கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு தெற்குப் புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர்செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்குப் புறமாக சீனாவிற்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகின்றேன்.
இரணைமடுவின் தெற்கு புறமாகவும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையாக உள்ள இயக்கச்சி பகுதியில் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்ற கிட்டத்தட்ட 200 ஏக்கருக்கு அதிக காணியையும் சீன நாட்டுக்கு வழங்குவதற்காக அவர்கள் சில திட்டங்களை முன்னெடுத்திருப்பது அவர்களின் செயற்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் பல நிலப்பகுதிகள் இவ்வாறு நாடுகளிற்கு விற்கப்படுகின்றன. அதில் கூடுதலாக கடலை தரையாக்கி சீனாவிற்கு விற்றல், கடலோரங்கள் மற்றம் தரைகளை சீனாவிற்கு விற்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கியுள்ளது.
இந்தியாவிற்கு தான் நல்லபிள்ளை போன்று நடித்துக்கொண்டாலும், தன்னுடைய வேலைத்திட்டங்களை சீனாவை வைத்தே கையாளுகின்ற பெரும் யுத்திகளை இலங்கை அரசு கையாளுகின்றது.
இது பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஈழத்தமிழர்களின் இருப்பு என்பதும் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கின்றது.
இரணைமடுகுளத்தின் தெற்கு பகுதியில் 500 எக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதும், இயக்கச்சி பகுதியை அண்மித்து 200 ஏக்கர் காணியை சீன அரசுக்கு வழங்கு வதற்கு இலங்கை அரசு எடுத்திருக் கின்ற முயற்சி மிகவும் அபாயகரமானது.
கிடைத்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் இரணைமடுவின் தெற்கு பகுதிக்கு மகாவலி திட்டத்தை கொண்டு வருதல், சிங்கள குடியேற்றங்களை கொண்டுவருதல் என்ற போர்வையில் பாரிய வேலைத்திட்டங்களிற்காகவும், நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களுடைய இனத் தனித்துவத்தை இல்லாது செய்து ஓர் சிங்கள மயப்படுத்துலாது செயற்பாடுகளில் அவர்கள் முன்னின்று உழைக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்.