18

18

அடிப்படைவாத அரசியலுக்கு பயன்படுத்தப்படும் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் – கல்வி அமைச்சர்

உயர் தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமத்தினால் இளைஞர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, அந்த இளைஞர்களை அடிப்படைவாத அரசியலுக்கு தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகள் நடப்பதாக புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் உடன்படிக்கையில்  தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்.

உயர் தரப்பரீட்சை விடைத்தாள்கள் திருத்தப்படுவது தாமதமாகியதால் 18 வயது முதல் 20 வயதான இளைஞர்கள் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இளைஞர்களின் இந்த அசௌகரியத்தை பயன்படுத்தி,  குறுகிய அரசியல் தேவைகளை பூர்த்தி செய்ய அடிப்படைவாத அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக புலனாய்வு அறிக்கை மூலம் கடந்த வாரம் தெரியவந்துள்ளது.

விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

செயன்முறை பரீட்சைகளை முன்கூட்டியே நடத்துவதால் ஏற்படும் தாமத்தை முடிந்தவரை  தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

உயர் தரப்பரீட்சையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளும் தோற்றியுள்ளதால்,  தமது பிள்ளைகள் மற்றும் ஏனைய பிள்ளைகளுக்காக விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் இணையுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

அயர்லாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை !

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த அயர்லாந்து அணி மூன்றாவது நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

448 ஓட்டங்கள் அயர்லாந்து அணிக்கு மேலதிகமாக தேவைப்பட்ட நிலையில், ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஓர் இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார்.

பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிரபாத் ஜயசூரிய தெரிவானார்.

இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

சூடானில் இராணுவப்படைகளுக்குள் முரண்பாடு – பொதுமக்கள் பேர் வரை பலி !

சூடான் நாட்டில் இராணுவம், துணை இராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்.எஸ்.எப்) துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்கான் ஆர்எஸ்எப் தீவிரவாத ராணுவம் என்று கருத்து கூறியதால், அவருக்கும் துணை இராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தகாலோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் கார்டோம், ஓம்டர்மன் பகுதிகளில் இராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே 3வது நாளாக பலத்த மோதல் நடந்து வருகிறது.ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப் அறிவித்தது.

இந்நிலையில், சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 200 பேர் கொல்லப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் என மொத்தம் 1800 பேர் காயமடைந்திருப்பதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

இலங்கையின் நகரமயமாக்கல் 2012 – 2022 பத்து வருட காலப்பகுதியில் 45% ஆக அதிகரிப்பு !

குறைந்த மட்டத்தில் இருந்த இலங்கையின் நகரமயமாக்கல் 2012 – 2022 பத்து வருட காலப்பகுதியில் 45% ஆக அதிகரித்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பேரில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின்படி, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் நாயகம் காமினி ஹெவகே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நகரமயமாதல் தொடர்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின்படி, நாட்டின் நகரமயமாக்கல் 18% ஆகும்.

மக்கள் தொகை அடர்த்தி, வீடுகள், 10 கி.மீ.க்குள் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகள், துணிக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வங்கிகள், தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்தின் கிராம அதிகாரிகளின் எல்லைக்குள் அமைந்துள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை, வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகள், நகரமயமாக்கல் உள்ளூராட்சி அமைப்புகளால் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றுதல், உள்ளூராட்சி மன்ற பகுதியில் உள்ள விவசாயம் அல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு பகுதி அளவிடப்படுகிறது.

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் தற்போதுள்ள ஹோமாகம மற்றும் கொலன்னாவ ஆகிய இரண்டு உள்ளூராட்சி சபைகளும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் வேகமாக நகரமயமாகியுள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது என்று தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் மற்ற பகுதிகளும் வேகமாக நகரமயமாகி வருகின்றன.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே மேலும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி நகரமயமாக்கல் மூலம் அளவிடப்படுகிறது. 2012 க்கு முன், நாடு நகரமயமாக்கலில் மெதுவான வளர்ச்சியைக் காட்டியது. ஆனால் 2010 களின் தொடக்கத்தில், நாட்டின் நகரமயமாக்கல் மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மற்றும் தொழில்கள் மற்றும் வர்த்தகத்தின் விரிவாக்கத்துடன் துரிதப்படுத்தப்பட்டது.

இளம் பெண் ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயதுடைய அதிபர் கைது !

இளம் பெண் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 60 வயதுடைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர் 22 வயதுடைய இளம் ஆசிரியையை விசேட கடமையின் காரணமாக பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

பின்னர், உரிய அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆசிரியர் நேற்று மதியம் பாடசாலைக்கு வந்தார்.

ஆசிரியை தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியில் செல்ல தயாரான போது சந்தேகநபரான அதிபர் அவரை கட்டிப்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், அந்த ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்று மினுவாங்கொடை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து, இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டார். பின்னர், இளம் ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சந்தேகத்திற்குரிய அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையையும் – இந்தியாவையும் இணைக்க கடலுக்கடியில் சுரங்கப்பாதை – மோடியிடம் கோரிக்கை !

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

“அரச எதிர்ப்பாளர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ எனும் முத்திரையைக் குத்தவே புதிய பயங்கரவாத சட்டமூலம்.” – பேராசிரியர் சன்ன ஜயசுமன

“அரச எதிர்ப்பாளர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ எனும் முத்திரையைக் குத்தி அவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கவே புதிய பயங்கரவாத சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

“பயங்கரவாதிகளையும், அரச எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக காண்பித்து, அனைத்து அரச எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கான கொண்டு வரப்பட்ட சட்டமே இதுவாகும்.

ஜே.ஆர் ஜயவர்தன அன்றைய ஆட்சியில் செய்ததையே இப்போதைய ஆட்சியாளர்கள் செய்ய எத்தனிக்கின்றனர்.

இந்த புதிய சட்டமூலத்தை எமது சுதந்திர மக்கள் சபை கடுமையாக எதிர்க்கும்.

அரசுக்கெதிராக சாதாரண போராட்டம் நடத்தினால் கூட கைது செய்யப்படும் நிலைப்பாட்டை இந்த சட்டமூலம் காட்டுகிறது.

இதன்மூலம் பிரதி காவல்துறைமா அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முழு நாடும், தொடர்ந்து அவசரகால சட்டத்தின் கீழ் இருக்கும் நிலையை தோற்றுவிக்கும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மக்கள் போராடுவதால் காலி முகத்திடல் சேதாரமடைகிறது – ஒன்றுகூட தடை விதித்தது ரணில் அரசு !

பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, சமய நிகழ்வுகள் தவிர இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலி முகத்திடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது சேதமடைந்த சொத்துகளை புனர்நிர்மாணிப்பதற்காக 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக காலி முகத்திடல் சேதமடைவதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

QR- எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு !

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட  எரிபொருள் ஒதுக்கீடு மாற்றமின்றி தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இன்று (18) அறிவித்துள்ளார்.

இன்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அடுத்த வாரம் வரையில்  எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித  மாற்றமுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தையொட்டி  கடந்த 4 ஆம் திகதி முதல்  அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு:

வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு !

வவுனியா, பம்பைமடுப் பகுதியில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (18) தெரிவித்தனர்.

புத்தாண்டு தினத்தன்று இரவு 8.30 மணியளவில் வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கிச் மோட்டர் சைக்கிளில் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் மீது பம்மைமடுப் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்கள் அணிந்திருந்த 6 அரைப் பவுண் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் காசு என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.

காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் தாய் ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பூவரசன்குளம் பொலிசார் 30 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.