04

04

நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி !

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சாட்சிக் கூண்டில் ஏறிய சந்தேக நபர் ஒருவர் தனது கழுத்தை பிளேற்றினால் அறுத்து தற்கொலைக்கு செய்ய முயற்சித்த நிலையில் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (04) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறையைச்சேர்ந்த யோகதாசன் லக்ஸன் வயது (25) என்பவர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவதினமான இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றிற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர்.

 

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது சந்தேகநபர் நீதிமன்ற கூட்டில் எறிய நிலையில் தன்வசம் மறைத்து வைத்திருந்த சேவிங் பிளேட்டினை திடீரென எடுத்து தற்கொலை செய்வதற்காக நீதவான் முன்னிலையில் தனது கழுத்தை அறுத்ததை அடுத்து படுகாயமடைந்துள்ளார்.

 

இதனை அடுத்து அங்கிருந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு தற்கொலை செய்ய முயற்சித்த வரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 

குறித்த சந்தேக நபர் கடந்த 2021 ஜூன் மாதம் தனது மனைவியாரின் தந்தையையும் தன் குழந்தையையும் கொலை செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் எனவும் இவரின் குழந்தை மரணித்துப்போன நிலையில், இவர் வழக்கிலிருந்து நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகள் ஏற்றுமதி !

நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் நிகழ்வு நேற்றைய தினம் (3) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

யாழ் குடாநாட்டில் கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கதலி வாழைப்பழங்கள் நிலாவரையில் உள்ள வாழைப்பழம் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து நேரடியாக துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வாழைப்பழங்கள் துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் நாட்டுக்கு அந்நிய செலாவாணி கிடைப்பதோடு உள்ளூர் விவசாயிகளுக்கும் பெரிதும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 10 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் வாரந்தோறும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வாழைக்குலை ஏற்றுமதியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இத்திட்டமானது அனுராதபுரம் ராஜாங்கனை வாழைப்பழ ஏற்றுமதி திட்டத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் விகாரை அமைப்புக்கு எதிராக போராடிய ஐவர் கைது !

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களில் மூன்று பேர் நேற்றிரவும், இன்று காலை மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

 

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு மாவட்ட அபிவிருத்தி குழு மறுப்பு !

பூநகரி கௌதாரிமுனையில் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட அபிவிருத்திக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அதற்கான அனுமதிக்காக கோரப்பட்ட போதும் முழுமையான சாதக பாதக நிலை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தாம் இதுவரை அறியவில்லை எனவும், இன்றே அறிய முடிந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிறிதரன், கஜேந்திரன் இது தொடர்பில் ஆராய்ந்தே அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் அதானி குடும்பத்தின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், மன்னாரில் மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பில் ஆராய்ந்தே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் விபரங்களை பெற்று தனியாக கூடி ஆராய்ந்த பின்பே அனுமதி வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர். இதன்போது, அதானி நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்ல டிரோன் தாக்குதல் !

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஜனாதிபதி மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் ஜனாதிபதி மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க கடவுளால் கூட முடியாது – விமல் வீரவங்ச

நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க புனிதமான கடவுளால் கூட முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச புறொய்லர் கோழி என்றும் அவரது தந்தை மகிந்த ராஜபக்ச அரசியலின் கிராமத்துக் கோழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ச குடும்பத்தில் எவரும் இனிவரும் காலத்தில் நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்படமாட்டார்கள் எனினும் அவர்கள் அரசியலில் ஏதாவது ஒரு மட்டத்தில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மகிந்த ராஜபக்ச அரச தலைமைத்துவத்தில் இருந்திருந்தால் அதனை சரியாக நிர்வகித்திருப்பார் எனவும் பொருளாதாரம் இவ்வளவு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்காது எனவும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.