May

May

மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேர் கைது !

மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

நேற்று (20) பிற்பகல் பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிறுமிகள், ஒரு ஆண், ஒரு இளம் பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் மது அருந்திவிட்டு அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதன்படி செயற்பட்ட பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஸ்தலத்திற்குச் சென்றபோது காரில் ஏறிச் செல்வதற்கு தயாரானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் 6 பேரும் மது அருந்தியதால் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தாயின் முன்பு வைத்து மாற்றுத்திறனாளியான மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு செய்த பொலிஸ் அதிகாரி !

தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திறனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்வதற்கு தேடப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர், வாழைத்தோட்ட காவல்துறையில் இணைக்கப்பட்டு, கொழும்பு பிரதிப் காவல்துறை மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.

இந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக, இந்த யுவதியுடன் அவருடைய தாய், இரண்டு வருடங்களாக அந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு சொந்தமான 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், தாயையும் மகளையும் அறை​யொன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குவைத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த யுவதியிடம் காவல்துறை உத்தியோகஸ்தர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அக்கோரிக்கையை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என யுவதியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அந்த யுவதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர், தாயின் முன்னிலையில் யுவதியை நிர்வாணமாக்கி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இதுதொடர்பில், கொஸ்கம பொலிஸ் நிலையத்தில், வௌ்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த யுவதி முறைப்பாடு செய்வதற்கு முன்னர், கொஸ்கம காவல்துறை நிலையத்துக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்ர், தன்னுடைய 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திறனாளியான 26 வயதான யுவதியை, வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கு எதிராக போராட்டம் – நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு !

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த நிலையில், அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் ஊழல் செய்பவர்களை ஆளுநராக்க வேண்டாம் என்ற தொனிப்பொருளினாலான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து, அவர் நாளை பதவியேற்கும் போதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமையால், யாழ்ப்பாணப் காவல்துறையினரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஊடகவியலாளர் சுவர்ணலிங்கம் வர்ணன், சிவசேனா அமைப்பின் சிறீந்திரன், இலங்கை சைவ ஆதின நிலையத்தின் தலைவர் விபுலானந்தன் சுவாமி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதாவது, ஏ – 9 வீதியை மறித்து போராட்டம் நடத்தக் கூடாது, ஆளுநர் அலுவலகச் சூழலில் பரப்புரை முன்னெடுக்கக் கூடாது, ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, ஆளுநரின் பதவியேற்புக்கு வரும் எந்தவொரு அதிகாரிக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததால் தேசத்தின் சமாதானம் உறுதியானது – ஜெனரல் விக்கும் லியனகே

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாடு முழுவதிலும் உள்ள மக்கள் சொல்லொணா சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்தார்கள் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பெருமளவில் பங்களித்தார்கள் என்றும் இதனை இலங்கையர்கள் தொடர்ந்தும் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்தல், பேரிடர் மற்றும் கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது, தங்கள் சொந்த உயிருக்கு ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், இராணுவம், மீட்பு மற்றும் உதவிக்கு வந்தது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

பராக் ஒபாமா உள்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை !

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உள்பட 500 பேர் ரஷியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது,

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகத்தால் தொடர்ந்து விதிக்கப்பட்ட ரஷியாவுக்கு எதிரான தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 500 அமெரிக்கர்களுக்கு ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிரான ஒரு விரோதமான நடவடிக்கைக்கு கூட பதிலளிக்கப்படாமல் விடாது என்பதை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவு !

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கு வழிவகுத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள அமைப்பில் தரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

புதிய பட்டதாரிகளின் ஆளுமை, ஆர்வம், அறிவு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது  முக்கியத்துவமுடையதாகும்.  அனைத்து துறைகளிலும் சரியான நேரத்தில் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.

Prednisolone கண் சொட்டு மருந்து கறுப்புப் பட்டியலில் !

ஒவ்வாமை ஏற்பட்டமையினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தை,  மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த மருந்துகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துக்கு பதிலாக மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கண் சொட்டு மருந்து பயன்படுத்தபடுவதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தியதன் பின்னர் நோயாளர்கள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டமையினால், அது உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு !

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்துச்சென்ற ஆசிரியர் !

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு – ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றிவரும் ஆசிரியரே இவ்வாறு சிக்கியுள்ளார்.

அவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த  தனியார்  வகுப்பில், கிரான் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்தார்.

குறித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து,  அவரை பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றபோது கையும் மெய்யுமாக அவர் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களின் மீது சந்தேகமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள், விடுதி வரை பின்தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த இலங்கை பெண் – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை !

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் உடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் உடலம் நேற்றிரவு இலங்கை கொண்டு வரப்பட்ட நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, குறித்த பெண் உயரமான பகுதியில் இருந்து விழுந்ததனால், தலை மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், இதனாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொடுவ பகுதியைச் சேர்ந்த நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், இச்சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த பணியகத்தின் தலைவர் ஏ.ஏ.எம்.ஹில்மி அஷீஸ் தெரிவித்துள்ளார்.