17

17

பங்களாதேஷிடமிருந்து இலங்கை பெற்ற கடன் – 6 மாத கால அவகாசம் !

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கிய கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களால் நீடிப்பதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்தவேண்டியிருந்த போதிலும், சுமார்  51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.

அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் இன்னமும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடையவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன்களை மீளச்செலுத்துவதற்கு இலங்கை மேலும் 6 மாத காலஅவகாசத்தைக் கோரியிருக்கின்றது. அதன்படி முதற்கட்டமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக இலங்கை தெரிவித்துள்ளது’ என்று பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி இதன்பின்னர் மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கும்போது, அது ‘இலவசமாக’ வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக அக்காலப்பகுதிக்குரிய வட்டி அறவிடப்படும் என்றும் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 88 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன – அனுரகுமார திஸாநாயக்க

நாட்டில் இதுவரை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் 88 அரச நிறுவனங்களை விற்பனை செய்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

விற்பனை மற்றும் கடனை பெறுவதன் மூலம் நாடு முன்னேறி இருந்தால், அதற்கான வெற்றிக்கிண்ணத்தை ரணில் விக்ரமசிங்கவே பெற்றிருப்பார். எமது நாட்டுக்கு கடனை பெற முடிந்த தலைவர் அல்லது தலைவர்களை தேட வேண்டுமா?. அடுத்தது விற்பனை, விற்பனை என்பது புதிய விடயமல்ல. எமது நாட்டில் தொழிற்சாலைகள் இருக்கின்றதா?. எதுவுமில்லை. 1980,83 மற்றும் 83 ஆம் ஆண்டுகளிலேயே முதலில் விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.

துல்ஹிரி, மத்தேகொட, பூகொட துணி உற்பத்தி தொழிற்சாலைகளை விற்பனை செய்தனர். 30 ஆண்டுகளாக அனைத்தையும் விற்பனை செய்தனர். இதுவரை 88 அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றனர்.

நாட்டின் பொருளாதர பிரச்சினைக்கு கடன் பெறுவதே தீர்வு என்றால், ரணில் அந்த காலத்திலேயே நாட்டை முன்னேற்றி இருக்கலாம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று ஒரு பில்லியன் டொலர்களை பெற்றனர். எங்கே அந்த பணம். நாடு முன்னேறி இருந்தால், ஏற்கனவே முன்னேறி இருக்க வேண்டும்.

விற்பனை செய்வதும், கடனை பெறுவதும் எமது நாட்டை முன்னேற்றும் வழிகள் அல்ல. அதற்குள் கொள்ளைகள் நடக்கின்றன. ஹிங்குரான சீனி தொழிற்சாலையில் கொள்கை நடக்கின்றது.

ஹிங்குரான சீன தொழிற்சாலையை விற்பனை செய்யும் போது 6 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டிருந்ததுடன் 600 ஏக்கரில் கன்றுகள் பயிரிடப்பட்டிருந்தன. எனினும் களஞ்சியத்தில் இருந்த சீனியின் பெறுமதியை விட குறைவான விலைக்கே தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டது.

செவனகல தொழிற்சாலையை ரணில் யாருக்கு விற்றார்? தயா கமகேவுக்கு விற்பனை செய்தார். புத்தளம் சீமெந்து தொழிற்சாலை விற்பனை செய்யப்பட்டது. எங்கே அந்த பணம்? புத்தளம் சீமெந்து தொழிற்சாலையை விற்பனை செய்யும் விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தது.

அன்று டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின்னர் எயார் லங்கா விற்பனை செய்யப்பட்டது. இது பகிரங்க கொடுக்கல், வாங்கல் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிறைக்கு கொண்டு செல்லவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் கொண்டுவருகிறார்.” – சிறீதரன்

“மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சிறைக்கு கொண்டு செல்லவே பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனாதிபதி ரணில் கொண்டுவருகிறார்.” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (16) கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு கூறிய அவர், மேலும் பேசுகையில்,

அடுத்தடுத்த வாரங்களில் மிக மிக ஆபத்தான பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரப்படும்போது, அது விவாதத்துக்கு விடப்படும். அப்போது அதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படும்.

இந்நிலையில் இப்போது, பெரும்பான்மை வாக்குகளை அளிக்கக்கூடிய மஹிந்த ராஜபக்ஷ குடும்பமே இந்த சட்டத்துக்குள் அகப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்படலாம்.

ஏற்கனவே, ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பாராளுமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை வைத்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொன்று குவித்துத் தள்ளியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள எதிர்கால சிந்தனை வேறு; மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திடம் உள்ள எதிர்கால சிந்தனைகள் வேறு. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால் இந்த சட்டத்தை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ரணில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக தான் வரவேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அவ்வாறான முயற்சிகளில் எந்த ஒரு தேர்தலையும் தற்போது நடத்துவதற்கு அவர் தயாராக இல்லை.

ஏற்கனவே, இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் மிக மிக ஆபத்தான சட்டமாகவே இப்புதிய சட்டம் உள்ளது. தனிநபர் கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரங்குகள் கொள்வனவிலும் வல்லரசு போட்டி – சீனாவை அடுத்து அமெரிக்காவுக்கும் பறக்கவுள்ள இலங்கை குரங்குகள் !

இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைப் பெற சீனா தயாராகி வரும் நிலையில் , அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளது.

எனினும்,  அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் , சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,

இந்நாட்டு குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும்,அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் 30 இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கையினால் பயிர்கள் அதிகளவில் சேதமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குரங்குகளின் மனித குணங்கள் காரணமாக, மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த விலங்குகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.

மேலும் இந்த வணிகத்தின் வருமானமானது குரங்குகளை உயிரியல் பூங்காக்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

மேலும், குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் குரங்குகளின் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் இந்நாட்டில் வாழும் சில குரங்கு இனங்கள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தினால் (IUCN) அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS), சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ), சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FEO) மற்றும் பல அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது

தென் கடற்பரப்பில் மீன்பிடி கப்பலில் இருந்து 3.5 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு !

தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி கப்பலொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3.5 பில்லியன் ரூபாவாகும்.

கப்பலில் இருந்த ஆறு நபர்களுடன் இன்று காலை காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் 175 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

“75 வருடத்தில் இலங்கையானது தோல்வியடைந்த நாடாகவே உள்ளது.”  – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது தோல்வியடைந்த நாடாகவே உள்ளது.”  என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

த ஹிந்துவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, ​​இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக மாறியுள்ளதாகவும், நீதித்துறை, பொலிஸ் மற்றும் பொது சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களை கீழிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்க சுதந்திர இலங்கை பல்வேறு இன மற்றும் மத சமூகங்களை “ஒன்றாக இணைக்க” தவறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி இணைந்து நடத்திய ஒன்லைன் நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.