24

24

ஈஸ்டர் தாக்குதல் – நியாயம் வழங்க கோரி இத்தாலியில் போராட்டம் !

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க கோரி இத்தாலி நாபோலியில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

Demonstrations demand justice for victims of Easter attacks i

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 இலங்கையர்கள் கலந்துக்கொண்டதுடன் இத்தாலிய பிரஜைகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இத்தாலியில் வசிக்கும் அருட் தந்தை டிரோன் மிஹிந்துகுலசூரிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி ஜெப ஆராதனையையும் நடத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் ஆராதயைில் கலந்துக்கொண்ட நிலையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.

வைத்தியர்களை அடுத்து நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு !

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சுமார் எழுநூறு தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்களில் ஐந்நூற்று ஐம்பது தாதியர்கள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் விடுமுறை எடுத்து ஐந்து வருட காலத்திற்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அத்துடன், தற்போதைய தரவு அறிக்கைகளின்படி சுமார் நூற்றைம்பது தாதியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, தாதியர் சேவையில் தற்போது சுமார் இரண்டாயிரத்து நானூறு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சாமிக்க கமகே தெரிவித்துள்ளார்.

இதே நேரம் பொருளாதார நெருக்கடியினை அடுத்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தோண்டத்தோண்ட பிணங்கள் – பாதிரியாரின் ஆலோசனையால் சொர்க்கம் செல்ல உயிரை விட்ட அப்பாவி மக்கள் !

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர். இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த குழுவினரிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர். அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து உள்ளனர். இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து உள்ளனர். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்து விட்டார். இதுவரை இதுபோன்று 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி,  ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

மந்திரம் சரியாக உச்சரிக்கவில்லை என்பதற்காக கொடூரமாக தாக்கப்பட்ட எட்டுவயது பௌத்த துறவி !

துறவறம் பூண்டு 45 நாட்களேயான எட்டுவயது பௌத்த துறவி ஒருவர் மந்திரத்தினை சரியாக உச்சரிக்கத் தவறியமையால்  மூன்று துறவிகளால் தொடர்ந்து கடுமையான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ள எட்டுவயதாக துறவி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துறவி பௌத்த பூஜையின் போது சொல்லி கொடுக்கும் மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியுள்ளார்.

இதனால் சினமுற்ற மூன்று துறவிகளும் இணைந்து விகாராதிபதி இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுநீரை போத்தலில் கொண்டுவந்து அருந்தச் செய்தும், தேசிக்காயினை தரையில் பிழிந்து நாக்கினால் நக்குமாறும், தும்பு தடி முறியும் வரை தாக்கி கன்னத்தில் அறைந்தும்,  மான் கொம்பு மற்றும் கத்தரிகோலினால் உடம்பில் குத்தியும் சித்திர வதை செய்துள்ளனர்.

இதனால் பற்கள் உடைந்தும், உதடுகள்  காதுகள் கிழிந்தும், உடலில் பல இடங்களிலும் குறித்து 8 வயதான பௌத்த துறவி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுபின்னர் மேலதிக சிகிச்சைக்காக 22 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக  காயமுற்ற துறவியின் தந்தை மற்றும் பெரிய தந்தை ஆகியோர் குறிப்பிட்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 8,231 வர்த்தகர்களைக் கைது !

பண்டிகைக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்பனை செய்த 8,231 வர்த்தகர்களைக் கைது செய்வதில் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெற்றி பெற்றுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சில வர்த்தகர்கள் காலாவதியான கேக், பிஸ்கட் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்துள்ளனர். முட்டை வியாபாரிகள் உட்பட ஏனைய விற்பனையாளர்களை கைது செய்ய நாடு முழுவதும் 5,200 விசேட புலனாய்வு அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக நாடு முழுவதும் 809 முட்டை விற்பனையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 708 விற்பனையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 468 முட்டை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைமை விசாரணை அதிகாரி எச்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்..

யானையை கொடுமைப்படுத்தும் இலங்கை – மீளப்பெற தாய்லாந்து அரசு முயற்சி !

2001 ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மூன்று யானைகளில் ஒன்றான சக் சுரினை, மீளப் பெறுவதற்கான வழிகளை தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த யானை, அதனை கையாளுபவர்களால் தவறாக நடத்தப்பட்டதாக விலங்குகள் உரிமைகள் அமைப்பினால் கடந்த ஆண்டு அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக் சுரின் நிலைமையை அறிந்திருந்தாலும், யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வது, அதன் அளவு மற்றும் அதனுடைய காயங்களின் தன்மை காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளன.

தாய்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா, சாக் சுரினை தமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு C-130 போக்குவரத்து விமானத்தைப் பயன்படுத்துவதே ஆரம்பத் திட்டம் என்று விளக்கியுள்ளார் இருப்பினும், ஆயுதங்கள் மற்றும் தாங்கிகள் போன்ற இராணுவ தளவாடங்களை கொண்டு செல்வதற்காக முதலில் வடிவமைக்கப்பட்ட விமானத்தி ல், யானையை அடைக்க பொருந்தாது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன் இந்த யோசனை கைவிடப்பட்டது. இதனையடுத்து, சக் சுரினை மீட்டெடுக்க ஒரு கப்பலை அனுப்பும் திட்டத்தை தாய்லாந்து அரசாங்கம் முன்மொழிந்தது. எனினும் காயப்பட்ட யானைக்கு இரண்டு வார பயணம் மிக நீண்டதாக இருக்கும் என்பதால் இதுவும் பொருத்தமற்றதாகக் கருதப்பட்டது. சக் சுரின் நாடு திரும்புவதற்கு பொருத்தமான தீர்வைக் காண அமைச்சு தற்போது வெளிவிவகார அமைச்சுடன் ஒத்துழைத்து வருவதாக வரவுட் கூறினார்.

ஆம் ஆண்டு தாய்லாந்தினால் இலங்கைக்கு குறித்த யானை பரிசளிக்கப்பட்டதிலிருந்து அதன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதன் பின்னர், சக் சுரின் பல இடங்களுக்கு கை மாறியுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சமீப காலம் வரை, குறித்த யானை அளுத்கம கந்தே விகாரையில் வசித்து வந்தது. இலங்கையின் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான Rally for Animal Rights and Environment (ரேர்) கூற்றுப்படி, விகாரையில் யானையின் உடல் சங்கிலியால் கட்டுப்படுத்தப்பட்டதால், அதன் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு இறுதியில், சக் சுரினை அவசர மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லுமாறு அந்நாட்டு அரசாங்கத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியது.

யாழ்ப்பாணத்தில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் பலாலி அன்ரனி புரம் பகுதியில் 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு வயது 21 எனவும் அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை மர்மமான படகு ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் இந்த கஞ்சா கடற்படையின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 80 இலட்சத்துக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த கஞ்சா கடத்தலுடன் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளார் எனவும், குறித்த இளைஞனுக்கு இரண்டு பியர்களை வாங்கிக் கொடுத்துவிட்டு பிரதான கஞ்சா கடத்தல் நபர் இந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்பனை செய்தவர் கைது !

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரெழுவைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டில் சந்தேக நபரின் உறவினர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு !

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் வழக்கின் தீர்ப்புகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வெடுக்குநாறி மலையில் ஆதி லிங்கேஸ்வரர் சிலைகளை உடைத்தது சம்பந்தமான வழக்கு நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் பொலிஸார் இனந்தெரியாத நபர்களினால் வணக்கத்திற்குரிய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை. யாரென்று தெரியாது தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக சொல்கின்றனர்.

கடந்த தினத்தில் மேலதிகமாக அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதற்கமைவாக இன்று குறித்த இடத்தில் நீண்டகாலமாக பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான புகைப்பட ஆதாரங்களை அவர்களே சமர்ப்பித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி இது தொல்லியலுக்குரிய பிரதேசமென்றும் இன்று நாங்கள் செய்த விண்ணப்பத்திற்கு பதில் அளிப்பதற்கு அரச சட்டத்தரணியும் உதவியை நாடியுள்ளதாகவும் அதற்காக பிறிதொரு தினத்தையும் கேட்டிருந்தார்கள்.

எமது அரசியலமைப்பின் 10 ஆம் 14:1 உ உறுப்புரைகளின் கீழ் மத வழிபாடு என்பது எவராலும் மட்டுப்படுத்த முடியாத உரிமைகள். மரத்தையோ கல்லையோ வழிபடலாம் அதற்கு பூரண உரித்துள்ளது.

அந்த மரம் வனப்பிரதேசத்தில் இருப்பதால் வணங்க முடியாது என எவரும் கூறமுடியாது. ஒரு கல் தொல்லியலுக்குரியது என்பதற்காக அதனை வணங்க முடியாது என எவரும் கூற முடியாது.

அவ்வாறு சொல்வதாக இருந்தால் அனுராதபுரத்திலும்  பொலன்நறுவையிலும் சென்று எவரும் வழிபட முடியாது.

இந்த விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நீதவான் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளார்.

அதாவது வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் சொல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடைக்கப்பட்ட சிலைகளை மீள கட்டுவது சம்பந்தமாக தொல்லியல் பிரதேசம் என்ற காரணத்தினாலே மீள் அமைப்பதும் தொல்லியல் என்ற காரணத்தினாலும் அரச சட்டத்தரணியும் வந்த பிறகு ஒரு விண்ணப்பத்தை செய்வதாக சொல்லியிருக்கின்றேன்.“ எனத் தெரிவித்துள்ளார்.

யாழில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையின் எதிரொலியே நெடுந்தீவு படுகொலைகள் !

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை 2 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையில் மீட்கப்பட்டது. நெடுந்தீவு – மாவலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நேற்றுமுன்தினம் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

அதன்போது, வயோதிபப் பெண்ணொருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 51 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை குற்றவாளி மனோநிலை பாதிக்கப்பட்டவர் என பல ஊடகங்களிலும் செய்திகள் பரவலாக பரப்பப்பட்டு வரும் நிலையில் அதற்கான வாயப்புக்கள் இல்லை எனவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மிகத்தெளிவான திட்டமிடலுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த படுகொலைகள் குற்றவாளியின் போதைப்பொருளுக்கான ஆசையை நோக்கியதே தவிர மற்றும்படி இந்த ஊடகங்கள் குறிப்பிடுவது போல சுயநினைவு அற்ற நிலையில் நடந்தவை என கொள்ளமுடியாது.  போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குறித்த ரகு எனும் குற்றவாளி போதைப்பொருள் தேவைக்காகவே இந்த கொலைகளை செய்துள்ளார் என சமூக வலைத்தளங்களில் ஆரம்பத்தில் பேசப்பட்டாலும் கூட  பின்பு அவர் மனஆநாயாளி என்ற வகையில் இந்த செய்தியை ஊடகங்கள் கையாள ஆரம்பித்துள்ளன.

இந்தப்புள்ளியில் இருந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நகர்வுகளை யாழ்ப்பாண சமூகமும் – காவல்துறையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. போதைப்பாருள் பாவனையை இலகுவாக கடந்து செல்ல முடியாது. அது எந்தளவு ஆபத்தான நிலையில் வளர்ந்துள்ளது என்பதையே இந்த கொலைகள் எமக்கு காட்டியுள்ளன.