02

02

தனியார் மயமாகும் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் ஓய்வூதிய நிதிகளை நிர்வகிப்பதற்கு புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் புதிய மின்சார ஆணைக்குழுவானது ”PUCSL”க்கு பதிலாக மாற்றப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

செவ்வாய் கிரகத்தில் நீர் – சீனா வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்!

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.

 

இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை. உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காலநிலை மாற்றங்களால் அது உறைந்து, அவற்றின் பெரும்பாலான பகுதி கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாய் கிரகத்தில் குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை !

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலி – கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது. மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கு 100 % அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சில மீம்கள் வைரலாகி வருகின்றன.

 

 

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் செயற்பட தமிழ் தலைவர்கள் தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில்

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்க அனுமதியுடன் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 400 வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை!

பயிற்சி பெறுவதற்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தீர்வு தருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறி ஒருவருடமாகிறது. இன்னும் தீர்வு இல்லை” – மனோகணேசன் விசனம் !!

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகிறீர்கள். இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள். “வோக் யுவர் டோக் மிஸ்டர் பிரசிடென்ட்!”. (பேச்சின்படி நடந்து காட்டுங்கள்!) என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விளித்து கூறியுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேதின செய்தி உரை தொடர்பில் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

 

இலங்கையில் இன்று இருக்கும் பெரும்பான்மை கட்சி தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சனை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்தவர், ரணில் விக்கிரமசிங்க. அதில் சந்தேகம் இல்லை. ஏனையோரை பற்றி சந்தேகங்கள் இருக்கின்றன.

 

எனினும் ஜனாதிபதியாக விக்கிரமசிங்க நியமனம் பெற்ற பின் பலமுறை இந்த கால அட்டவணைக்குள் இனப்பிரச்சினை தீர்வு என பலமுறை கூறிவிட்டார். தமிழ் மக்களுக்கும் இந்த வசனம் பரிச்சயமானதாகும்.

 

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13ஐ பற்றி பேசிய போது அதுவரை ஒளிந்திருந்த ஆமதுருக்கள் தெருவுக்கு வந்தார்கள். அத்துடன் அது நின்று போய் விட்டது. இன்று அரகல போராட்டத்துக்கு பிறகு, கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, சர்வதேச சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்பட்ட பிறகு, ஜனாதிபதி விக்கிரமசிங்க, இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்து பேச முன் சிங்கள கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றி பேச வேண்டும். சிங்கள மக்களை விளித்து நேரடியாக கூற வேண்டும். இனிமேலும் இதை தள்ளி போட முடியாது என எடுத்து கூற வேண்டும். சர்வதேச சமூகமும்அதற்கு சாதகமாக நடந்துகொள்ளும் என நான் அறிகிறேன்.

 

தற்போது நிலைமையை பாருங்கள். “இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்றெல்லாம் கூறுவதற்கு முன், வடக்கு கிழக்கில் காணி பறிபோகிறது. தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகி விட்டது. சிவனை தூக்கி கடாசி விட்டு, ஆமதுருக்கள், இராணுவ துணையுடன், புத்தனை பிரதிஷ்டை செய்கிறர்கள். காவி உடையில் அரசியல் செய்யும் ஆமதுருக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு இது தான் வேளை. இல்லாவிட்டால் கடும் பதட்ட நிலைமை வடக்கு கிழக்கில் விரைவில் உருவாகும்.

 

மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாக தோட்ட காணிகளை பிடிக்கிறான். ஆனால், 200 வருட வரலாற்றை தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை. மலையக தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னை “தேயிலை கொழுந்து பறிக்க வந்தவன்” என்கிறார்கள். “தோட்டகாட்டான்” என்கிறார்கள். இது மலைநாட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதட்ட நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகிறது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இரண்டு கோடி மக்கள் தொகையுடைய இலங்கையில் மூன்று கோடி தொலைபேசிகள் பாவனையில் !

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மூன்று கோடியே பதின்மூன்று இலட்சத்து எண்பத்தி இரண்டாயிரம் (31,382,000) தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே இருபத்துதொரு இலட்சத்து எண்பத்தாயிரம் .

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு (100) பேருக்கு 12 என்ற வீதத்தில் லேண்ட்லைன் தொலைபேசிகள் பாவனையில் உள்ளதாகவும் மொபைல் போன்கள் 100 பேருக்கு 142 போன்கள் என்ற வீதத்தில் பாவனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது .

இணைய வசதிகள் நூறு பேருக்கு 97.7. என்ற அடிப்படையில் உள்ளது . கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச் சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

“நாம் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறாமல் இருந்ததாலேயே வீழ்த்தப்பட்டோம்.” – மேதின உரையில் மகிந்த ராஜபக்ச!

“நாம் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக மாறாமல் இருந்ததாலேயே வீழ்த்தப்பட்டோம்.” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொது மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில்;

 

“… நண்பர்களே, சிலர் எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் அது அவர்களின் அரசியல் பிரச்சாரம். தேவைப்படும்போது சரியான முடிவுகளை எடுப்போம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

நாம் பொருளாதாரத்தை திட்டமிடும்போது, ​​உழைக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாங்கள் செய்கிறோம்.. அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுடன் இருந்துகொண்டு நாட்டின் நலனுக்காக எங்களை ஆட்சிக்கு கொண்டுவர தேவையான தியாகங்களை செய்திருக்கிறீர்கள்…

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உழைக்கவில்லை. அந்த நேரத்தில், தொழிலாளர் இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய சக்தியாக இருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்றைய தொழிலாளர் தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தை நாட்டை அராஜகத்திற்கு வழிநடத்தியதில்லை.

நாம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக மாறாமல், உள்ளுர் சிந்தனையின்படி வேலை செய்யப் போனதால், பல்வேறு அரசு சாரா அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சதி செய்யப்பட்டது. எங்களின் உடைமைகளை மட்டுமல்ல, உயிரையும் சேதப்படுத்த நினைத்தனர்.

மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றி மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் அரசியல் அனுபவம் எமக்கும் எமது கட்சிக்கும் இருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.

 

மேலும், எந்த நேரத்திலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், அமைப்பு பலத்துடன் எழ முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, அரசியலை எவ்வளவு விமர்சித்தாலும் சேறு அரசியலில் வீழாதீர்கள்.

கடந்த காலங்களில் நாம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மக்கள் அங்கீகரித்தார்கள். நாம் இப்போது நாட்டை பலப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குங்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்காத அரசாங்கம் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பிற்கு முரணாண சிலவிடயங்களை மாற்றவேண்டும் அல்லது புதிய சட்டமூலத்தை உருவாக்கவேண்டும் என பௌத்த மகாநாயக்கர்கள் உட்பட  பலதரப்பினர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோள்களிற்கு இதுவரை பதில் வழங்கப்படாதமை குறித்து ஒமல்பே சோபித தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி பௌத்தமட பீடாதிபதிகளிற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ள ஒமல்பே சோபித தேரர்   பௌத்தமத பீடாதிபதிகள் மாத்திரமின்றி சிவில் சமூகத்தினர் உட்பட பல தரப்பினர் குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் ஜனாதிபதி உட்பட உரிய தரப்பினரிடம் அதனை தெரிவித்துள்ளனர் எனினும் இதற்கு அதிகாரிகள் பதிலளிக்காதது கவலையளிக்கும் விடயம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்டமூலம்  பொலிஸார் பயங்கரவாதத்திற்கு தங்கள் விருப்பத்தின்படி அர்த்தம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள ஒமல்பே சோபிததேரர் இதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.