எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் போது சில சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம்.
தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு எமக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை இதனைத் தவிர்க்க முடியாது என எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எல்லை நிர்ணய குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளமை அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பிரஜைகளுக்கு தமது பரிந்துரைகளையும் , யோசனைகளையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் ஆரம்ப வரைபு நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கொழும்பு 5இல் அமைந்துள்ள எல்லை நிர்ணய குழு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழுவின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே எல்லை நிர்ணய பணிகளுக்காக எடுக்கப்பட்ட செயன்முறைகள் , அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் , பொது மக்களின் கருத்துக்கள் தொடர்பான தகவல்கள் , குழுவின் அவதானிப்புக்கள் , பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய அறிக்கைகளும் மே 2ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆர்வம் செலுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் , பிரஜைகளுக்கும் அவை தொடர்பான முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் எதிர்வரும் 25 அல்லது 26ஆம் திகதிகளுக்கு முன்னர் எல்லை நிர்ணய தேசிய குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும்.
கொழும்பு -5, கிருள வீதி , நில அளவையாளர் அலுவலகக் கட்டடத்தில் எமது அலுவலகம் அமைந்துள்ளது. மீளாய்வுக்குழு மீண்டும் நியமிக்கப்பட்டால் , எம்மிடம் கையளிக்கப்படும் பரிந்துரைகளை அதில் சமர்ப்பிக்க முடியும்.
கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வரை இது குறித்து எவ்வித ஆர்வமும் செலுத்தப்படவில்லை. பின்னர் கட்சிகளை அழைத்து இது தொடர்பில் கலந்தாலோசித்த போதிலும் , சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.
மார்ச் 14ஆம் திகதி முதல் இது குறித்து அவதானம் செலுத்துமாறு நாம் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
எனினும் இது குறித்து சுமார் 15 பரிந்துரைகள் மாத்திரமே கிடைத்தன. தொகுதிகள் குறைக்கப்படும் போது சில சிறுபான்மை மக்கள் குழுக்களுக்கு பாதகம் ஏற்படும் என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தொகுதிகள் குறைக்கப்படும் போது இவ்வாறு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். தொகுதிகளைக் குறைக்குமாறு கூறிய பின்னர் எம்மால் இதனைத் தவிர்க்க முடியாது என்றார்