28

28

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாதம் ஒன்றுக்கான செலுவுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாய் செலவிடப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் இந்த செலவு செய்யப்படுவதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்திற்கு அமைவாக இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது.

செய்தி நிறுவனத்தால் ஜனாதிபதி செயலகத்திடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலுக்கு அமைய, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை தகவல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9,91,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏனைய செலவுகளுக்கு 3,38,387.60 ரூபாய் செலவிட்டுள்ளது.

கோட்டாபாய ராஜபக்ச தற்போது பயன்படுத்துகின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு FactSeeker கோரிக்கை விடுந்திருந்தநிலையில், அதற்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம், தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதேவேளை, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர கொடுப்பனவுகளை தனித்தனியாக வழங்க முடியாது எனவும், இந்த செலவுகள் முன்னாள் அதிபரின் ஏனைய தொடர் செலவுகளை உள்ளடக்கிய செலவின அறிக்கையில் ஒரே செலவினத்தின் கீழ் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

16 வயதுடைய பௌத்த பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 58 வயது தேரர் !

அரநாயக்க பிரதேசததில் உள்ள விஹாரை ஒன்றைச் சேர்ந்த 16 வயதுடைய  தேரர் ஒருவரை அதே விகாரையில் வசிக்கும் 58 வயதான தேரர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய புதிய பிக்குவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் விகாரையைச் சேர்ந்த  மற்றுமொரு பிக்குவை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த புதிய பிக்குவை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

யாழில் பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை – 23 வயது இளைஞன் கைது !

மல்லாக்கத்தில் பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பட்டபகலில் மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்ட மிகப்பெரிய விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

“6 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்” – பிரபாத் ஜயசூரிய புதிய சாதனை !

குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பிரபாத் ஜயசூரிய இன்று தனதாக்கியுள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று  வரும் போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்தபோது  தனது 50 ஆவது விக்கெட்டினை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் இவர் புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த தோமஸ் டர்னர் 06 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கியிருந்தார்.

எனினும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் அடித்துப் படுகொலை!

முல்லைத்தீவு – சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, கொள்ளையர்களால் பொல்லால் தலையில் தாக்கப்பட்ட 63 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு பொலிஸார், தடயவியல் பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேகநபர்களின் தடயங்கள் தொடர்பில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டோர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பிற்போடப்பட்டது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்பவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதாகவும் பலரதும் கருத்துகளைப் பெற்று, தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.