18

18

மத்திய வங்கியில் 50 இலட்சம்  ரூபா  திருட்டு – சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு !

மத்திய வங்கியில் 50 இலட்சம்  ரூபா  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்துக்கு  இந்த விவகாரம் தொடர்பில்  கோட்டை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மத்திய வங்கியின் உயர்பாதுகாப்பு அறையில்  வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு !

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களை அடிப்படையாக கொண்ட முற்போக்கானது – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களை அடிப்படையாக கொண்டது முற்போக்கானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல முன்னணி சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை உள்வாங்கி பொதுமக்களை பாதுகாப்பதற்காக இதனை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் காணப்படும்  சட்டங்களை அடிப்படையாகவைத்து உத்தேச பயங்கரவாத தடைச்சட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை உத்தேச சட்டம் நீக்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே உத்தேச சட்டத்தில் காணப்படுகின்றன எதிர்கால அரசாங்கங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் எந்த ஏற்பாடுகளும் உத்தேச சட்டத்தில் இல்லை எனவும் விஜயதாசராஜபக்ச தெரிவித்துள்ளார்.