May

May

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது கைது !

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார். ‘என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்’ என்றும் மசாரி கூறி உள்ளார். ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை  விற்பனை செய்தவர் கைது !

பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை  விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில்  ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் காணப்பட்ட  கஞ்சா கலந்த 25 போதைப்பொருள், 202 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும்  20,500 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின்  விசேட அதிரடிப்படை பிரிவு (கொழும்பு வலயம்) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு   மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்க்கைதிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் – அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு நீதிமன்றம் அழைப்பு !

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து தமிழ்க் கைதி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி அநுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அங்கிருந்த தமிழக் கைதி ஒருவக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதே, பிரதான நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் ஓரினச் சேர்க்கை குற்றமா..? – உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார்.

அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த திருத்தம் தண்டனைச் சட்டம் தொடர்பான பாராளுமன்றத்தின் எதிர்பார்ப்புகளுக்கு முரணானது என்றும், அதன் மூலம் அரசியலமைப்பின் விதிகள் கடுமையாக மீறப்படுவதாகவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ , இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவு செய்த உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு ஏற்புடையதா அல்லது முரணானதா என்ற தமது முடிவை  சபாநாயகருக்கு அறிவிப்பதாக கூறியது.

இந்நிலையிலேயே தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு  அறிவித்தார்.

“கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும் அபாயம்.” – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

“கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு மாணவர்களும் பெற்றோர்களும் நகர்ப்புறம்நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகும்.” என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலையின் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களும் அதற்கு மேலும் மாணவர்களை அனுமதித்தல் என்னும் கல்வி அமைச்சின் முடிவானது முட்டாள்தனமானது.

இதனால் கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் நகர்ப்புறம்நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகும். கிராமங்களின் நிலவளம், தொழில்வளம், சமய சமூக கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முற்றாகக் கைவிடப்படும்.

மாணவர்களின் நடத்தைக் கோலங்கள் மாற்றமடையும். வகுப்பறை அளவுகள் போதாமையால் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து மாணவர்களைக் கண்காணித்து கற்பிக்கும் சூழ்நிலை பாதிக்கப்படும்.  ஆசிரியத் தொழிலுக்கு இனிமேல் எவரும் உள்வாங்க முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறான பாதகமான சூழ்நிலைகள் பல இருந்தும் அரசாங்கம் இத்தகைய முடிவினை எவருடனும் கலந்தாலோசிக்காமல் எடுத்திருப்பது முட்டாள்தனமான செயற்பாடு. உலக நாடுகளிடம் கடனைப் பெறுகிறோம் என்பதற்காக உலநாடுகளில் உள்ள கல்விக் கொள்கைகளையும் வகுப்பறை நடைமுறைகளையும் புறந்தள்ளி இதனை நடைமுறைப்படுத்துவது ஆபத்தானது.

கல்வியால் உயர்ந்துள்ள பின்லாந்து நாட்டில் ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர் தொகை 600 ஐ விட அதிகரிக்க முடியாது.

அதிகபட்சம் 600 பேர் மாத்திரமே ஒரு பாடசாலையில் கல்வி கற்கலாம். வகுப்பறையொன்றில் அதிகபட்ச மாணவர் தொகை 26 ஆகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும், பெரும்பாலான பாடசாலைகளின் வகுப்பறைகளில் சாராசரி மாணவர் தொகை 20 ஆகவே காணப்படுகின்றது.

இலங்கையில் இப்போதுள்ள சூழ்நிலையில் இருபது மாணவர்களை வைத்துக்கொண்டே ஆசிரியர்கள் படும் அவஸ்தை சொல்லில் வடிக்க முடியாதவை.

இந்த லட்சணத்தில் நாற்பது மாணவர்களை பதினைந்திற்கு இருபது அல்லது அதற்கும் குறைவான அளவுகளைக் கொண்ட வகுப்பறைகளுக்குள்ளே ஆறு மணிநேரம் அடைத்து வைத்து கல்வி புகட்டுவதால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் முதலில் அறியவேண்டும்.

“ஆயிரம் பாடசாலைத்திட்டம்” அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்பதெல்லாம் எதற்கு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கேள்விகளாக முன்வைத்துள்ளது.

இதுபோன்ற சுற்றறிக்கைகளையும், தாபன விதிக்கோவைகளையும் நியமன நடைமுறைகளையும் மீறிய செயற்பாடுகள் கல்விப்புலத்தில் நிறையவே நடைபெறுக்கின்றன.

ஒரு மாவட்ட அரசாங்க அதிபரின் கணவர் என்பதற்காக அவர் ஓய்வுபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புதிய   பாடசாலை ஒன்றிற்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வடக்கில் நடந்துள்ள புதுமை. அதிபராகப் பொறுப்பேற்பவர் குறைந்தது மூன்று ஆண்டுகள் சேவைக்காலம் உள்ளவராக இருக்க வேண்டும் என சுற்றறிக்கை கூறுகின்றது. அப்பாடசாலை உள்ள கல்வி வலயத்தில் பல பாடசாலைகளுக்கு அதிபர்களே இல்லை. குறித்த பாடசாலைக்கு நியமிக்கக்கூடிய பல அதிபர்கள் இருந்தும் அரசாங்க அதிபரின் கணவர் என்பதற்காக அவரை அதிபராக நியமித்திருப்பது நிர்வாக சேவையிலும், கல்வி நிர்வாக சேவையிலும் இருப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக மதிப்பிடும் செயற்பாடாக இது பார்க்கப்படுகின்றது.

இப்படி உயர்நிலையில் இருப்பவர்கள் தவறாக நடந்தால் மற்றவர்களை எவ்வாறு வழிப்படுத்த முடியும் என்ற வினாவையும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

இத்தகைய செய்திகளை ஊடகங்கள் வாயிலாக ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் தெரிவிக்கவேண்டிய கடமை எமக்கு உள்ளது. இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவை ஒவ்வொன்றாக இனி வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவோம் என சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐ.நா கவலை !

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களில் இந்த சட்டமூலங்களின் சாத்தியமான தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பிய குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சட்டம் கருத்து சுதந்திரம், கருத்து, சங்கம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் உரிமைகளை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாதிக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாதம் பற்றிய வரையறைகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க இதனை உறுதி செயய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தன்னிச்சையான சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், தடை செய்வதற்கும், சித்திரவதை மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து புனர்வாழ்வு சட்டமூலத்தின் திருத்தங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சில விடயங்களை கடைப்பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை புனர்வாழ்வு சட்டமூலத்தின் பல விதிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கடமைகளுடன் நேரடியாக முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் நுழைந்த 41 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா !

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும், இன்று (செவ்வாக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து, கைது செய்யப்பட்ட இவர்கள், நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தட்டமையும் குறிப்பிடத்தக்கது,.

மே – 9 நினைவு கூரத்தடை – நீதிமன்றம் உத்தரவு!

கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரிமாளிகை ஆகியவற்றிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2022 மே 9 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டுமெனக் கோரி, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.

 

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்க ஆதரவு குழுவினர் தாக்குதல் நடத்திய பின்னர், ஆளுங் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்கள், அரச எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், நாடு முழுவதும் வன்முறை பரவியது.

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் தஞ்சம் – பாராளுமன்றத்தில் அமைச்சர் அலி சப்ரி !

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , 92,435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ அல்லது வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதி முகாம்கள் இயங்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அகதி முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

சுமார் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 34,000 இலங்கையர்கள் இந்தியாவில் வேறு இடங்களில் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய நபர்கள் காவல் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் நியமிக்கப்பட்ட அகதி முகாம்களுக்கு வெளியே உள்ள வளாகங்களில் தானாக முன்வந்து வாழ்கின்றனர்.

அத்துடன் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு திரும்ப விரும்பும் நபர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, ​​வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான தமது பரிந்துரைகள் மற்றும் தேவைகளை சமர்ப்பிக்க முடியும்.

தமிழகத்தில் பல தசாப்தங்களாக எஞ்சியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதற்கு தற்போதைய நிர்வாகம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படத் தயாராக உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதியின் பின்புறம் இருந்து மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம் !

களுத்துறை தெற்கு – காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவியின் உடல் உறுப்புகள் அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில், “இது மிகவும் பாரதூரமான நிலை, சட்ட நடைமுறையாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது.

இந்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குறிப்பாக இளம் பெண்களுடன் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம்.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், காவல்துறை அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் எனவும் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.