03

03

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் அரச பேருந்துகள் – வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விசனம் !

வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு வலயப் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு வலயத்திற்கு ஏற்பட்ட ஏ9 வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை  இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் ஏற்றாது செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களின் கற்பதற்கான உரிமையை பறிப்பதற்கோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதற்கோ துணை நிற்பதை அனுமதிக்க முடியாது.

ஏ9 வீதியில் பயணிக்கும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்கனவே செல்வது தொடர்பில்  எனக்கு முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் உரிய தரப்பினர்களை நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளேன்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி அலுவலகமும் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமாகாண  பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்காமல் இருப்பதற்கு உரிய தரப்பினர் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைகழக மாணவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று திங்கட்கிழமை கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் காணப்படும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்த முதலிகே குறிப்பிடுகையில்,

பல்கலைக்கழகங்களுக்குள் தற்போது அடக்குமுறைககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலை மாணவர்கள் சிலர் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவ்வித காரணமும் இன்றி களனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எவ்வித அடிப்படை காரணமும் இன்றி கால வரையறையின்றி மூடப்பட்டிருந்ததோடு , சுமார் 30 பேரின் மாணவர் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பேராதனை மற்றும் ருஹூணு பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறான அடக்குமுறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு தீர்வினைக் கோரியே இன்று ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தோம் என்றார்.