11

11

உதயன் (ஆர்.எஸ்.எஸ் இன் ஏஜென்ட்) தமிழர் மத்தியில் புகுந்து தமிழ் தேசியத்தை மதரீதியில் பிரித்து பெரும் அட்டூழியம்!

ஈழத் தமிழர்களை மத ரீதியில் பிரித்து மதப் பிரிவினையைத் தூண்டும் இந்தியாவின் நோக்கத்தை வெற்றிகரமாக செயற்படுத்த தொடங்கியுள்ளது உதயன் பத்திரிகை.

ஏப்ரல் 9ஆம் திகதி உதயன் பத்திரிகை “வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்து அட்டூழியம் புரிந்த மதக்குழு” என்ற தலைப்பில் முன் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியோடு தொடர்புபட்ட சபையை சேர்ந்த மக்கள் சிலர் குறித்த செய்தியை கேள்விக்குட்படுத்தி உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு அன்றைய தினம் சென்றிருந்தனர்.

அங்கு குறித்த செய்தியை எந்த அடிப்படையில் பிரசுரித்தீர்கள் என ஆசிரியர் பீடத்தினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதுவே நடந்த சம்பவத்தின் சாராம்சம்.

இந்த சம்பவத்தைத் தான் உதயன் பத்திரிகை ஏப்ரல் 10ஆம் திகதி முன்பக்க முழுப்பக்க செய்திகளாக பெருமெடுப்பில் வெளியிட்டுள்ளது.

உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்து மதக்குழுவொன்று பெரும் அட்டூழியம் என்று குறிப்பிட்ட அளவுக்கு அங்கு எந்த சம்பவமும் இடம்பெற்றதாக உதயன் தரப்பிலிருந்து வெளியாகியிருந்த காணொலியில் தெரியவில்லை.

குறித்த சபையைச் சேர்ந்த மக்கள் தமது சபையோடு தொடர்புபட்ட செய்தி தொடர்பில் கேள்வி கேட்கவே உதயன் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.

வந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அவர்களுடன் சில இளைஞர்கள் வந்துள்ளனர்.

வந்தவர்கள் யாரும் எந்த ஆயுதங்களோடோ தாக்குதல் நடத்தும் எண்ணத்துடனோ வந்திருக்கவில்லை.

அவர்கள் சாமானிய மக்கள். ஒரு பத்திரிகை நிறுவனத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கரிசனை அவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதை அவர்களிடம் எதிர்பார்க்கவும் இயலாது.

அவர்கள் போதகரது தூண்டுதலால் வந்திருந்தாலும் கூட அவர்கள் சாதாரண பொதுமக்கள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் என்ற தெளிவு ஒரு பத்திரிகை நிறுவனத்திடம் இருந்திருக்க வேண்டும்.

ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று அந்த சமூகத்துக்கு அறிவூட்டுவது, அவர்களை வழிநடத்துவது. இந்த இடத்தில் உதயன் தன் கடமையிலிருந்து தவறியுள்ளது.

குறித்த காணொலியில் அந்த மக்கள் எந்த இடத்திலும் தவறான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. யாரையும் தாக்கவில்லை. நிறுவனத்தின் சொத்துக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை.

பல பேர் சேர்ந்து சென்று கதைத்தால் தங்கள் கருத்து கேட்கப்படும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்கலாம்.

காணொலியில் ஒரு இடத்தில் ஒரு பெண் “ நீங்கள் கண்டபாட்டுக்கு எழுத ஏலாது” என்று சொல்ல அங்கு நின்ற மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் “அதை நீங்க சொல்ல ஏலாது. கோர்ட்டுக்கு போங்க” என்கிறார்.

ஊடகம் என்பது மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியது. அவற்றை கேள்வி கேட்கும் உரிமை சட்டத்துக்கு முன்னர் மக்களுக்கே உள்ளது.

சாமான்ய மக்களுக்கு சட்டம் தொடர்பில் பூரண அறிவு இல்லை என்ற பலவீனத்தைக் கொண்டு கோர்ட்டுக்கு போ, கேஸ் போடு என்று அடாவடித்தனமாக நடந்து கொண்ட உதயன் தரப்பினர் அந்த மக்களை காட்டுமிராண்டிகள் ரேஞ்சுக்கு சித்தரிக்கின்றனர்.

ஏற்கனவே பிரதேசம் சாதி என கூறுபோடப்பட்டுள்ள இந்த சமூகம் மத ரீதியில் பிளவுபட்டு நிற்பதற்கான மீதமுள்ள வழிகளையும் ஊடகங்கள் திறந்துவிட்டுள்ளன.

முற்றுமுழுதாக, மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் திரிபுபடுத்தப்பட்ட இந்த செய்திக்கு கண்டன அறிக்கைகள் வேறு அனல் பறக்கின்றன. அதில் சைவமாகாசபை, உருத்திரசேனை, மறவன்புலவு சச்சிதானந்தன் ஆகியோரின் கண்டன அறிக்கைகள் முன்பக்கத்தில் அடுக்கிவிடப்பட்டுள்ளன. இதிலிருந்தே இது மதப்பிளவைத் தூண்டும் உள்நோக்கத்துடனானது என்பது தெட்டத்தெளிவாகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான செய்திகளில் உதயன் பயன்படுத்தியுள்ள சொற்கள் மிகக் கீழ்த்தரமானவை. எவ்வாறு தமிழர்களை சிங்களப் பேரினவாதம் பயங்கரவாதிகள் என்று சித்தரித்ததோ அவ்வாறே தன்னுடைய சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள ஒரு மதச் சமூகத்தின் மீதான தவாறான விம்பத்தை உதயன் கட்டமைக்கின்றது. இதனை சைவமாகாசபை, உருத்திரசேனை, சிவசேனை போன்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிவருடிகள் எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்படாதபாடு படுகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புபட்டோரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை சமூக விரோதிகள் என்றவாறு சித்திரித்துள்ள உதயனின் போக்கு மிகுந்த அடாவடித்தனமானது. உதயன் இவ்வாறு சித்திரிக்குமளவுக்கு எந்தவொரு சம்பவமும் அங்கு இடம்பெற்றதாக காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

இந்த சம்பவத்தின் பின்புலம் பற்றி தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவிப்போர் இதனை தாறுமாறாக திரிவுபடுத்த தொடங்கியுள்ளனர்.

ஏப்ரல் 8ஆம் திகதி உதயன் தனது முன்பக்கத்தில் “80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த மக்கள் உதயன் அலுவலகத்துக்குள் அத்துமீறினர் என்ற தவாறான கண்டோட்டத்துடன் சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் போதகர்களையும் கீழ்த்தரமாக பதிவிடுகின்றனர். இது மிக அபத்தமானது.

“80வயதுப் போதகரால் சிறுமிகள் துஷ்பிரயோகம்” என்ற செய்தி உண்மை எனின் அது நிச்சயம் பிரசுரிக்கப்பட வேண்டியதே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் பாலியல் சேட்டை புரிவோரைக் கண்டுகொள்ளாமல் அவர்களிடம் கட்டுரைகள் வாங்கிப் பிரசுரித்து அவர்கள் புகழ்பாடும் இந்த ஊடகங்கள் இந்த செய்திகளில் மட்டும் தம் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவது தான் வேடிக்கையாகவுள்ளது.

யாழில் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்த போதைவஸ்துக்களுடனும் தொடர்புடைய ஜெயந்திரன் வெற்றிவேலு சிவாலய ஸ்தாபகராக இருந்தும் யாழ்.ஊடகங்கள் இன்றுவரை அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

சமூகத்தின் அதிகார மையங்களில் உள்ள தவறுகளைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஊடகங்கள் தம் அரசியல் மத சார்பு நிலைகளுக்கு ஏற்ப செய்திகளில் வக்கிரத்தைக் கொட்டுவதே அட்டூழியத்தின் உச்ச கட்டம்.

சமானிய மக்களின் மேல் தம் ஊடகப் பலத்தைக் காட்டும் இவற்றின் செயல்கள் மிகுந்த கண்டனத்திற்குரியவை.

பேரினவாதத்தை வளர்த்தெடுக்க  இராணுவம் பொலிஸ் துணை போகின்றது, ஊடக சுதந்திரம் இராணுவம் பொலிஸால் பாதிக்கப்படுகின்றது.

பொலிஸார் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூவித் திரிந்த உதயன் இன்று தன்னிடம் செய்தி தொடர்பில் கேட்டு வந்த சாமானிய தமிழ் மக்களுக்கு பொலிஸை வைத்து பூச்சாண்டி காட்டி அனுப்பியுள்ளது என்றால் இவர்களின் தமிழ்த் தேசியப்பற்றும் தமிழ் மக்கள் மீதான அக்கறையும் எத்தகையது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்று எழுக தமிழ் என்ற கோசத்துடன் தமிழ் மக்கள் திரண்டு சென்ற போது தன்னுடைய சுயலாப அரசியலுக்காக புரட்டாதிச் சனிக்கு எள்ளெண்ணெய் எரித்த செய்தி போட்டது தான் உதயனின் ஊடக தர்மம்.

உதயனுக்குச் சென்ற மக்கள் போதகரால் தூண்டுதலில் வந்தார்கள் எனின் அது அவர்களுடைய அறியாமை. ஆனால் இந்தியாவின் ஆர்.ஆர்.எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று அற்ப சலுகைகளுக்காக இனத்தைக் கூறுபோடும் இந்த ஊடகங்களின் அட்டூழியங்களை அறியாமை என்று கடந்து செல்ல முடியுமா? உதயனின் தலையங்கங்கள் அப்பத்திரிகை ஆர்எஸ்எஸ் இன் ஏஜென்டாக விலைபோய்விட்டதையே காட்டுகின்றது. தமிழ் தேசியத்தைக் கூறு போடவும் பலவீனப்படுத்தவும் கேரளா கஞ்சாவோடு மதவாதம் என்ற அபினையும் இந்திய ஒன்றிய அரசு வடக்கு கிழக்கினுள் நுழைய அனுமதிக்கின்றது.

தமிழ் மக்கள் விழிப்படைந்து இந்த இந்திய பினாமிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொண்டாலொழிய தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் – குமார் சங்கக்கார நம்பிக்கை !

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு இலங்கையின் இளம் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் அளித்த ஆதரவிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பாராட்டு தெரிவித்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் லைக்காவின் ஜப்னா கிங்ஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வலைப் பந்துவீச்சாளர்களாக உள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து விஜயகாந்த் வியாஸ்காந்த், விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரரான விஜஸ்காந்த் சிறப்பாக பந்துவீசியதாகவும், அவர் பல விடயங்களை இதன்போது கற்றுக்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியாஸ்காந்த் விரைவில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவார் என தான் நம்புவதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக குமார் சங்கக்கார செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

30 லட்சம் குரங்குகள் – சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள இலங்கை குரங்குகள் !

இலங்கையில் உள்ள குரங்குகளுக்கு சீனாவில் மிகப் பெரிய கேள்வி இருப்பதாகவும் நாட்டில் பெருகி வரும் குரங்குகளின் எண்ணிக்கைக்கு தீர்வுகாணும் வகையில் அவற்றை சீனாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் குரங்குகளை சீனாவில் உள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

இந்த கோரிக்கைக்கு அமைய ஒரு லட்சம் குரங்குகளை முதல் கட்டமாக சீனாவுக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் இன்று நடைபெற்றது.

அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், விவசாய அமைச்சின் அதிகாரிகள், விலங்கியல் பூங்கா திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு அமைய இலங்கையின் குரங்குகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் போது நடைமுறையில் உள்ள சட்ட நிலைமைகள் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவையின் அனுமதியுடன் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் தெரியவந்துள்ளது. நாட்டில் விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும்விலங்குகளில் குரங்குகளே முன்னிலையில் உள்ளன.

அதிகரித்து வரும் குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலேயே குரங்குகளினால் அதிகளவான பயிர் சேதங்கள் ஏற்படுகின்றது.

இலங்கையில் குரங்குகளால், பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை கவனத்தில் கொள்ளும் போது குரங்குகளை பெற்றுக்கொள்ள நாடு ஒன்று முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தததும் குறிப்பிடத்தக்கது.

தன்சானியாவில் ஒரே ஆண்டில் 42,954 மாணவிகள் கர்ப்பம் !

தன்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட ஓராண்டில் நாடு முழுவதும் 42,954 மாணவிகள் கர்ப்பமான நிலையில், பள்ளியை விட்டு இடைநின்றனர். அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை.

கருவுற்ற 42,954 பள்ளி மாணவிகளில் 23,009 பேர் மேல்நிலைப் பள்ளிகளையும், 19,945 தொடக்கப் பள்ளிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். 2021ம் ஆண்டில் மட்டும் ஆரம்பக் கல்வியை படிக்க வேண்டிய வயதில் உள்ள 82,236 மாணவிகளில் 28 சதவிகிதம் பேர் கர்ப்பமாகினர். இவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வரவில்லை. குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், 18 வயது நிரம்பும் முன்பே மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அல்லது தகாத உறவில் மாணவிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வு !

மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 6 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1934ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செட்டிக்குளத்தில் நான் வைத்த புத்தர் சிலையை காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள தமிழர் !

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (09) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அது ஞாயிற்றுக்கிழமை மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொரிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ தளம்..? – அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வெளியிட்டுள்ள தகவல் !

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன்.

சோஃபா (SOFA) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள மதிப்பீடு செய்யவோ தமது நாட்டுக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 1995 இல் கையொப்பமிடப்பட்டது. முன்னதாக, இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்புக் குழு இந்த ஆண்டு பெப்ரவரியில் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கைக்கு வந்திருந்தது. பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு விடயங்கள் தொடர்பாக முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு வருகைத் தந்திருந்தது.

உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த தூதுக்குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு விசேட விமானங்களில் நாட்டை வந்தடைந்தது. இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற ஊகத்தை தூண்டியது. இந்தநிலையிலேயே, குறித்த விஜயம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

“நாட்டை முன்னேற்ற முயற்சித்த பசில் ராஜபக்ச மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.”- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை வழிநடத்த மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பசில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை முன்னேற்றுவதற்கும், உலகின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும் செயற்பட்டு வந்தவர். அத்துடன், நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சர்வதேச சமூகத்துடன் சிறப்பான விதத்தில் செயற்பட்டு யுத்தத்துக்கு தேவையான ஆதரவைப் பெற்றவர் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள ஏழை மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொண்டு, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய தலைவர் பசில் எனவும், கடந்த காலங்களில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாதியாக குறைக்கப்பட்டது உள்ளூராட்சி மன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை !

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4,714 ஆக குறைக்கப்படுகிறது.

தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய தேசிய குழு தமது அறிக்கையின் இரண்டாம் அலகை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இன்று கையளித்தது.

தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செள்த பொலிஸ் அதிகாரி !

கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டதாக வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பொலிஸ் களப்படை தலைமையகத்தில் பணிபுரியும் சாரதி கான்ஸ்டபிள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முப்பதாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு பெண் ஒருவருக்கு மூன்று மாத்திரைகளை உட்கொள்ளச் செய்து கருக்கலைப்பு செய்வதாகவும் இவர் தொடர்பான விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.