21

21

சூடானில் ரமழானை ஒட்டி 70 மணி  நேர போர் நிறுத்தம் !

சூடானில் ரமழானை ஒட்டி 70 மணி  நேர போர் நிறுத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் துணை ராணுவப்படையினர் அறிவித்துள்ளனர் .

கடந்த 16 ஆம் திகதி துணைராணுவம் சூடானின் தலை நகரை முற்றுகையிட்ட நிலையில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையில் பெரும் சண்டை வெடித்துள்ள நிலையில் 350 பேர் மோதலில் கொள்ளப்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரமழான் பண்டிகையையொட்டி மனிதாபிமானத்தை அடிப்படையாக கொண்டு காலை 6 – அடுத்த நாள்  72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்திற்கு வந்துள்ளது. இதனை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

“நாட்டிற்கு வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின மிகச்சிறந்த 40 வர்த்தகர்களுக்கு விருது வழங்குவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற பிஸ்னஸ் டுடே விருது வழங்கல் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் வர்த்தகத் துறையில் விஷேட செயல்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களை பாராட்டும் நோக்கில் மேற்படி விருது வழங்கும் விழா பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வருடாந்தம் நடத்தப்படுகிறது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

நாம் இரு வருடங்களுக்கு முன்னதாக இறுதியாக சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில் கடுமையான நெருக்கடிகளுடன் கூடிய இரு வருடங்களின் பின்னரான சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என கணிக்க முடியாமல் இருந்திருந்தாலும் தற்போது நாம் நெருக்கடியிலிருந்து மீள்வதற்குரிய பாதைக்குள் பிரவேசித்துள்ளோம்.

இருப்பினும் ஸ்திரமானதும் அபிவிருத்தியை நோக்கி நகர்வதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்க நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். வொஷிங்டனில் நடைபெற்ற வசந்த கால அமர்வுகளில் பங்கேற்கச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநரும் பல்தேசிய நிறுவனங்கள் நமக்கு உதவ முன்வந்துள்ளது என்ற நற்செய்தியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும். அது தொடர்பில் ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் பரிஸ் கிளப் பிரதானியுடனும் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடியிருந்தோம். நாம் முன்னேறிச் செல்வதற்கான ஊக்குவிப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். அதேபோல் சீனாவுடனான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகிறன.

நாம் நெருக்கடிகளிலிருந்து துரித கதியில் மீண்டு வந்துள்ளமை வியப்புக்குரியதாக இருந்தாலும், உங்களால் தாங்கிக்கொள்ள கூடிய கடினமாக தீர்மானங்கள் பலவற்றை மேற்கொள்ள உள்ளமை எனது வாழ்விலும் கடினமான காலமாகும் என்றே கூறுவேன்.

நீண்ட கால தீர்வுகள், மற்றும் இடைப்பட்ட காலங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றி தேடியறிவதால் நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் பணம் அவசியம் என்பதால் வருமானம் ஈட்டிக்கொள்ளும் பிரச்சினையே நம்முன் பெரிதாக நிற்கிறது. அதனால் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளையும் தேடி அறிய வேண்டும்.

சில காலங்களுக்கு முன்பு உங்களிடத்திலும் உங்களது நிறுவனங்களிடத்திலும் வரி சேகரிப்பது மாத்திரமே அதற்குரிய வழியாக காணப்பட்ட போதிலும், தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளே அதற்குரிய சரியான வழிமுறையாக தெரிகிறது. எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

வருமானம் ஈட்டுவதற்கான சரியான வழிமுறையொன்று விரைவில் தயாரிக்கப்படும், அதற்கான பணிகளுக்கு திறைசேரியும் தயாராக வேண்டியது அவசியமாகும். நாம் மேம்படுத்த வேண்டிய பல துறைகள் உள்ளன. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பது அவசியமாகும். எனினும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் குறித்து எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை.

அதேபோல் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது கடன் வழங்குநர்களுக்கு நாமும் பங்களிப்புக்களை வழங்க வேண்டியது அவசியமாகும். சலுகைகளைப் பெற்றுக்கொள்ளவும் நமது அர்பணிப்புக்கள் அவசியமாகிறது. மறுமுனையில் திறைசேரி அதற்குரிய மாற்று வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.

நாம் கடன் மறுசீரமைப்புக்களை செய்ய தவறும் பட்சத்தில் நாம் கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். எவ்வாறாயினும் மேற்படி செயற்பாட்டிற்கான மாற்று வழிகள் மக்களுக்கு நெருக்கடியாக அமைந்திருக்காது என்ற உறுதியை வழங்குகிறேன்.

அதற்காக இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ள அதேநேரம். மே மாத இறுதிக்குள் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகளை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். பொருளாதார ஸ்திரத் தன்மைக்கான குழுவின் அறிக்கையும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.” – அமைச்சர் அலி சப்ரி

ராஜபக்‌ஷக்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தத் தீர்வுகளும் எந்தச் சமூகங்களுக்கும் நிரந்தரமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் விஜேராம இல்லத்தில் (19) இடம்பெற்ற இப்தாரில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், சமய பெரியார்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம்களையும் ராஜபக்‌ஷக்களையும் எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. இவ்வாறு பிரிப்பதற்கு எடுக்கப்பட்ட சில முயற்சிகள் தற்காலிகமாத்தான் சில சமயங்களில் வெற்றியடைந்திருக்கிறன.பின்னர்,இதற் குப்பின்னாலிருந்த சக்திகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டுவிடுவர்.கடந்த காலகங்களிலும் இவ்வாறுதான் நிகழ்ந்தன.இலங்கை அரசியலில் ராஜபக்‌ஷக்கள் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்கின்றனர்.இதனால்,இவர்களைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்த அரசயல் தீர்வுகளும் நிரந்தரமாக இருக்காது.

நாட்டின் ஐந்தாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்க்ஷ, இளம் வயதிலிருந்தே பலஸ்தீன முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்.ஒடுக்கப்படும் மக்களுக்காக குரலெழுப்பும் மஹிந்த ராஜபக்‌ஷவை, மிதவாதமாகச் சிந்திக்கும் சிறுபான்மைச் சமூகங்கள் நன்கு புரிந்துவைத்துள்ளதாகவும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நீதியை எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் பலமுறை அளிக்கப்பட்டாலும், அது ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை, தெஹிவளையில் தன்னைத் தானே வெடிக்கச் செய்த தற்கொலைக் குண்டுதாரி ஏன் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பதைத் தீர்மானிக்க புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை தேவை. , இந்தோனேசியாவில் ISIS ஐ அழைத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்குமாறு கோரிய ‘ஜோனிக் ஜோனிக்’ யார் என்பதைத் தீர்மானிக்க, அவர் ஏன் கைது செய்யப்படவில்லை. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய எங்களுக்கு ஒரு புதிய விசாரணை தேவை, “என்றார்.

“தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் நீதியை எதிர்பார்க்க முடியாது என தோன்றுகிறது,”

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை மேற்கோள்காட்டி, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இலங்கை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாப்பரசர் பிரான்சிஸின் பூரண ஆசீர்வாதம் இருப்பதாக அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் உதய்க்வே தெரிவித்தார். .

கத்தோலிக்க திருச்சபை பௌத்த துறவிகள் மற்றும் பிற மதகுருமார்களை அவமதிப்பதில் நம்பிக்கை இல்லை என்றும், அவர்களை அவமதிக்கும் நபர்களுடன் பழகப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதகுருமார்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் பிக்குகளை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்துவதற்கு கத்தோலிக்கர்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர், ஆனால் இதுபோன்ற பிரசாரங்களுக்கு தேவாலயம் பின்னால் இல்லை என நான் கூற விரும்புகிறேன், ”என்றார்.

“பிக்குகளை அவமதிப்பதை நாங்கள் மன்னிக்கமாட்டோம், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுடன்
பழகமாட்டோம். இலங்கையின் கலாசாரம் பௌத்தத்துடன் தொடர்புடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் குடுமி ஜெயாவை பெண்கள் நையப்புடைத்து சாணியடித்தனர்!

யாழ் நல்லூரடியில் இருந்த லக்ஸ் ஹொட்டலின் நிறுவனர் குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனை அவருடன் கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவரும் ஜெயந்திரனின் குழந்தையின் தாயுமான தர்ஷினி தலைமையில் பத்துவரையான பெண்கள் ஹொட்டலுக்குள் புகுந்து அவருக்கு சாணித்தண்ணி கரைத்து தாக்கிய சம்பவம் நேற்று ஏப்ரல் 20 இரவு ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது. குடுமி ஜெயாவின் காமலீலைகள் பற்றிய பதிவுகளை யாழ் ஊடகங்கள் மூடி மறைக்க முற்பட்ட போதும் தேசம்நெற் ஆதாரங்களோடு அவற்றை அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. விளிம்பு நிலையில் இருக்கும் இளம் பெண்களை தனது பணம் மற்றும் போதையூட்டி மயக்கி அவர்களது இளமையைச் சுரண்டும் குடுமி ஜெயா பிரான்ஸ் லாக்குர்னே யில் உள்ள சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த ஆலயத்தின் வருமானத்திலேயே நல்லூரில் உள்ள காமவிடுதியையும் போதைப்பொருள்களையும் பயன்படுத்தி ஜெயந்திரன் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருகின்றார்.

 

இது பற்றிய மேலதிகமாக அறிய கீழுள்ள காணொளியை பாருங்கள்..!

 

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் – விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் !

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில்  சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி ஒருவர் பெற்றோரிடம் முறையிட்ட நிலையில் பெற்றோர் பாடசாலை அதிபரை நேரில் சந்தித்து ஆசிரியரின் செயற்பாடு குறித்து எடுத்து கூறி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.

அதற்கு அதிபர், சாதகமாக நடந்து கொள்ளாது. முறையிட்ட பெற்றோருடன் முரண்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவியின் பாடசாலை விலகல் பத்திரத்தை வாங்கி கொண்டு மாணவியை வேறு பாடசாலையில் இணைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் அவதானம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச தரத்திற்கு முரணாக உள்ளது – அமெரிக்கா

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பான விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரத்திற்கு, புறம்பாக முன்மொழியப்பட்ட, சட்டமூலத்தின் சில விடயதானங்கள் தொடர்பில், கவலை வெளியிட்டதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, பொது மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டிலும் விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது ‘வலுவான விருப்பத்தை’ பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் உட்பட அனைவரது கருத்துச் சுதந்திரம் அல்லது ஒன்றுகூடலை கட்டுப்படுத்தாமல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சிறந்த கருவியாக, குறித்த சட்டமூலம் செயல்படுவதை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும் எனவும் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை !

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.

60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 6000 முதல் 8000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 4000 இலங்கை சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட தம்பதிகள் இலங்கைக் குழந்தைகளுக்கான மலேசிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்கச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

“கசிப்பு காய்ச்சுபவர்களும், மண் கடத்துபவர்களுமே எமக்கு காசு தருகிறார்கள்” – நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் இன்னுமொரு பக்கம் !

“கிளிநொச்சியில் இடம்பெறும் பாரிய வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் இருக்கிறார்கள்” என சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன சந்திரகுமார் அவர்களுடன் அண்மையில் தேசம் திரை ஊடாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது ” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் தொடர்பு தமிழ் தேசியக் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழரசு கட்சி தன்னுடைய எதிர்ப்பை இதுவரை வெளியிடவில்லை என சந்திரகுமார் அவர்கள் விசனம் வெளியிட்டிருந்தார்.
 இதன் போது கேள்வி எழுப்பிய தேசம் ஜெயபாலன் அவர்கள் தனித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பற்றி மட்டுமல்ல தமிழர் பகுதிகளில் அன்றாடம் இடம் பெற்றுக் கொண்டிருக்க கூடிய “போதைப் பொருள் பாவனை, அதிகரிக்கும் சிறுவயது திருமணங்கள், சமூக சீர்கேடுகள் இவை தொடர்பில் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் எந்த கட்சிகளும் மறந்தும் வாய் திறப்பதில்லையே ஏன்  என கேட்ட போது.
பதில் அளித்த சந்திரகுமார் அவர்கள்
 “சமூக கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்க கூடிய அளவுக்கு தமிழரசு கட்சியினுடைய அங்கத்தவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என குறிப்பிட்டார். மேலும் சமூக மாற்றத்திற்காக அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தென் இலங்கையுடன் ஒப்பிடுகின்ற போது நாம் வாழும் வடக்கு – கிழக்கு இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் சமூக வன்முறைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. வட இலங்கையில் கையை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம் , காலை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம்,  பெட்ரோல் குண்டு வீசுவதற்கு ஒரு தொகை பணம் என எங்களுடைய பகுதிகளில் பல வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட – கிழக்கு இலங்கையில் பல இளைஞர்கள் தொழில் வாய்ப்புற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இதுவே சமூக பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் என குறிப்பிட்ட சந்திரகுமார் அவர்கள்,  கிளிநொச்சியின் பளை பிரதேசத்தில் ஒரு வசதி குறைந்த குடும்பம் ஒரு காணியில் வசிக்கிறது. அவுதிரேலியாவில் இருக்கக்கூடிய ஒரு புலம்பெயர்ந்த தமிழர் அந்தக் காணியை அபகரிக்கும் நோக்குடன் ஒரு வன்முறை கும்பலை இறக்கி அந்த ஏழை குடும்பத்தின் குடிசை வீட்டை எரித்ததுடன் – விசுவமடு பகுதியிலிருந்து வன்முறை கும்பலை இறக்கி அவர்களை தாக்கியுள்ளார். பின்பு மேலதிக விசாரணைகளின் போது அந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கக்கூடிய நபரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த ஏழை குடும்பம் தொடர்பில் யாரும் கணக்கெடுக்கவில்லை. இதுபோல வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களால் இங்கு பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஆபத்தான ஒரு நிலை எங்களுடைய வடக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குடும்பப் பகைமை காணிப்பிரச்சனை இவற்றை தீர்ப்பதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த வன்முறை கும்பலை பயன்படுத்துகிறார்கள்.
கிளிநொச்சியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவை தொடர்பு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் தொடர்பு பிரச்சனைகள் இடம்பெறக்கூடிய பகுதி மக்களிடம் தொடர்பு கொண்ட போது அவர் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மட்டுமே வருடத்திற்கு ஒரு தடவை அங்கு பயணம் செய்வதாக மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையிலும் மக்கள் அமைப்பினுடைய தலைவர் என்ற வகையிலும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்..? என தேசம் ஜெயபாலன் வினவிய போது..
இந்தப் பிரச்சனையும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்தாலும் கூட அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களிடமே போலீசார் யார் இது தொடர்பில் தகவல் கொடுத்தவர்கள் என்பதையும் தெரிவித்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் சிறையில் இருந்து வெளியேறியதும் தகவல் கொடுத்தவர்கள் மீது தங்களுடைய வன்முறைத்தனத்தை காட்டுகின்றனர்  இது நிறுத்தப்பட வேண்டும். இதனால்தான் சமூகத்தில் மிகப்பெரிய வன்முறை சீர்கேடுகள் உருவாகி கொண்டிருக்கின்றன.
மிகக் கவலையுடன் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த வன்முறையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான விடயம். கிளிநொச்சி மாவட்டத்தில் மண் கடத்தலாக இருக்கலாம் அல்லது போதைப் பொருள் விற்பனையாக இருக்கலாம் கசிப்பு காச்சுவதாக இருக்கலாம் இவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் முக்கியமான அரசியல் கட்சிகளின் மத்திய உறுப்பினர்களாக இருப்பதனால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. குறிப்பாக தமிழரசு கட்சியினுடைய பல அமைப்பாளர்கள் கிளிநொச்சியில் இடம் பெறக்கூடிய சமூக வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.
இது தொடர்பில் கிளிநொச்சியின் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களிடம் அவருடைய கட்சியின் நேர்மையான உறுப்பினர் ஒருவர் சென்று இவ்வாறான சமூக பிரச்சினைகளின் பின்னணியில் உங்களுடைய கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறிய போது பதில் அளித்த சிவஞானம் ஸ்ரீதரன் “இவர்களைப் பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் காலங்களில் இவர்கள்தான் அதிகமாக செலவழிக்கிறார்கள்.” எனக் கூறியிருக்கிறார். எனவே இந்த அரசியலும் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று பிண்ணிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்வது. தமிழரசு கட்சிக்கும் கிளிநொச்சியில் நடைபெறக்கூடிய வன்முறை சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது  என்பது தொடர்பில் என்னிடம் நிறைவான ஆதாரங்கள் உள்ளன.
திருவையாறு அமைப்பாளர் ஒருவர் இரணைமடு குளத்தின் ஒரு பகுதியில் இருந்து மண்ணை அள்ளிக்கொண்டு சென்றுள்ளார். பின்பு நாங்கள் சுற்றுச்சூழல் அமைப்பிடம் பேசி பிரச்சினைகளை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கிளிநொச்சி செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரக்கூடிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் எங்களுடைய தேசம் திரை மூலமாக ஒரு ஆவணக் காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக நாம் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது மேலே கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கூறியது போல இந்த சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது தொடர்பில் விளங்குவதற்காக அவருடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அவரை தொடர்பு கொண்டோம். இதன் போதும் பல தடவைகள் அவருக்கு அழைப்பை மேற்கொண்டு இறுதியாக ஒரே ஒரு தடவை அவர் எங்களுடன் பேசினார். அப்போது கூட நான் கோயில் திருவிழா ஒன்றில் நிற்கிறேன். பிறகு போல பேசுகிறேன் எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்பும் பல தடவைகள் தேசம் இணையதளத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் எந்த பதிலுமே எங்களுக்கு அளிக்கவில்லை.
இவ்வளவுதான் கிளிநொச்சி மக்கள் அதிக வாக்குகள் கொடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் மக்கள் பற்று.
மக்கள் இது தொடர்பில் விழிப்படைந்து கொள்ள வேண்டும்.  பாராளுமன்றத்தில் மட்டும் தமிழ் தேசியம் , தலைவர் பிரபாகரன்,  வீரவணக்கம் , நினைவஞ்சலி என முழக்கமிட்டு விட்டு தனிப்பட்ட ரீதியில் தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கின்ற ஒரு மனோ நிலையிலேயே ஸ்ரீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகின்ற பல அரசியல் தலைவர்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழ் தேசியம் பேசிப்பேசி தமிழர்கள் கண்டது ஒன்றுமில்லை என்பதை இறுதி.
எனவே மக்கள் தமக்காக இயங்காத ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் அடுத்தடுத்து வரக்கூடிய ஜனநாயக தேர்தல்களில் புறக்கணித்து தங்களுக்காக பணியாற்ற கூடிய தலைவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இந்த தமிழ் சமுதாயம் முன்னோக்கி நகர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கும்.
மேற்குறித்த காணொளியை காண்பதற்கு..;
https://youtu.be/T_3QDT5Tb8g

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்சொட்டு மருந்துகளை பயன்படுத்தாதீர்கள்- சுகாதார அமைச்சு அறிவிப்பு !

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று நோயாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மருந்துகளும் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

48 மணித்தியாலங்களின் பின்னர் கிடைத்த அறிக்கைக்கு அமைய, நோய்த்தொற்றுக்கு காரணமான மருந்து கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நிலையங்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அடிப்படையில், கண் வைத்தியசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சர்ச்சைக்குள்ளான கண் மருந்தை பயன்படுத்துவது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் Prednisolone-ஐ பயன்படுத்திய ஒருவருக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுவரெலியா வைத்தியசாலையிலும் இந்த மருந்து பயன்பாட்டின் பின்னர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.