22

22

யாழ்.நெடுந்தீவில் ஐவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் – கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மனியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சந்தேகநபர் !

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி  ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது, குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

இதே நேரம் படுகொலை  சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் எனவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர் எனவும் அவர் புங்குடுதீவினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

“இராணுவத்தை காட்டிக்கொடுத்து விட்டு ராஜபக்சக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் அங்கத்தவர்களை பாதுகாத்தனர்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் பெறும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், 43 ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பிரதான தேர்தல் பிரசாரமாக்கி ராஜபக்ஷர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம், கருத்தடை உள்ளிட்ட பல விடயங்கள் பொதுஜன பெரமுனவின் மேடை பேச்சுகளாக காணப்பட்டன.தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டு மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள்,கத்தோலிக்கர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய பாதுகாவலனாக தெரிவு செய்தார்கள்.

இறுதியில் ஏமாற்றமடைந்தார்கள்.ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கத்துக்காக இடம்பெற்றதா..? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

1.யங்கரவாதி சஹ்ரான் உட்பட அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களின் உயிரை ஏன் தியாகம் செய்தார்கள்.

பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராக தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இல்லாவிடின் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றது.

21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட சஹ்ரானின் தரப்பினர் நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பலிவாங்குவதற்காகவே தேவஸ்தானங்களில் தாக்குதலை நடத்தினோம் என குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2.பயங்கரவாதி சஹ்ரான் யார்? குண்டுத்தாக்குதல் ஒரு குழுவின் நோக்கமா அல்லது சர்வதேச நோக்கமா?

2010 ஆம் ஆண்டு பூனே வெதுப்பக வெடிப்பு சம்பவம்,2016 ஆம் ஆண்டு டாகா கெபே தாக்குதல் ஆகியவற்றுக்கும் 2019 ஏப்ரல் 21 சங்ரில்லா ஹோட்டல் குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் இடையில் நெருங்கி தொடர்பு காணப்படுகிறது.வலய மட்டத்தில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் இலங்கையில் தேசிய பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தவில்லையா? தென்னிந்தியாவில் இருந்து செயற்பட்ட அபுஹிந்த் மௌலவி யார்?அடிப்படைவாத பிரசாரகரா?இல்லாவிடின் அடிப்படைவாத தரப்பினரது ஆதரவாளரா ?

பயங்கரவாதி சஹ்ரானின் குண்டுத்தாக்குதலை வெளிநாட்டு புலனாய்வு பிரிவு எவ்வாறு முன்கூட்டியே அறிந்துக் கொண்டது ? இறந்து விட்டதாக குறிப்பிடப்படும் சாராவுக்கும்,அபுஹிந்த் மௌலவிக்கும் இடையிலான தொடர்பு என்ன?

3.இலங்கை புலனாய்வு பிரிவு தகவல் அறிந்தும் ஏன் செயற்படவில்லை?

புலனாய்வு பிரிவுக்கும், பொது பாதுகாப்பு தரப்புக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாடற்ற தன்மை (பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் (ஏப்ரல் 22 )இடம்பெற்ற திறந்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

அரசாங்கம் குறிப்பாக இராணுவ புலனாய்வு பிரிவு தௌஹீத் ஜமாதே அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அவர்களால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கை காணப்பட்டது.புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பற்ற தன்மையினால் பயங்கரவாதி சஹ்ரான் தனது நோக்கத்தை சரியாக செயற்படுத்திக் கொண்டான்.

4.ராஜபக்ஷர்கள் செயற்படுத்திய முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

பிரபாகரனுக்கு பின்னர் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதன்,கிழக்கு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் ராம்,நகுலன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் 12000 போராளிகளுடன் அவர்களையும் விடுதலை செய்தமை.

மறுபுறம் பிள்ளையானை ராஜபக்ஷர்கள் தமது அரசியல் தேவைகளுக்காக இணைத்துக் கொண்டமை,  யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கி கணக்கு,கப்பல்,தங்க ஆபரணங்கள்,உள்ளிட்ட சொத்துக்களுக்கு நேர்ந்ததை பத்மநாதனும் குறிப்பிடவில்லை,அரசாங்கமும் குறிப்பிடவில்லை.அரசாங்கம் டீல் அரசியல் செய்யாமல் முறையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர போராடிய படையினர் யுத்த குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தரப்பினர்கள் ராஜபக்ஷர்களினால் பாதுகாக்கப்பட்டார்கள். ராஜபக்ஷர்களின் முட்டாள்தனமாக பாதுகாப்பு கொள்கை தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது.

நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்த நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை. அரசியல் அழுத்தம் பாதுகாப்பு கட்டமைப்பை ஆதிக்கம் செலுத்தும் வரை ஏப்ரல் 21 குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடையாது.காலமே சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

எனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் – உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என பெற்றோர் கோரிக்கை !

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு  என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் தொட்பில் பெற்றோர் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் யாழ். குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன், 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.

அதேவேளை  தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன்  நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை  காவல் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.

சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது.

யாழில் பரபரப்பை ஏற்ப்படுத்திய இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள  செய்தி! - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் விஜிதாவின் பெற்றோர் கூறுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் விஜிதாவின் தந்தை மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 16ஆம் திகதி தன்னுடைய உந்துருளியில் இருந்து பெட்ரோலை எடுத்து கொண்டு தனது தோழி ஒருவர் பெட்ரோல் இன்றி வீதியில் இடைநடுவில் நிற்பதாகவும், அவருக்கு பெட்ரோலை வழங்கி விட்டு வருவதாகவும் கூறியே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் விஜித்தா.

இரவு 1 மணிவரை வீடு திரும்பாத விஜித்தாவிற்கு பலமுறை தொலைபேசி அழைப்பை எடுத்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் இரவு 1.30 மணியளவில் சுகிர்தனின் மகனும் மற்றுமொரு நபரும் வீட்டிற்கு வந்து இவ்வாறு விஜிதா தீ மூட்டிகொண்ட நிலையில், உயிருடன் அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று எடுத்துகொண்டு மகளை வைத்தியசாலையில் பார்க்க சென்றுள்ளார்.

“மகள் 10 மணிக்கு வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் சென்றாள். எனவே 3 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மகள் 10.30க்கு அங்கு சென்றிருப்பாள். அதற்கு பிறகு அவள் தீமுட்டி கொண்டுள்ளாள். ஆனால் எங்களுக்கு அவர் எதுவும் சொல்லவில்லை. எங்களுடைய தொலைபேசி இலக்கம் அவரிடம் உள்ளது.

அதோடு அவள் தன்னுடன் (சுகிர்தன்) எதுவும் கதைக்காமல் இப்படி செய்து கொண்டதாக தெரிவித்திருக்கின்றார்.

அவள் அப்படி செய்திருக்க மாட்டாள் என்கிறார் விஜிதாவின் தாயார். எனவே தனது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என மன்றாடுகின்றனர் விஜிதாவின் பெற்றோர்.

மேலும், விஜிதா தற்கொலை செய்தாரா..? அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா..? என்பது உறுதியாகாத நிலையில் குறித்த தவிசாளர் காவல் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காவல் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ள முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா !

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா திங்கட்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன் ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், முன்னாள் சட்டமா அதிபர், வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன் ஆஜராக முடியாது என பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, திங்கட்கிழமை பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ஆட்சிக்கவிழ்ப்பு இருப்பதாக அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார தொடக்கத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தனது அலுவலகத்தை விட்டு வெளியேறிய தினத்தன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்தை குறிப்பிட்டிருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையை இது பாதிக்கும் என்பதால், அந்தக் கோரிக்கை தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியுமா..? – நீதியமைச்சர் தெரிவித்துள்ள விடயம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்ய பொதுமக்கள் பிரதிநிதிகள் அல்லது ஆர்வமுள்ள எந்தவொரு தரப்பினருக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம் மீதான விவாதத்தின் போது திருத்தங்களையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.

அரசாங்கம் சட்டமூலத்தை பின்கதவால் கொண்டு வரவில்லை எனவும் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் திறந்திருப்பதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தை தூண்டுவதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் ஈடுபட்டு அனைத்து இலங்கையர்களையும் பாதுகாக்க பொருத்தமான சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைவில் உள்ள சில விதிகள் குறித்து உலக மற்றும் உள்ளூர் சமூகம் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதாக நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிர்வாகம் நெகிழ்வானது என்றும், சட்டமூலத்தை மேலும் ஆலோசித்த பின்னர் அவற்றைத் திருத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வட மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், இன்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

இலங்கையின் அரசியல்வாதிகளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகிறார்கள் என்று அவர் ஆங்கில ஊடகம்  ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை ஆதரிக்க மறுத்த தம்மை பதவி நீக்கம் செய்ய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அழுத்தம் கொடுத்து வருகிறார். எனினும், தன்னை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் தேவைப்படும் 113 பெரும்பான்மையை பெற முடியாது என்று ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார்.

மின்சாரத்தின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. எனினும் தேவை குறைவது நஷ்டத்தில் இருக்கும் இலங்கைக்கு உதவாது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு மூலம் இழப்பை ஈடுகட்ட மின்சார சபை முயற்சித்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு புரியாத அடிப்படை விஷயங்கள் இவையாகும். அவர்களுக்கு பொருளாதாரம் புரியவில்லை. அவர்களுக்கு அரசியல் மட்டுமே தெரியும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இன்னுமொரு சீர்திருத்தம் சாத்தியம் என்றும் அது மற்றொரு கட்டண உயர்வாகக் கூட இருக்கலாம் என்று மின்சார சபை கூறியுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பொது அறிவு இல்லை என்றும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க சேவைகளை பெற முடியும் – அனுராதா விஜேகோன்

எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய 2 மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, அவர் அல்லது அவள் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் தேசிய மொழிகளாகக் கருதப்படுவதாகவும், ஒரு நாடு என்ற வகையில் அரச துறையில் மட்டுமன்றி வேறு எந்தப் பணியிலும் சிங்களம் மற்றும் தமிழ் இரண்டும் பிரதான மொழிகளாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் அரச கரும மொழிப்; பாடத்தை கையாள்வதற்கான தனியான பிரிவு ஒன்று இருப்பதாகவும், நாட்டின் அரச கரும மொழிக் கொள்கையை அரசியலமைப்பில் உள்ளடக்கி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசியலமைப்பிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் போதை ஊசிகளுடன் மூவர் கைது !

யாழ்ப்பாணம், நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நெடுந்தீவு படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் !

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்யவுள்ளனரென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் இன்று (22) அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஒரு பெண் ஆபத்தான நிலையில் யாழ் போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.