04

04

பசிக்காக உணவு திருடிய பழங்குடியின இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் – 5 வருடங்களின் பின்பு தீர்ப்பு !

அட்டப்பாடி பழங்குடியின இளைஞர் மது என்பவர் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் 14பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது. குகையில் வசித்து வந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் திகதி முக்கலி பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உணவு திருடியதாக கூறி அவரை கையும், காலையும் கட்டி தரையில் இழுத்து சென்று அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உடம்பில் 15 இடங்களில் ஏற்பட்ட கொடுங்காயங்களால் தான் மது உயிரிழக்க நோ்ந்ததாக உடற்கூராய்வு அறிக்கையிலும் கூறப்பட்டியிருந்தது.

இந்த வழக்கில் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், கார் டிரைவர்கள் உட்பட 16 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான கார் டிரைவர் சம்சுதீன், வியாபாரிகளான ஹீசைன், முனீர் ஆகியோர் முதல் மூன்று குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டியிருந்தது. இந்த வழக்கில் 16 பேர் மீது கொலை, பழங்குடியினர் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.வழக்கில் 129 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.

5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். ரத்தீஷ்குமார் தீர்ப்பளித்தார். அட்டப்பாடி மது கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. IPC 304(2) கீழ் ஹுசைன், மரைக்கார், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜூமோன், முனீர், சஜீவ், சதீஷ் முனீர் சஜீவ், சதீஷ், ஹரீஷ் மற்றும் பிஜு ஆகிய 14 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அனீஷ் மற்றும் அப்துல் கரீம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 14 பேருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் – தெற்காசியாவை சேர்ந்தவர்களே காரணம் என்கிறது அரசு !

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.

இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாகவும், குறிப்பாக இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர்களாக இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிராவர்மன் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு உரிய தண்டனையை உறுதி செய்ய புதிய அதிரடிப் படை அமைக்கும் திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ”இனவெறி, மதவெறி குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது தவறு. குற்றம் செய்தவர்கள் இனி தப்ப முடியாது” என்றார்.

டுவிட்டர் லோகோவில் நீலக்குருவிக்கு பதிலாக ஜப்பானின் நாய் உருவம் !

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அதில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.

இந்தநிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நீல நிறத்தில் குருவி ஒன்று இருந்து வந்தநிலையில், தற்போது அது நாய் படமாக மாற்றப்பட்டுள்ளது.

டுவிட்டரில் நீண்ட கால வழக்கத்தில் இருக்கும் நீல நிற குருவி வடிவ லோகோவே தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள முக்கிய நாய் இனமான ‛ஷிபு இனு’ என்ற நாயே டுவிட்டரின் புதிய லோகோவில் இடம்பெற்றுள்ளது.

டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் குறித்த பல மாற்றங்கள் குறித்து டுவிட்டர் பயனர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

நஞ்சூரிய நிலையில் kotmale பதப்படுத்தப்பட்ட பால்..? – 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி !

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள  salom Baptist Pre school என்ற தனியார் முன்பள்ளியில் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துட்டும் திட்டத்தினூடாக நிறுவனமொன்று பதப்படுத்தப்பட்ட பால் வழங்கப்பட்டது.

பிரபல நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சு - 12 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி | Poison Processed Milk Of Famous Company

அவ் பால் வழங்கியதையடுத்து மாணவர்கள் முன்பள்ளியில் வைத்து சத்தியெடுத்துள்னர்.

இதனையடுத்து மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கு வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழு !

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிரேஸ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட குழு ஏதாவது திருத்தங்களை முன்மொழிந்தால் நீதிமன்றத்தின் முன்னிலையில் செல்லவுள்ளதாக  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்தலைவர் கௌசல்ய நவரட்ண தெரிவித்துள்ளார்.

சுற்றுலா செல்ல ஆகச்சிறந்த 23 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் !

2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 உலக நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது.

விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம், கண்டி, யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலா தலங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

QR எரிபொருள் கொள்வனவு 15 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது !

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தமிழ் – சித்திரை புது வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி,

விசேட சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 15 லீற்றர் வரை அதிகரிக்கப்படுகிறது.

சாதாரண சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 05 லீற்றரில் இருந்து 8 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 7 லீற்றராகவும், கார்களுக்கான ஒதுக்கீடு 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விசேட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளது.

நிவாரண திட்டங்கள் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதா..? – பெப்ரல் அமைப்பு சந்தேகம் !

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களில் வேட்பாளர்கள் பங்குபற்றுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயற்பாடாகும். எனவே இவ்வேலைத்திட்டங்களை அரச அலுவலர்கள் ஊடாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நிவாரண திட்டங்கள் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்தால், இந்த நல்லெண்ணப் பணிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினால் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சின்மன்றத் தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் , இன்னும் உத்தியோக பூர்வமாக தேர்தல் ஒத்தி வைக்கப்படவில்லை. எனவே எந்த நேரத்திலும் தேர்தல் இடம்பெற வாய்ப்புள்ளது.

மேலும், அரசின் பல்வேறு நிவாரணத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் , வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் செயல்படுவதை பாராட்டுகிறோம்.

ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்கக் கூடாது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் நிவாரணங்கள் அரச நிதி அல்லது பிற நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாகவே வழங்கப்படுகின்றன.

அவ்வாறிருக்கையில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்க இத்தகைய ஆதரவைப் பயன்படுத்துவது நெறிமுறையற்றது.

அத்துடன், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பிரதிநிதிகள் அல்லது வேட்பாளர்கள் உதவி வழங்கும் நடவடிக்கையில் பங்களிப்பது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்.

மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டம் அரசியல் ஆதாயம் தேடும் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்தால், இந்த நல்லெண்ணப் பணிக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

எனவே இனிவரும் நிவாரணப் பணிகளில் அரசியல்வாதிகளின் பங்கேற்பைத் தடுக்கவும், அனைத்து நிவாரணப் பணிகளையும் அரச அலுவலர்களின் தலையீட்டில் மேற்கொள்ள உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சோறுக்கும் தண்ணிக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்திற்கு பணம் ஒதுக்கி இனவாதத்தை வளர்க்கிறீர்கள்”- நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலத்திலே மட்டக்களப்பிற்கு வந்தபோதும் குசலான மலையில் வைத்து உங்களை தடுத்து அனுப்பியமை காரணமாகவே இன்றும் குசலான மலையில் சைவ சமய வழிபாடுகளை செய்ய முடிகின்றது.

இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு நீங்கள் இந்த நாட்டுக்குள்ளே மீண்டும் ஒரு குழப்பத்தினை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள்.

வெடுக்குநாரி மலையிலே ஒரு குழப்பம், குருந்தூர் மலையிலே ஒரு குழப்பம், குசலான மலையிலே ஒரு குழப்பம், அரிசி மலையிலே ஒரு குழப்பம், தற்போது திருகோணமலை புல்மோட்டையிலே ஒரு குழப்பம்.

இந்த நாட்டினுல் ஐ.எம்.எப் ஒப்பந்தம் வந்தாலும் சரி உங்களைப் போன்ற இனவாதிகள், உங்களைப் போன்ற இனவாத அமைச்சர்கள், இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்துக்கொண்டு, வடக்கு கிழக்கில் எங்களுடைய காணிகளை சுவீகரிக்கின்றீர்கள்.

தொல்பொருள் செயலணி என்பது தொல்பொருளை பாதுகாக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் தொல்பொருள் என்ற போர்வையில் ஏன் பௌத்த பிக்குகள் வர வேண்டும். ஏன் அதிகாரிகள் இல்லையா?

சோறுக்கும் தண்ணிக்கும் வழியில்லாமல் இருக்கும் போதும் கூட தொல்பொருள் திணைக்களத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமாக இருந்தால், ஐ.எம்.எப் மட்டும் இல்லை எவறாலும் இந்த நாட்டை காப்பாத்த முடியாது.

இந்த தொல்பொருள் செயலணியும், தொல்பொருள் திணைக்களமும், நீங்களும், இந்த அரசாங்கமும் இனவாதத்திற்காகவே இதனை பயன்படுத்துகின்றீர்கள்.

இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கினை நாங்கள் முடக்குவோம். உங்களைப்போன்ற இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதவாறு முடக்குவோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

சட்டமாக்கப்படவுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் பல்கலைக்கழகங்களின் பொருளாதாரப் பிரிவு விரிவுரையாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் பொருளாதாரப் பிரிவின் சிறந்த மாணவர்கள் பத்து பேரை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவித்தார். இதில், தெரிவு செய்யப்படும் சில மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் தானியங்கி முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும் இல்லையெனில் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக கல்வி முறையை புதிதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், 18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

முதலில் ஐ.எம்.எப் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா..? இல்லையா..? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கிறோம். அனைவரும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எனவே, ஆதரவு வழங்க கோரும் பிரேரணையை முன்வைக்க இருக்கிறோம்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களை சட்டமாக கொண்டு வர உள்ளோம். அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமானால் பாராளுமன்றம் செல்ல வேண்டும். அதிலுள்ள அடிப்படை விடயங்கள் மே மாதத்தில் சமர்ப்பிக்கப்படும். புதுவருடத்தின் பிறகு ஜஎம்எப் குறித்து கிராம மக்கள் அறிவூட்டப்படுவர். இரண்டாவதாக, பசுமைப் பொருளாதாரம் உட்பட நமது திட்டங்கள் என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்தப்படும்.முதலில் இந்தத் திட்டங்கள் தொடர்பிலான கருத்துக்களை பெற வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் எதிர்காலத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.. இந்த மூன்று சட்டமூலங்களையும் ஒன்றாக கொண்டு வரக்கூடாது என நீதி அமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர். அதற்குக் காரணம், உச்சநீதி மன்றம் அவர்கள் மீதும் வேறு பல காரணங்களுக்காகவும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது. எனவே, ஏப்ரல் இறுதிக்குள் ஒரு வரைவை முன்வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதன் பிறகு, மற்ற இரண்டு வரைவுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ஜூன் மாதத்திற்குள் மூன்று வரைவுகளும் கொண்டு வரப்படும்.

குறிப்பாக நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், போட்டித்தன்மையுடன் உற்பத்தியை அதிகரிப்பதே எங்கள் நோக்கம். போட்டித்திறன் மற்றும் உற்பத்தி ஆகிய இரு துறைகளும் முன்னேற்ற வேண்டும். அதற்காக நாம் இணைந்து பணியாற்றலாம். அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை இணைத்து தனி விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். தேவைப்பட்டால், பட்டப் படிப்புகளை நிறுவலாம். இதன் ஊடாக ஆராய்ச்சி செயல்முறையை வலுப்படுத்த எதிர்பார்க்கிறோம். இதிலிருந்து தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இதிலிருந்து அறியலாம். அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

ஐஎம்எப் ஒப்பந்தத்தை அனைவரும் படித்திருக்கிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியும். நாம் வழங்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் ஜஎம்எப் கட்டமைப்பிற்குட்பட்டு மட்டுமே வழங்க முடியும். அதிலிருந்து வெளியில் வர முடியாது. எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டமைப்பிற்குள் மட்டுமே நாம் செயல்பட வேண்டும்.

விவசாயிகளும், சுற்றுலாதுறை வர்த்தகர்கள் கூட இது அவசியம் என்கின்றனர். பெரும்பான்மையினரின் கருத்தும் அதுவாகும். தனியார் மயமாக்க வேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. அவ்வாறானால் என்ன செய்யுமாறு கேட்கிறார்கள்? அவற்றுக்காக செலவிடப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கை பல்கலைக்கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும் வழங்கினால் இதனை விட முன்னேற்றம் ஏற்படும்.அத்தோடு சம்பள பிரச்சினையும் தீர்க்கப்படும். தொழிற்சங்கங்கள் விரும்பியபடி செயல்பட முடியாது. இலங்கை மீண்டும் ஆப்கானிஸ்தானை விட பின்தங்குவதை அனுமதிக்க முடியாது.மறுசீரமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்பட ட வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன.

தொழிற்சாலைகளை உருவாக்க சட்டமொன்றை கொண்டு வந்துள்ளதோடு ஆணைக்குழுவொன்றையும் உருவாக்கியுள்ளோம். ஆனால் நாம் தொழில்மயமாக்கலை முன்னெடுக்கவில்லை. யுத்தத்திலிருந்து சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினோம்.

1983-1987 களில் யுத்தத்திற்கு செலவழித்த பணத்தை விட அதிக பணம் சிவில் யுத்தத்திற்காக செலவழிக்கப்பட்டது. போருக்குப் பிறகு, நாங்கள் தொழில்மயமாக்கலுக்கு திரும்பவில்லை. மாறாக, நிர்மாணத் துறையில் உள்ள திட்டங்களுக்குச் சென்றுள்ளோம். 2009ல் கைத்தொழில்மயமாக்கலுக்கு சென்றிருந்தால் நிறைய முதலீடுகள் வந்திருக்கும். நிபந்தனைகள் விதித்தால், அந்த முதலீடுகள் வராது. நிலைமை நன்றாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் வரமாட்டார்கள். வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணத்தை வைத்திருந்த நமது முதலீட்டாளர்கள் தான் முதலில் வருவார்கள். அதன் பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்கள்.

30 வருடங்களில் நிறைவு செய்யப்பட வேண்டிய மகாவலி திட்டத்தை 10 வருடங்களில் நிறைவேற்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நடவடிக்கை எடுத்தார். அதற்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒரே நேரத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. அதன் ஊடாக இலங்கை மக்களுக்கான பணத்தைப் பெறும் முறைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு முன்னேறிய குழுக்கள் உள்ளன. அவர்கள் இப்போது வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

நமக்கு இந்தப் பணிகளை அவ்வாறானதொரு நிலையிலேயே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எமது மக்கள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து தமது தொழில்கள் வீழ்ச்சியடையும் என அஞ்சுகின்றனர். எனவே, பணம் லண்டன் அல்லது டுபாயில் வைக்கப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப கொண்டு வர முடிந்தால்,சிறந்தது.

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டில் பொருளாதாரம் கற்கும் மாணவர்களிடமிருந்து திறமையான பத்து மாணவர்களை தெரிவு செய்து வழங்க முடியுமா என அதிகாரிகளுடனும் அமைச்சருடனும் கலந்துரையாடுங்கள். நான்கு திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம். ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஸ்டாபோர்ட் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வோம். என்றார்.