிட முடியுமென ஜப்பான் நினைக்கிறது.

அந்த நினைப்பு குறுகிய கால ஆயுள் கொண்டது என்பதனை மத்திய கிழக்கில் நடக்கும் மாற்றங்கள் புரிய வைக்கும்.
அது பற்றி அடுத்த பத்தியில் பார்ப்போம்.

-இதயச்சந்திரன்
1/4/2023

சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சிறிய அளவிலும் பொருட்களை தயாரிக்கும் தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக இந்த அனுமதி வழங்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ம் திகதி வரை வீதியோரங்களில் ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியின் பிரதேச செயலாளரின் ஒப்புதலுடனும் மேற்பார்வையுடனும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

மஹரகம நகரம் உட்பட பல இடங்களில் இவ்வாறான விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று நாடளாவிய ரீதியில் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பண்டிகைக் காலம் முடியும் வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு தற்காலிகமாக விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடப்புத்தகம் !

பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கும், இவ்விடயம் குறித்து பல்வேறு தரப்பினரை விளிப்புணர்வூட்டுவதற்கும் கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்பில் விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் தலைவர் ரோஹினீ குமாரி விஜேரத்ன அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அதன் தலைவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழுவை அமைக்குமாறும், இதனை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய பொறுப்பை கல்வி அமைச்சை ஏற்றுக்கொள்ளுமாறும் குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்.

இந்தக் குழுவின் செயற்பாடுகள் மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும், இதற்கமைய கால அட்டவணையை அடுத்த கூட்டத்தில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பதினாறு வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் விளிப்புணர்வூட்டும் நோக்கில் பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இருந்தபோதும், பிள்ளைகளின் மனதுக்கு ஏற்ற வகையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பில் விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இதற்கான பாடப்புத்தகத்தைத் தயாரிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக புத்தகங்கள் அச்சிடப்படாவிட்டாலும் ஆரம்பத்தில் ஒன்லைன் மூலம் கலந்தாய்வுகளை நடத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மலையக மக்களுக்கு நிரந்தர முகவரி வேண்டும் – உயர்நீதிமன்றில் மனு தாக்கல் !

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு கோரி பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெருந்தோட்ட சமூக குடியிருப்பாளர்களுக்கான நிரந்தர முகவரிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மனுதாரரான மாவத்தகம, மூவன்கந்த தோட்டத்தை சேர்ந்த ஜீவரத்தினம் சுரேஸ்குமார் என்பவர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், தமது குடியிருப்புகளுக்கு முகவரிகள் இல்லாத காரணத்தால் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுதாரர், தமது மனுவில் பிரதிவாதிகளாக. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பலரை குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவின்படி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன் மூலமே அவர்கள் அரச சேவைகளை அணுகலாம் என்றும் நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் வசிக்கும் மூவன்கந்த தோட்டத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த குடும்பங்கள் எவற்றுக்கும் சொந்த முகவரிகள் இல்லை எனவும் மனுதாரர் குறிப்பிடுகிறார்.

நிரந்தர அஞ்சல் முகவரி இல்லாமையால், அந்த தோட்டத்தில் வசிக்கும் குடிமக்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்கள் மற்றும் அஞ்சல் பொருட்களைப் பெறுவதில்லை. தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மூவன்கந்த வத்த, மாவத்தகம’ என்ற முகவரியே தரப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவன்கந்த துணை அஞ்சல் அலுவலகத்திற்கு மொத்தமாக கடிதங்கள் வந்த பின்னர், அங்குள்ள அதிகாரி, குறித்த கடிதங்களை நம்பத்தகாத முகவர் மூலமாக பெருந்தோட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்குவதையே நடைமுறையாக கொண்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தாம் உட்பட்ட பெருந்தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளனர் என்று அறிவிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு – பாட்டலி சம்பிக்க ரணவக்க

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முன்மொழிவுகளைத் தவிர்த்து, அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதில் மாத்திரமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க முயற்சிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், வலுவான ஒழுங்குமுறை பொறிமுறையும் சில சுயாதீன ஒழுங்குமுறை அதிகாரிகளும் இருக்க வேண்டும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் நேற்று தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, தனியார் மயமாக்கப்பட்ட மற்றும் அரச உடமையின் கீழ் தொடர வேண்டிய அரசாங்க முயற்சிகள் முகாமைத்துவ தணிக்கை செயல்முறையின் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

“IMF வலியுறுத்துவது போல், அரசாங்கத்தின் கொள்முதல் செயல்முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து விவரங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்,” என அவர் .மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு மூன்று பேருக்கும் ஒருவர் சோம்பேறி !

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு 3 பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தொற்றா சுகாதார பணியக சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனால், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.