01

01

சபாலிங்கம் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனால் படுகொலையும் செய்யப்பட்டார் !

சபாலிங்கம் பிரபாகரனின் நண்பர் பிரபாகரனால் படுகொலையும் செய்யப்பட்டார் ! சபாலிங்கம் 30 ஆண்டுகள் நினைவு ! மற்றும் பாரிஸ் படுகொலைகள் !

 

இது தொடர்பில் தேசம் திரையில் கலந்துரையாடப்பட்ட காணொளியை காண  கீழேயுள்ள Link ஐ Clickசெய்யவும்.

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் – கண்டுகொள்ளாத மோடி அரசு!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். பா.ஜனதா எம்.பி.யான அவர் 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு கீழுள்ள வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக டெல்லி போலீசாரிடம் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் காலம் தாழ்த்தியதால் மல்யுத்த நட்சத்திரங்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பஜ்ரங்புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த 23-ந் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த நட்சத்திரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மற்ற விளையாட்டு பிரபலங்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு செய்யாதது தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டிய 7 மல்யுத்த வீராங்கனைகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் அவர் மீது டெல்லி போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் குடிநீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையே மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டம் தீவிர மடைவதால் பிரிஜ் பூஷன் சிங்கை விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

இதே போல அவர் மீது குற்றம் சுமத்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் வாக்குமூலம் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அனைத்து தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங் தான் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என்றும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

2261வது நாட்கள் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டீம் !

2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மே நாளான இன்று அதற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளை இல்லாததால் குடும்பத் தகராறு – மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட வைத்தியர் !

தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண், ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணமாகி சில காலம் குழந்தை பேறு இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

 

இந்தநிலையில், சந்தேகநபரான வைத்தியர், அடிக்கடி தகராறு செய்யும் தமது மனைவியை கொல்லும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

மேலும், உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க மனைவியின் உடலில் இன்சுலின் ஊசியை வலுக்கட்டாயமாக செலுத்தி அவரை கொல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மயக்கமடைந்த மனைவி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய, சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமென்றால் தமிழ் கட்சிகள் பாராளுமன்ற பொறிமுறைக்குள் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படாது தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (மே1) காலை 10 மணிக்கு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இடம்பெற்றது.

கட்சி சார்பின்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

எனினும் கட்சி ஆதரவாளர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவரால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு சற்று முன்னர் இக் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அந்த விசேட அறிவிப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

எனது முயற்சி அரசியல் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது.

அதனை அமுல்படுத்தி 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே எனது இலக்கு மொத்த தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு 6 – 7 சதவீதம் என்ற அளவில் விரைவாகக் கொண்டு வரக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

2048 இல் நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்க வேண்டும்.

குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்காது 2048 ஐ பற்றி சிந்திக்க வேண்டும். மீண்டும் பாராளுமன்றத்துக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.

நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வருட இறுதிக்குள் இது குறித்து இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இனப்பிரச்சினை விடயத்தில் தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படுமாறு அழைப்பு விடுகின்றேன் என்றார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தில் மட்டும் எகிறிய தற்கொலைகள் – பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள் இதேவேளை, 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும் , யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 59 பேரும் உயிர் மாய்த்துள்ளனர்.

 

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான கால பகுதியில் 54 பேர் உயிர் மாய்த்துள்ளனர். அவர்களில் இருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 39 பேரும் , யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 15 பேரும் உயிர் மாய்த்துள்ளனர்.

அதேவேளை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 பேர் உயிர் மாய்க்க முற்பட்ட நிலையில் , உறவினர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது உயிரை மாய்க்க முற்படுவது தண்டனைக்கு உரிய குற்றம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.’ – பந்துல குணவர்தன

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய தினம்(30) அனுராதபுரத்திற்கு வந்த அமைச்சரிடம் செய்தியாளர்கள் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,

‘தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவது தான் தமிழ் கட்சியினரின் அன்றாட தொழில். இதன் ஊடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். ஹர்த்தால், போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது.

தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களை தமிழ் கட்சியினர் நடத்துகின்றனர். ஆனால், அவர்களின் ஆட்டத்திற்கு ஆட முடியாது’ – என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார் கழுவுதல், சேர்விஸ் பகுதிகள், கடைகள் மற்றும் ஹோட்டல்களுடன் கூடிய அமெரிக்க எரிபொருள் நிலையங்கள் இலங்கையில்!

இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கத் திட்டமிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், கார் கழுவுதல், சேர்விஸ் பகுதிகள், கடைகள் மற்றும் ஹோட்டல்களுடன் கூடிய எரிபொருள் நிலையங்களை அமைக்க முன்மொழிந்துள்ளன.

 

சீனாவின் சினோபெக் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ்-ஷெல் ஆகிய இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற அண்மையை கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .

 

இந்த முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுகிறது, இது முக்கியமாக வெளியூர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு பொருந்தும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

 

நடைமுறையில் உள்ள QR கோட்டா முறையின் கீழ் எரிபொருள் வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது

 

ஒரு எரிபொருள் நிலையத்தின் சாதாரண பரப்பளவு சுமார் 40 பேர்ச் ஆகும், ஆனால் அத்தகைய ஒவ்வொரு நிலையத்திற்கும் சுமார் 1 ½ ஏக்கர் வழங்கப்பட வேண்டும். இந்தத் திட்டம் பெரும்பாலும் வெளியூர் எரிபொருள் நிலையங்களுக்குப் பொருந்தும். கொழும்பில், காணி கிடைக்கப்பெறும் அடிப்படையில் அது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமையும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த மாத தொடக்கத்தில் இரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தொழிலாளர்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பான 23,000 வழக்குகள் நிலுவையில்!

தொழிலாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பல்வேறு அநீதிகள் தொடர்பாக தாக்கல் செய்த இருபத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் சில வழக்குகள் ஐந்து முதல் பத்து வருடங்கள் பழமையானவை என்றும்
தொழிலாளர் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

மற்ற வழக்குகளுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் முன்னுரிமை கொடுப்பதால் தொழிலாளர் வழக்குகளில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாகவே 2022ஆம் ஆண்டு தொழில் தகராறு சட்டத்தில் திருத்தங்கள் ஒன்றாக நிறைவேற்றப்பட்டன என்றார்.
இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும், இந்த வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தொழிலாளர் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் மற்றும் அரச ஊழியர்களிடமிருந்து உரிமைப் பலன்களைப் பெறாதது தொடர்பாக தொழிலாளர் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்ட 4,596 வழக்குகள் கடந்த ஆண்டு செயலிழந்ததாக கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்குகளில் சுமார் முப்பது வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்குகள் பலவும், செயலற்ற வழக்குகளின் நிதி மதிப்பு 1.74 பில்லியன் ரூபா என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த 4596 வழக்குகள் தொடர்பாக 2325 திறந்த வாரண்டுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாய் வெளிநாட்டில் – வவுனியாவில் 6 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை !

வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் இன்று இடம்பெற்றதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்றார். தந்தை இல்லை.

இந்தநிலையில், பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமியை அவரின் தாயார் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதனால் வீட்டின் உரிமையாளர்களால் பூவரசன்குளம் வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் சிறுமி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் மகனான குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.