May

May

துருக்கியில் தொடர்ந்தும் எர்டோகன் ஆட்சி !

துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். அதுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக கடந்த 15-ந் திகதி அங்கு தேர்தல் நடந்தது. இதில் எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். இரு தரப்பினரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நேற்று காலை முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் வாக்களித்தனர். அங்கு நீண்ட கால ஆட்சி புரிந்தவர் என்ற நிலையில் எர்டோகன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறாரா? அல்லது ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார், அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.

வட மாகாணத்தில் உணவுப்பாதுகாப்பின்மை உயர் மட்டத்தில் – உணவு விவசாய ஸ்தாபனம்

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின்  அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான  மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர்  என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களி;ல் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உணவுநுகர்வில்  ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி , நுவரேலியா , மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே  அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நீர் குழாய்கள் தீவைத்த 06 பாடசாலை மாணவர்கள் கைது !

கேகாலை, அரநாயக்கவில் அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நீர்த்திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய் தீப்பிடித்து எரிந்திருந்தது.

இதன்படி, நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் 06 பாடசாலை மாணவர்களிடம் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 06 பாடசாலை மாணவர்களும் அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும், இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்கள் !

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்காக நடமாடும் வாக்குப்பதிவு நிலையங்களை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தேவையான தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு விசேட வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் வாக்களிப்பதைக் கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் வாக்காளர் செல்வாக்கு இல்லாமல் வாக்களிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய சேவை ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயங்களுக்குள் பணிபுரிபவர்கள் மற்றும் விசேட வசதிகள் தேவைப்படுபவர்களுக்கும் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் எனவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முன்மொழிவு சட்ட வரைவு ஆசிரியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தகைய விதிமுறைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நம்புவதாகவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

“தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்தி சிங்கள குடியேற்றங்களை நிறுவி புதிய பிரதேச செயலகங்கள்.” – சாள்ஸ் நிர்மலநாதன்

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான செயற்பாடு தான் இந்த மகாவலியின் செயல்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,,

மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் 1988  ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டு  யுத்தத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது முழுமையாக அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவிவெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு கிழக்கை பிரிக்கின்ற நோக்கத்துக்காக இந்த மகாவலி அதிகார சபை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி பிற்பாடு கொக்கிளாய் முதல் செம்மலை வரை இருக்கின்ற 6 கிராம சேவகர் பிரிவுகளை அபகரிக்க முயற்சி எடுத்த போது எங்களுடைய தொடர் அழுத்தம் காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

மகாவலி என்பது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இனப்பரம்பலையும் செய்வதற்காக அரசாங்கத்தால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு

அந்த வகையில் தற்பொழுது  மகாவலி “J” வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் 7 கிராம அலுவலர் பிரிவுகளும் ,மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும், மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை  புதிய  வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது .

இவ்விடயத்தை எதிர்த்து நான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன் வைத்திருக்கிறேன். அதற்கு நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பதில் அளிப்பதாக கூறியிருக்கிறார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்  பாலியாறு, அந்தோனியார்புரம், ஆத்திமோட்டை, இலுப்பக்கடவை, கள்ளியடி ,கூராய், கோவில் குளம், காயா நகர் ,பெரிய மடு கிழக்கு, பெரிய மடு தெற்கு பள்ளமடு ,விடத்தல்தீவு கிழக்கு,விடத்தல் தீவு மேற்கு,விடத்தல் தீவு வடக்கு,விடத்தல்தீவு மத்தி ஆகிய கிராமங்களையும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவில்  அனிச்சங்குளம், பாரதி நகர் ,புகழேந்தி நகர் திருநகர் ,ஜோக புரம் மத்தி,ஜோக புரம் கிழக்கு,ஜோக புரம் மேற்கு கிராமங்களும் ,மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் அம்பாள் புரம், கரும்புள்ளையான் ,கொல்லி விலாங்குளம், மூன்று முறிப்பு,நெட்டாங்கண்டல்,கொட்டருத்த குளம், பாலிநகர், பாண்டியன் குளம், பொன் நகர், பூவரசங்குளம் ,செல்வபுரம் ,சீராட்டி குளம், சிவபுரம் வன்னி விளாங்குளம், விநாயகபுரம் ஆகிய 37 கிராம அலுவலர் பிரிவுகளையும் “J” வலயத்தின் ஊடாக   மகாவலி அதிகார சபையில் கீழ் கொண்டு வந்து இந்த நிலங்களில் இருக்கும் குளங்களின் கீழ் காணப்படுகின்ற வன இலாக திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கீழ் உள்ள காணிகளை அபகரித்து அதன் மூலம் சிங்கள மக்களுக்கு அதை நீண்ட கால குத்தகை  வழங்குவதோ அல்லது அந்த பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதுதான் மிக வேகமாக மகாவலி அதிகார சபை செய்யப்படுகின்றது.

மகாவலி L வலயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நிர்ணயம் செய்யப்பட்டது. இன்றைக்கு 35 வருடங்கள் கடந்தும் மகா வலி தண்ணீர் இன்னும் வரவில்லை.

மகாவலி தண்ணீர் அங்கு  வராமல் இருக்கும் போது அங்கு புதிய சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு சிங்கள மக்களும் குடியேற்றப்பட்டு மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இந்த திட்டம் என்பது தமிழர்களுடைய இன பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை இங்கு கொண்டுவருவதற்கும் தமிழர்களை இனரீதியாக இல்லாமல் செய்வதற்கு  இன அழிப்பின் ஒரு நீண்ட கால தந்திரமான செயல்பாடுதான் இந்த மகாவலி அதிகார சபையின் செயல்பாடு.

இதை முழுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். முழுமையாக எதிர்க்கின்றோம். இதை நடைமுறைப்படுத்த விடாமல் செய்வதற்கு பல முயற்சி செய்துள்ளேன். பாராளுமன்றத்தில் பிரேரணையை முன் வைத்துள்ளேன். அதையும் மீறி ஜனாதிபதியை  சந்திப்பதற்காக நான் அனுமதி கேட்டிருக்கின்றேன். அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துவேன்.

அதையும் மீறி மகாவலி “J” வலயம் மகாவலி அதிகார சபையினால் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டால் வெகுஜன போராட்டத்தின் ஊடாக மக்கள் போராட்டத்தின் ஊடாக முழுமையாக முல்லைத்தீவு , மன்னார் மக்கள் இணைந்ததை இத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

QR முறைப்படி அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு !

QR முறைப்படி எதிர் வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அளவுகள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிவித்தலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய முச்சக்கர வண்டி உற்பட அனைத்துவிதமான வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு அளவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர “தற்போது ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 7 லிட்டர் கொடுக்கப்படுகிறது. அதை 14 ஆக மாற்றுவோம் என்று நம்புகிறோம். முச்சக்கரவண்டிக்கான 7 லீற்றரை 14 ஆக மாற்றுவோம்.

பின்னர் மற்றவர்களுக்கு அதே வழியில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இவ்வாறு அடுத்தமாதம் அளவில் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தம் மற்றும் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்போம்” என தெரிவித்தார்.

கடத்தலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வி.ஐ.பி விமானத்தில் வெளிநாடு பறந்தார் !

தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வியாழக்கிழமை (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

நாடாளுமன்ற உறுப்பினர் இரவு 8 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வி.ஐ.பி பிரமுகருக்கான வழியாக நாட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாய் விமானத்தில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரை சுங்க அதிகாரிகள் பிரமுகர் ஓய்வறையில் வைத்து சோதனையிட்டவேளை 3.5 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய ரூபா 70 மில்லியன் பொருட்களுடன் பிடிபட்டார். பின்னர் அதே நாளில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.அத்துடன் 7.5 மில்லியன் பெறுமதியான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

“போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – அமைச்சர் மனுஷ நாணயக்கார

வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்  தெரிவித்தார்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமையவே தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் 80,000 தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களை ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றில் உள்வாங்கியுள்ளன.

எனினும் சட்ட திருத்தங்களின் ஊடாக ஒரேயொரு ஊழியரைக் கொண்டிருந்தாலும், அந்த நிறுவனமும் தமது தொழிலாளியை ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியில் உள்வாங்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும்.

மாறாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றைக் குறைப்பதோ அல்லது அவற்றை இரத்து செய்வதோ எமது நோக்கமல்ல.

ஓய்வு பெற்றதன் பின்னர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத்துக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தொழிலை பாதுகாப்பதற்கு பதிலாக தொழில் வாய்ப்புக்களை பாதுகாப்பதே எமது இலக்காகும். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தற்போதும் முறையான காப்புறுதி திட்டங்கள் இல்லை. எனவே அரச உத்தியோகத்தர்களைப் போன்றே தனியார் துறையினருக்கும், மருத்துவம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

தூய்மைப்படுத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் , கட்டட நிர்மாணப்பணியாளர்கள் , வீட்டுப் பணிப்பெண்கள் என அடிமட்டத்திலிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றில் உள்வாங்குவதற்காகவே தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனினும் இவ்வாறான சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்களின் சலுகைகள் , உரிமைகள் முடக்கப்படவுள்ளதாக சிலர் போலியான செய்திகளையும் , தகவல்களையும் வெளியிடுகின்றனர்.

அவ்வாறானவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்குமாறு தொழில் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வவுனியாவில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் அழிப்பு – அமைதிகாக்கும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் !

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் உழுந்து விதைத்தாலே வனவள அதிகாரிகள் தம்மை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரிடம் மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ் – வவுனியாவுக்கு திலீபன்!

இதே நேரம் அண்மையில் வவுனியாவின் கட்டையர் குளம் பகுதியில் 12 ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தடுக்க முற்பட்ட அப்பகுதி ஆசிரியர் ஒருவர் மீது காடழிப்புக்கு துணைபோன கிராமசேவகர் போலியான பிரச்சாரங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பியிருந்தார். அதே நேரம் குறித்த காடழிப்பிற்கு பின்னணியில்  வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும்,  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் அவர்களுடன் நெருக்கமானவர்களுக்குதொடர்பு இருப்பதாகவும் – இதனாலேயே பா.உ திலீபன் இந்த விடயத்தில் பொறுமை காப்பதாகவும் வவுனியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான போதும் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

“வடக்கு-கிழக்கில் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள். அவர்களின் நினைவுச்சின்னங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.” – விதுர விக்கிரமநாயக்க

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்பொருள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படுமென புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தொல்பொருளியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்படும் பகுதிகளில் பௌத்த அடையாளங்கள் நிறுவப்படுதல் மற்றும் தனியார் காணிகளில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கில் போர் நிலைமைகள் நீடித்தமையால் தொல்பொருள் பகுதிகள் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை.  தொல்பொருள் என்பது நாட்டின் மரபுரிமைகள் சார்ந்த விடயமாகும். அதற்கும் இன அடையாளங்களுக்கும் தொடர்பில்லை.

இந்நிலையில் நாம், வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற தொல்பொருளியல் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட அனைத்து அடையாளங்களும் சட்டத்திற்கு முரணானவையாகும்.

ஆகவே அவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைக் கோரியுள்ளேன் அந்த அறிக்கை கிடைத்ததும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குருந்தூர்மலை, வெடுக்குநாறி தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வந்தபின்னரே இறுதியான தீர்மானத்தினை எடுக்க முடியும்.

கிளிநொச்சி உருத்திரபுரம் கந்தசுவாமி கோவில், திருக்கோணேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருளியல் அடையாளங்கள் காணப்படுவதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சில இடங்களில் தொல்பொருளியல் பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட நிர்மாணங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவை தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன், வடக்கு-கிழக்கில் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள்.

அவர்களின் அடையாளங்களும் காணப்படுகின்றன. ஆகவே அந்த வரலாற்று தகவல்களையும் பாதுகாக்க வேண்டியது கடமையாகின்றது. அதுபற்றி யாரும் அச்சமடைய வேண்டியதில்லை என்றார்.