சிறார்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் டொலர் அபராதம் அபராதம் விதித்து இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவுக்குச் சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ‘டிக்டாக்’ செயலியை ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் தடைசெய்துள்ளன. உளவு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தின் தகவல் ஆணையர் ஜான் எட்வர்ட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், ‘இங்கிலாந்தின் தகவல் சட்டங்களை டிக்டாக் கடைப்பிடிக்கவில்லை.
கடந்த 2018 மே முதல் 2020 ஜூலை வரை விதிமீறல்கள் நடந்துள்ளன. சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில், டிக்டாக் நிறுவனத்திற்கு 15.9 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 13 வயதுக்குட்பட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களின் தகவல்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எந்த வயதிற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் டிக்டாக் செயலியை பார்க்க வேண்டும் என்பது குறித்த கட்டுபாடுகளை அந்த நிறுவனம் விதிக்கவில்லை. இதனால் சிறார்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.