05

05

“கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை” – வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் விரைவில்!

வடக்கு மாகாணத்தில் மூன்று இடங்களில் முதலீட்டு வலயங்கள் அமைப்பதற்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய அமைச்சரவைப் பத்திரங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிநிதி, நேற்று(04.05.2023) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம்.

அங்கே முதலீட்டு வலயம் அமைக்க உத்தேசித்துள்ளோம். கிளிநொச்சியில் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலும், மாங்குளத்தில் 400 ஏக்கரிலும் முதலீட்டு வலயங்கள் அமைக்க உத்தேசித்துள்ளோம்”என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்து உலக சுகாதார மையம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.

“எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்,” என்று உலக சுகாதார மையம் டுவிட் செய்துள்ளது.

யாழில் கத்தியை காட்டி பொலிசாரை அச்சுறுத்திய ஆவா இளைஞர்கள் சரணடைவு !

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திவிட்டு தப்பித்த ஆவா வினோதன் மற்றும் மல்லாகம் ரஞ்சித் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

உரும்பிராய் சந்நியில் கடந்த வாரம் வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டனர்.

அதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்தனர்.

அவர்கள் இருவரும் நேற்று தமது சட்டத்தரணி விசுவலிங்கம் திருக்குமரன் ஊடாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவர் சார்பிலும் பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்ட போதும் அதனை நிராகரித்த மன்று இருவரையும் வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் !

முன்னறிவிப்பு இன்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது.

ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் காடழிப்பை அம்பலப்படுத்திய ஆசிரியர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பிய கிராமசேவகர்!

காடழிப்பை வெளிக் கொண்டு வந்த ஆசிரியருக்கு எதிராக போலி முகநூல் மூலம் அவதூறை ஏற்படுத்தியது கிராம சேவகர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் வவுனியா காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவிற்கு சொந்தமான பகுதியில், கிராம அலுவலர் உட்பட்ட சிலர் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனை அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தடுத்து நிறுத்தியதுடன், குறித்த விடயம் தொடர்பில் அரச அதிபர், வவுனியா பிரதேச செயலாளார், வனஇலாகா திணைக்களம், காவல்துறையினர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதுடன் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.

அதனையடுத்து, கிராம அபிவிருத்திச் சங்கம் சார்பாக செயற்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கிராம அலுவலர் ஒருவர் தொலை பேசியில் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதுமட்டுமன்றி, குறித்த ஆசிரியருக்கு எதிராக போலி முகநூல்களில் அவதூறும் பரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர் வவுனியா தொழில்நுட்ப குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், கொழுப்பு இலத்திரனியல் குற்றவியல் பிரிவுக்கும் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தொழில்நுட்ப குற்றத்தடுத்து பிரிவு காவல்துறை குறித்த போலி முகநூல்கள் கிராம அலுவலர் ஒருவருடையது எனத் தெரிவித்துள்ளதுடன், அவரை அழைத்து வாக்கு மூலத்தையும் பெற்றுள்ளனர்.

அதேவேளை, இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வனஇலாகா திணைக்களத்தாலும் கிராம அலுவலருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், குறித்த அலுவலர் தொடர்பில் பிரதேச செயலாளர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதே நேரம் குறித்த ஆசிரியர் திருமகன் என்பவர் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளை கண்டித்து குறித்த ஆசிரியர் கல்வி கற்பிக்கும் வவுனியா – தரணிக்குளம் கணேஷ்வரா வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பஷில் ராஜபக்ஷ!

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை இல்லை என்ற தவறான கருத்தை மே தின கூட்டத்துடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் சார்பாகவே செயற்படுகிறார்கள்.

மே தின கூட்டம் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிரதான வீதியை மரித்து மேடை அமைத்து கூட்டத்தை நடத்த எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் உறுதியாக குறிப்பிட்ட பின்னணியில், ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு நடுவீதியில் மேடையமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்கும் வகையில் மக்களை தவறாக வழி நடத்திய அரசியல் கட்சிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்தோம்.

இதுவரை இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய அரசியல் கட்சி பிரநிதிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இந்த அரசியல் கட்சி முறையற்ற வகையில் செயற்படும் போது அதிகாரம் கிடைத்து விட்டால் இவர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் எமது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியல் தீர்மானங்களை எடுத்து முன்னோக்கிச் செல்வோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எமது கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.

அவர் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவாக இருக்கலாம். ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.

பௌத்த ஆலயங்களில் அதிகரிக்கும் சிறுவர் பிக்குகள் மீதான துஷ்பிரயோகங்கள் – தேசிய சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை அதிருப்தி!

இளம் பிக்குகள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்குமாறு தேசிய சிறுவர் துஸ்பிரயோக அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளிற்கு எதிரான தாக்குதல்கள் வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோகங்கள் வன்முறைகள் அதிகரித்துவருவது குறித்து சுட்டிக்காட்டியுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு மதகுருமார் நடவடிக்கை எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பௌத்த ஆலயங்களில் இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குற்றவியல் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய சிறுவர் அதிகாரசபை என்ற அடிப்படையில் சிறுவர்களிற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரசபையின் தலைவர் பாதிக்கப்பட்டவர் பௌத்தமகுருவா அல்லது சாதாரண நபராக என நாங்கள் பார்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டது சிறுவர் என்றால் நாங்கள்அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புசல்லாவையில் 8 வயது பிக்குவை 14-15 வயதுடைய மூன்று பிக்குகள் சித்திரவதை செய்துள்ளனர் அவர்கள் பாலியல் ரீதியில் எந்த குற்றமும் இழைக்கவில்லை,ஆனால் தாக்குதலை மேற்கொண்டு மோசமான சித்திரவதையில் ஈடுபட்டுள்ளனர் இது குற்றவியல் நடவடிக்கை இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் MOP உர இருப்புகளை வழங்கும் ரஷ்யா !

இலங்கையுடனான தனது உறவை புதுப்பித்துள்ள ரஷ்யா, இலங்கை மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (MOP) விவசாயிகளுக்கு யூரியா மற்றும் மியூரியட் ஒப் பொட்டாஷ் உர இருப்புக்களை வழங்க இணங்கியுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகாரியனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​அடுத்த பெரும் போகத்திற்கு முன்னதாக உள்ளூர் விவசாயிகளுக்கு யூரியா மற்றும் MOP உர இருப்புகளை வழங்குவதற்கான நடைமுறைகளை விரைந்து நிறைவு செய்ய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

சட்டவிரோதமான விகாரையை அகற்று – தையிட்டியில் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளான இன்று காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது.

மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14 குடும்பங்களுக்கு சொந்தமான 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு, தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தற்போது இறுதி நாள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.